சிறப்புக்கட்டுரை: ‘ஆம்பளை’ என்ற வார்த்தை:

பாலின அடையாளமா, தகுதி அடையாளமா?

ட்டுரையாளர்: அ. குமரேசன்

 

மனதில் ஒரு இறுக்கம் அல்லது ஏக்கம் அல்லது இழப்புணர்வு அல்லது இயலாமையுணர்வு என்று ஏற்படுகிறபோதெல்லாம் நான் தனிமையான, அமைதியான இடம் நாடிச் செல்வதில்லை. கூட்டமும் பரபரப்பும் இரைச்சலும் மிகுந்த இடங்களே எனக்கு மாற்று. தொடர்வண்டி நிலைய நடைமேடை, பேருந்து நிறுத்தம், வணிக வளாகம், விளையாட்டு மைதானம், தேநீர்க்கடை உள்ளிட்ட என்று கிளம்பிவிடுவேன். போகிற வழியில் எங்காவது ஏதாவது முழக்கப் போராட்டம், பொதுக்கூட்டம் என நடந்துகொண்டிருந்தால், அறிமுகமான அமைப்புகள் என்றால் நானும் கலந்துகொள்வேன், இல்லையெனில் ஓரமாய் நின்று கோரிக்கைகளையும் கருத்துகளையும் கேட்டுக்கொண்டு திரும்புவேன். மனதில் ஏறியிருந்த சுமை இறங்கிவிட்டதாக உணர்வேன். ஆனால், சில நேரங்களில் புதிய சுமை குடிபுகுந்திருக்கும்.

நேற்று சென்றிருந்த ஒரு பூங்காவிலிருந்து திரும்புகையில் இப்படி ஒரு புதிய சுமையோடு வர நேரிடும் என்று நிச்சயமாக எதிர்பார்க்கவில்லை. அதுவும் நான் எப்போதும் லயித்துப்போகிற விளையாட்டுச் சிறுவர்களிடமிருந்தே அந்த அந்தச் சுமை வரும் என்று கண்டிப்பாக ஊகிக்கவில்லை.

வட்ட வடிவில் ஏணிக் கூண்டு போல குறுக்கே கம்பிகளோடு இருக்குமே அதில் அவர்கள் ஏறியும் இறங்கியும் தலைகீழாய்த் தொங்கியும் “ட” வடிவத்தில் உடலை வளைத்தும் திறன்களை வெளிப்படுத்திக்கொண்டிருந்தார்கள். அவர்களுடைய வயது 11 அல்லது 12  என்ற அளவிலேயே இருக்கும். ரசனையோடும் நம்மால் இப்படியெல்லாம் முடியுமா என்ற ‘லைட்டான’ பொறாமையோடும் பார்த்துக்கொண்டிருந்தேன்.

சவால்!

கூண்டின் உச்சிக்குப் போய் அங்கிருந்து பாம்பு போலக் கம்பிகளில் உடலை நெளித்து இறங்கிய ஒரு பையன் இன்னொரு பையனைப் பார்த்து சவால் விடுவது போலச் சொன்ன வார்த்தைகள் இவை: “நீயொரு ஆம்பளையா இருந்தா இப்ப நான் செஞ்சது மாதிரி செஞ்சு காட்டு பார்க்கலாம்.”

அந்தப் பையனால் அப்படிச் செய்ய முடியவில்லை. சவாலை ஏற்றுக்கொண்டு அதே போலச் செய்ய முயன்ற இன்னொரு சிறுவனும் தோல்வியடைய, முதல் சிறுவனிடமிருந்து இளக்காரத்தோடு இந்த வார்த்தைகள் வந்தன: “அப்படின்னா நீங்க ரெண்டு பேரும் ஆம்பளையில்ல…”

சட்டென அந்த விளையாட்டுச் சூழல் மாறியது. அந்த இரண்டு சிறுவர்களும், “நாங்களாவது ட்ரை பண்ணினோம்ல… இவனுங்க அது கூட செய்யலைல்ல… அப்படின்னா இவனுங்கதான் ஆம்பளையில்ல…” என்றார்கள்.

அவ்வளவுதான் அங்கே ஒரு சிறு போர்க்களமே உருவானது. வசவுச் சொற்களில் தொடங்கியது, கைகலப்பு வரையில் போனது. சுற்றியிருந்தவர்கள் தலையிட்டுப் பிரித்துவிட்டோம். பூங்காப் பொறுப்பாளர், “போங்கடா வீட்டுக்கு” என்று அடிக்காத குறையாக அவர்களை விரட்டிவிட்டார்.

தலைமுறை தலைமுறையாக

இந்த வயதிலேயே “ஆம்பளை” என்பது வெறும் பாலின அடையாளச் சொல் என்பதற்கு மாறாக, அது ஒரு தகுதி அடையாளச் சொல் என்ற எண்ணம் அந்தச் சிறுவர்கள் மனதில் பதிந்திருக்கிறதே என்ற எண்ணச் சுமை என் மனதில் குடியேறியிருந்தது. இது ஏதோ இந்த நான்கைந்து சிறுவர்களின் சொற்கள் அல்ல. பெரும்பாலான சிறுவர்களது பிரதிநிதிகளே இவர்கள். சமுதாயத்தில் வளரும் தலைமுறையினர் மனங்களில் வளர்ந்த தலைமுறையினர் (?) விதைத்து வளர்த்துவிட்டிருக்கிற சிந்தனை இது.

குடும்பங்கள் தொடங்கி, பள்ளிகள், பணியிடங்கள், பொதுவெளிகள் என எங்கும் பேச்சால், செயலால் ஆம்பளைத் தனம் என்பது பற்றிய கருத்தாக்கம் அன்றாடம் வளர்க்கப்படுகிறது. திரைப்படக் கதாநாயகன் ஒரு ஆம்பளையாகத்தான் அநீதிகளைத் தட்டிக் கேட்க சீறி எழுவாரேயன்றி நியாய உணர்வுள்ள மனிதராகப் புறப்பட மாட்டார். “நீ ஆம்பளையா இருந்தா என் மேல கை வைச்சுப் பாருடா”என்று படக்கதையில் வரும் எதிரியால் உசுப்பிவிடப்பட்டும் கிளம்புவார்.

ஊரில் நடக்கும் தெருச்சண்டைகளில் இவ்வாறு உசுப்ப்பிவிடுவதற்கான கூடுதல் வார்த்தைகளாக, “நீயெல்லாம் ஒரு தகப்பனுக்குப் பிறந்த ஆம்பளையாயிருந்தா…” என்று சட்டி நெருப்பில் சாம்பிராணி போடப்படும். பெண்ணைச் சிறுமைப்படுத்துகிறார்களே, தேவையின்றித் தாயை வம்புக்கிழுக்கிறார்களே என்ற சீற்றத்திற்கு மாறாக, தன் தாய் பத்தினி என்று உலகறியச் செய்வதற்காக அந்த நெருப்பில் குதிப்பார்கள். அதே வேளையில், பதவி நிலை, பண விலை, மோக வலை என்ற பின்னணிகளோடு கட்டாயப்படுத்தியோ ஒப்புதலுடனோ பல பெண்களைக் கட்டிலில் கிடத்துகிறவர்களின் “ஆம்பளைத்தனம்” வியப்போடு பார்க்கப்படும்.

பாலியல் வலிமைக்கான அடையாளமாக மட்டுமல்லாமல் மற்ற செயல்பாடுகளோடும் இந்த ஆம்பளைத்தனம் புகுத்தப்பட்டிருக்கிறது. குழந்தைகளுக்கான கடைகளுக்குச் செல்கிறபோது, சிறார் தொலைக்காட்சிக் கதைகளின் நாயகர்கள் கையாள்வது போன்ற பிளாஸ்டிக் துப்பாக்கிகள், கிரிக்கெட் மட்டைகள் போன்றவை ஆண் குழந்தைக்கும், பாப்பா பொம்மை, புசுபுசு கரடி பொம்மை போன்றவை பெண் குழந்தைகளுக்கும் என்று பிரித்துதானே வாங்கப்படுகிறது. கடையில் தொங்கவிடப்பட்டுள்ளவற்றில், சமையல் எரிவாயு அடுப்பும் பாத்திரங்களும் உள்ள உறையைப் பையன் தேர்ந்தெடுத்தால், “அய்யய்யே, அதெல்லாம் கேர்ள்ஸ் விளையாடுறதுக்குப்பா,” என்று அதைக் கைப்பற்றி மறுபடியும் தொங்கவிடாத பெற்றோர்கள் மிகக் குறைவுதான்.  இப்படியாகப் “பொம்பளைத்தனம்” என்பதற்கான இலக்கண வகுப்பும் தொடங்கிவிடுகிறது.

மாற்றப்பட்ட பாடப்புத்தகப் படம்

தொடக்கப்பள்ளிப் பாடப்புத்தகத்தில், ‘என் குடும்பம்’ என்ற தலைப்பில் அப்பா நாற்காலியில் சாய்ந்து பத்திரிகை படித்துக்கொண்டிருக்க, அம்மா சமையல் செய்துகொண்டிருக்க, அண்ணன் பந்து விளையாடிக்கொண்டிருக்க, தங்கை தரை பெருக்கிக்கொண்டிருக்கிற படம் தொடக்கத்திலிருந்தே பல ஆண்டுகளாக இருந்துவந்தது. மாதர் இயக்கங்களின் தொடர்ச்சியான போராட்டத்தின் பலனாக அந்தப் படம் மாற்றப்பட்டது. இப்போது கூட, பெண் குழந்தைகள் எப்படி உடை உடுத்த வேண்டும் என்ற அறிவுரை சமச்சீர் கல்வித்திட்டப் பாடநூலில் இருந்து வந்தது அண்மையில் அண்மையில்தான் சுட்டிக்காட்டப்பட்டு, வரும் கல்வியாண்டில் அந்தக் குறிப்பு அகற்றப்படும் என்று பள்ளிக்கல்வித்துறையால் உறுதியளிக்கப்பட்டிருக்கிறது.

இவ்வாறு ஆம்பளைத்தனம், பொம்பளைத்தனம் என்று பாகுபடுத்தியதிலிருந்தே இன்றைக்கும் பல்வேறு துறைகளில் பெண்களுக்கான வாய்ப்புகளுக்குக் கதவடைக்கப்பட்டிருக்கிறது. ராணுவத்தின் முப்படைகளிலும் களத்தில் நேரடியாக ஆயுதங்களோடு இறங்குகிற வீரர்களாக பெண்கள் நியமிக்கப்படுவது இன்னமும் முழுமையாக செயல்வடிவத்திற்கு வரவில்லை என்பது ஒன்றே போதும் இந்த நிலைமைக்குச் சாட்சியமளிக்க. அரசியலில் உயரம் தொட்ட பெண்கள் எடுக்கிற துணிச்சலான நடவடிக்கைகளைப் பாராட்டுகிறபோது கூட, “ஆம்பளை மாதிரிச் செயல்படுறாங்க” என்றுதான் மாலை சூட்டப்படுகிறது.

 

இவ்வளவு ஏன், காஷ்மீரின் கத்துவாவில் முஸ்லிம் நாடோடி சமூகத்தைச் சேர்ந்த சிறுமி ஆசிஃபா, மதப்பகைமையோடு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றம் சாட்டப்பட்டோர் தரப்பில் வாதாடுகிற வழக்குரைஞர், இந்த வழககை விசாரிக்க நியமிக்கப்பட்டுள்ள அதிகாரி ஒரு பெண், அவருக்கு என்ன தெரியும் என்று கேட்டிருக்கிறார். இதில் மதவெறி ஆணவத்தோடு ஆம்பளைத்தன அகம்பாவமும் கலந்திருக்கிறதல்லவா? பல்வேறு தரப்புகளிலிருந்தும் அவருக்குக் கடும் கண்டனங்கள் புறப்பட்டுள்ளன.

ஒரு நம்பிக்கைச் செய்தி

மாற்றத்திற்கான சுட்டிக்காட்டுகிற முயற்சிகளும் தட்டிக்கேட்கிற எழுச்சிகளும் பள்ளிச் சுவர்களையும் பாடப்புத்தக அட்டைகளையும் தாண்டி வெளியே இன்னும் பரவலாக, இன்னும் வலுவாக, இன்னும் தீவிரமாக வேர்கொள்ள வேண்டியிருக்கிறது. அந்த வகையில் அண்மையில் பெண்களுக்கான சம உரிமை உறுதிப்படுத்தப்பட்டிருப்பதில் மிகப் பின்தங்கிய மாநிலமான ஹரியானாவிலிருந்து வந்துள்ள ஒரு செய்தி, மனச்சுமையைக் குறைப்பதாக உள்ளது.

அங்கே சோனிபட் மாவட்டத்தின் இஷாபூர் கேரி என்ற ஊரில் கடந்த ஆண்டு டிசம்பர்ல் மூன்று இளம் பெண்கள் தங்கள் காதலர்களோடு ஊரைவிட்டு வெளியேறினார்கள் (‘லோக்கல் பாஷையில் சொல்வதானால் ‘ஓடிப்போனார்கள்’). அதைத் தொடர்ந்து அந்த ஊராட்சித் தலைவர் ஒரு உத்தரவு போட்டார். “பெண் குழந்தைகள் மொபைல் போன் பயன்படுத்தக்கூடாது, ஜீன்ஸ் அணியக் கூடாது, டூ வீலர் ஓட்டக்கூடாது,” என்பது அந்த உத்தரவின் சாராம்சம். இதெல்லாம் இருப்பதால்தான் பெண்கள் தங்கள் ஆண் நண்பர்களோடு எளிதில் தொடர்புகொள்கிறார்கள், ஓடிப்போகிறார்கள், பாலியல் துன்புறுத்தல்களுக்கு இலக்காகிறார்கள் என்பது ஊர்த்தலைவரின் வாதம்.

அண்மையில் அந்த ஊருக்குச் சென்று மக்களிடையே உரையாடிய ஒரு ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேட்டின் செய்தியாளர் குழு, பெரும்பாலான வீடுகளில் அந்த உத்தரவை யாரும் கண்டுகொள்ளவில்லை என்று தெரிவித்திருக்கிறது. பெண் குழந்தைகள் இரண்டு பேர் ஜீன்ஸ் அணிந்து ஒரு டூ வீலரில் புறப்படுவதையும், அந்தக் குடும்பத்துப் பெண்கள் அக்குழந்தைகளை மகிழ்ச்சியோடு வழியனுப்பி வைப்பதையும் காட்டுகிற படத்தையும் அந்தப் பத்திரிகை வெளியிட்டுள்ளது.

“நாங்கள் ஜீன்ஸ் அணியக் கூடாது என்றால், பையன்கள் மட்டும் அணியலாமா? அவர்களும் பைஜாமா, குர்த்தா மட்டும்தான் அணிய வேண்டும் என்று ஏன் உத்தரவு போடவில்லை?… பையன்கள் மொபைல் போனில் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் இன்டர்நெட் பார்க்கிறார்கள். அவர்கள் கெட்டுப்போக மாட்டார்களா, நாங்கள்  பார்த்தால்தான் கெட்டுப்போவோமா,” என்று சிறுமிகள் பெரிய வார்த்தைகளால் கேட்டிருக்கிறார்கள். ஊராட்சி மன்றத்தில் விவாதிக்காமலே இந்த உத்தரவைப் பிறப்பித்ததாக மன்றத்தின் சில உறுப்பினர்களால் விமர்சிக்கப்பட்டுள்ள தலைவர் தனது உத்தரவில் இன்னும் பிடிவாதமாக இருக்கிறார். அழுத்தும் மண்ணைப் பிளந்து முளைவிடுகிற செடியின் தளிர் போல சமூக அழுத்தங்களை மீறி எழுகிற அந்தக் குழந்தைகளின் கேள்விகள் ஊர்தலைவருக்கு உறைக்காவிட்டாலும், ஊருக்கு உறைக்க வேண்டும், நாட்டிற்கு உறைக்க வேண்டும்.