ஆயுத பூஜை ஸ்பெஷல்
பூஜை செய்ய காலை 7:00 – 10:00 மணிக்குள் அவல், பொரி, சுண்டல் படைத்து பூஜித்தல் மிகவும் சிறப்பானது.
 அதே போல் அன்றைய நல்ல நேரம் காலை 7.45 – 8.45 மணி வரையும்  மாலை 6.15 முதல் 7.15 மணி வரை நல்ல நேரமாக அமைந்துள்ளது.  இந்த நேரத்தில் பூஜை செய்வது மிகவும் சிறப்பானது.
குறிப்பு:
ஆயுத பூஜை தினங்களில் வீடு, கடை, அலுவலகங்களில் பூஜை செய்து பின்னர் திருஷ்டி சுற்றி பூசணி காயைச் சாலையில் உடைக்காமல், ஓரமாக உடைத்துப் போட வேண்டும்.   நம் செயலால் அடுத்தவர்கள் பாதிக்கப்பட்டால், இறைவன் நமக்கு அருள் எப்படித் தருவார். சிந்தித்துச் செயல்படுவது நல்லது…
பூஜிப்பது எப்படி
சரஸ்வதி பூஜைக்கு முதல்நாளே (அதாவது இன்று) பூஜை அறையைக் கழுவி சுத்தம் செய்து அலங்கரித்துக்கொள்ள வேண்டும். பூஜை அறையில் பூஜை மண்டபம் அமைப்பதற்கான இடம் மேடு பள்ளம் இல்லாமல் சமதளமாக இருக்க வேண்டும்.
அதைப் பசுஞ்சாணத்தால் மெழுகி, கோலமிட்டு செம்மண் இட வேண்டும். அந்த இடத்தின் நான்கு மூலைகளிலும் 16 முழம் உயரத்துடன் தூண்கள் நட்டு, தோரணங்களால் அலங்கரிக்க வேண்டும்.
தூண்களில் அம்பாள் உருவம் உள்ள சிவப்புக் கொடி கட்டுவது சிறப்பு.   பூஜை இடத்தில் மையமாக நான்கு முழம் நீள அகலமும், ஒரு முழம் உயரமும் கொண்ட ஒரு பீடம் (மேடை) அமைக்க வேண்டும்.
சரஸ்வதி பூஜை அன்று அதிகாலையில் எழுந்து நீராடி பூஜைக்குத் தயாராக வேண்டும்.
பூஜை மேடையில் வெண்பட்டு விரித்த ஆசனம் இட்டு, அதன் மீது அம்பாளின் திருவடிவம் அல்லது திருவுருவப் படத்தை வைத்து, மலர்களால் அலங்காரம் செய்ய வேண்டும்.   அருகில் அம்பிகைக்கான கலச பூஜைக்காகக் கலசம் வைத்து அதில் நீர் நிரப்பி, தங்கம், ரத்தினம் ஆகியவற்றைப் போட்டு மாவிலைகளை மேலே வைத்து, பூஜையைத் துவங்க வேண்டும்.
மகாநவமி திருநாளில் நாம் அன்றாடம் வேலைக்கு உபயோகப் படுத்தும் பொருட்களையும், குழந்தைகளின் புத்தகங் களையும் பூஜையில் வைத்து வழிபடுவது விசேஷம் என்று பார்த்தோம் அல்லவா.
அதன்படி குழந்தைகளின் பாடப்புத்தகங்களையே மேடையாக அடுக்கி8, அதன் மீது அன்னையை எழுந்தருளச் செய்யும் வழக்கமும் உண்டு.   சிலர், சரஸ்வதிதேவியின் திருமுன் புத்தகங்களை அடுக்கிவைப்பார்கள்.
இப்படி எல்லாம் தயார் செய்தபிறகு, பூஜை நல்லபடியாக நிறைவேறவும், பூஜையில் ஏதேனும் குற்றம் குறைகள் இருப்பினும் பொறுத்தருளும் படியும் மனதார மனதார வேண்டிக்கொண்டு, உரிய துதிப்பாடல்களைப் பாடி, வணங்கவேண்டும்.
பின்னர் முறைப்படி தூப, தீப ஆராதனைகளைச் செய்யவேண்டும்.
நைவேத்தியமாகப் பழரசம், இளநீர், மாதுளை, வாழை, மா, பலா முதலானவற்றையும், சித்ரான்னங்கள் ஆகியவற்றைப் படைத்து வழிபடவேண்டும்.
இவ்வாறு பூஜித்து எல்லா நன்மையும் பெற பத்திரிகை.காம் தனது வாசகர்களுக்கு ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.