அஷ்ட லட்சுமிகள் தரும் ஆற்றல் – பகுதி 2

அஷ்ட லட்சுமிகள் தரும் ஆற்றல் – பகுதி 2

இன்று அஷ்ட லட்சுமிகள் சந்நிதி விவரம் பற்றிக் காண்போம்

 

ஆதி லட்சுமி

திருப்பாற்கடலைக் கடைந்தபோது, ஆதிநாளில் வந்தவள் என்பதால் இவளுக்கு ஆதி லட்சுமி என்ற காரணப் பெயர். இத்திருக்கோயிலின் தரைத் தளத்தில் தெற்கு முகமாக அமர்ந்துள்ள ஆதி லட்சுமியின் திருப்பாதத்திற்குக் கீழ் பூரண கும்பம், கண்ணாடி, சாமரம், கொடி, பேரிகை, விளக்கு, ஸ்வஸ்திகம் என்ற அபூர்வ மங்கள அம்சங்கள் அமையப் பெற்றுள்ளன. ஆதி லட்சுமியை வணங்குவதால் உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள் குணமடைவதாக நம்பிக்கை நிலவுகிறது.

தான்ய லட்சுமி

பருப்பு வகைகள், உணவுப் பொருட்கள், பழ வகைகள், கீரை வகைகள் ஆகிய அனைத்து வளங்களையும் உருவாக்குபவள் தான்ய லட்சுமி. இவளுக்கு அன்ன லட்சுமி என்ற பெயரும் உண்டு. தான்ய லட்சுமி கோயிலில் தரைத்தளத்தில் மேற்கு நோக்கி வீற்றிருக்கிறாள். சூரியன் பகலில் உற்பத்தி செய்த உணவுகளை அச்சூரியன் மறைந்த நேரத்திலும் காப்பவள் தான்ய லட்சுமி என்ற தத்துவத்தில் இச்சந்நிதி அமைக்கப்பட்டுள்ளது. பச்சை மாமலை போல் மேனி என்று திருமாலை ஆழ்வார்கள் பாடியுள்ளனர். புல், வயல், மரம், மலை என அனைத்திற்கும் பச்சை வண்ணம் அளித்த இந்தத் தான்ய லட்சுமியே திருமாலுக்கும் பச்சை நிறம் அளித்தவள். பசிப் பிணி போக்குபவள்.

தைரிய லட்சுமி

வாழ்வில் இன்னல்கள் மூலம் மனத் தைரியத்தை இழந்தவர்கள் இங்கு தைரிய லட்சுமிக்குப் புடவைகள் சார்த்திப் பிரார்த்தனையை நிறைவேற்றுகின்றனர். இத்திருக்கோவிலின் தரைத் தளத்தில் வெற்றித் திக்கான வடக்கு நோக்கி வீற்றிருக்கும் இவளுக்கு எட்டுத் திருக்கரங்கள் உள்ளன. வலது திருக்கரங்களில் அபயம், சூலம், அம்பு, சக்கரம் முதலியவற்றையும், இடது திருக்கரங்களில் வரதம், கபாலம், வில், சங்கம் முதலியவற்றையும் கொண்டு விளங்குகிறாள்.

கஜ லட்சுமி

 

கஜம் என்ற யானைகள் இருபுறமும் கலசம் ஏந்தித் திருமஞ்சனம் செய்வது போல அமைந்திருப்பதால் கஜலட்சுமி என்ற காரணப் பெயர் ஏற்பட்டது என்பர். இந்த லட்சுமியை ராஜ லட்சுமியாகவும், ஐஸ்வர்ய லட்சுமியாகவும் காண்பர். பல நூற்றாண்டுகளுக்கு முன் லட்சுமியின் திருவுருவமே கஜலட்சுமியின் தோற்றத்தில் அமைந்திருந்தது என்றும் குறிப்பிடுகிறார்கள். கோயிலில் கிழக்கு நோக்கித் தாமரையில் வீற்றிருக்கும் கஜ லட்சுமிக்கு, இரு புறமும் ஒரே கல்லிலான இரண்டு யானைகள் திருமஞ்சனம் செய்வது போல் அமைக்கப்பட்டுள்ளது சிற்ப நுணுக்கச் சிறப்பு. கஜ லட்சுமியைப் பூஜித்து அனைத்து வகைச் செல்வங்களையும் பெறலாம்.