ஆர்டர் ..ஆர்டர்..ஆர்டர். நீதிபதி அளித்த விநோத தீர்ப்பு

ஆர்டர் ..ஆர்டர்..ஆர்டர்.   நீதிபதி அளித்த விநோத தீர்ப்பு

சிறப்புக்கட்டுரை: ஏழுமலை வெங்கடேசன்

நீதி திரைப்படத்தில், விநோத தீர்ப்பு  ஒன்றை நீதிபதி வழங்குவார். ஹீரோ சிவாஜியின் லாரி மோதி அப்பாவி ஒருவர் இறந்து போவார். விபத்து ஏற்படுத்திய சிவாஜி, அந்த அப்பாவியின் குடும்பத்துக்கு ஊழியம் செய்ய வேண்டும் என்பதே அந்த தீர்ப்பு.

குற்றவாளிக்குத் தண்டனையும், அப்பாவியின் குடும்பத்துக்கு நிவாரணமும் ஒரு சேர வழங்கி புது விதத்தில் நீதியை நிலை நாட்டி இருப்பார் நிழல் நீதிபதி.

நிஜத்திலும் இது போன்றதொரு தீர்ப்பை அளித்துள்ளது மதுரை நீதிமன்றம். என்ன தீர்ப்பு? பார்க்கலாம்.

மதுரை பகுதியைச் சேர்ந்த கார்த்திக் மற்றும் செந்தில் ஆகியோர் மீது சட்டவிரோதமாக மணல் அள்ளியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தாங்கள் கைது செய்யப்படக்கூடும் என்று அஞ்சிய இருவரும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில்   முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர்.

நீதிபதி ஜி.ஆர்.சாமிநாதன் முன்னிலையில் மனு விசாரணைக்கு வந்தது.

அப்போது இருவருக்கும் முன் ஜாமீன் அளித்து நீதிபதி  வழங்கிய புதுமையான தீர்ப்பு இது:

‘’ முன் ஜாமீன் கோரிய மனுதாரர்கள் இருவரும் சம்மந்தப்பட்ட மாவட்ட சுரங்க அறக்கட்டளையில் தலா 7 ஆயிரத்து 500 ரூபாய் டெபாசிட்டாக செலுத்த வேண்டும் என்று நான் உத்தரவு பிறப்பித்திருக்க முடியும். அப்படிச் செய்யப்போவதில்லை.

மதுரையில் உள்ள அரசாங்க காப்பகத்துக்  கணக்கில்  இரண்டு பேரும் தலா 7 ஆயிரத்து 500 ரூபாய் டெபாசிட் செலுத்த உத்தரவிடுகிறேன்”

என்றவர் அதற்கான காரணத்தையும் விவரித்தார்.

மதுரையில் உள்ள அந்த காப்பகத்துக்கு நீதிபதி சாமிநாதன் அண்மையில் ஆய்வுக்குச் சென்றுள்ளார்.ஒரே குப்பை மயம்.

‘  காப்பக வளாகத்தைச் சுத்தமாக வைத்திருக்கக்கூடாதா?’’ என்று காப்பகத்தின் கண்காணிப்பாளரிடம் கேட்டுள்ளார்

அதற்கு அவர்’ வளாகத்தைச் சுத்தம் செய்வதற்கான துப்புரவுத் தொழிலாளர்கள் பணியிடம் காலியாக உள்ளது.அதனால் வெளியில் இருந்து ஆட்களை நியமித்துள்ளோம். அவர்கள் இரண்டு பேர் 15 நாட்களுக்கு ஒருமுறை இங்கே வந்து சுத்தம் செய்து விட்டுப் போகிறார்கள்.

நிரந்தரத் துப்புரவுத் தொழிலாளர்களை நியமிக்க வேண்டும் என்றால் இருவருக்கும்  மாதம் தலா 16 ஆயிரம் ரூபாய் சம்பளம் கொடுக்க வேண்டும் ’’ என்று பதில் அளித்துள்ளார்.

அந்த சம்பவத்தை மனதில் பூட்டி வைத்திருந்த நீதிபதி, அந்த காப்பகத்துக்கு நிரந்தரத் துப்புரவுத் தொழிலாளர்களை நியமிக்க வழிவகை செய்யும் நோக்கில் -,இப்படி ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளார்.

தீர்ப்பை வழங்கிய நீதிபதி சாமிநாதன் தொடர்ந்து’’ இதுபோன்ற வழக்குகளில் காப்பகத்துக்குப் பணம் டெபாசிட் செலுத்த ஆணையிட்டால், 3 வருடங்களில்; காப்பகத்தின் கணக்கில் 5 லட்சத்து 76 ஆயிரம் ரூபாய் சேர்ந்து விடும்.இதன் மூலம் அந்த காப்பகத்துக்கு இரண்டு  நிரந்தரத் துப்புரவு தொழிலாளர்களை நியமிக்கலாம்’’ என்று கூறிய அவர்’’ இடைப்பட்ட காலத்தில் அந்த காப்பகத்துக்கு அரசாங்கமே இரண்டு துப்புரவுத் தொழிலாளர்களை நியமிக்க ஏற்பாடு செய்யும் என்று நம்புகிறேன்’ என்று  தீர்ப்பை படித்து முடித்தார்.

சில நேரங்களின் சில நீதிபதிகள் அளிக்கும் தீர்ப்புகள் நேர்த்தியாகவும், யதார்த்தமாகவும் இருப்பது மனதுக்குச் சுகம் அளிப்பது உண்மை.

கார்ட்டூன் கேலரி