அமெரிக்காவிடமிருந்து இந்தியா வாங்கவுள்ள சீஹாக் ஹெலிகாப்டர் – சிறப்புகள் என்ன?

புதுடெல்லி: அமெரிக்காவிடமிருந்து 3 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ஆயுதங்களை இந்தியா வாங்கவுள்ளதாக கூறியுள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.

இவற்றில் தாக்குதல் நடத்தும் ஹெலிகாப்டர் உள்ளிட்ட பல்வ‍ேறு ஆயுதங்கள் அடக்கம். ஆசியப் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்திற்கு ஈடுகொடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை அமையவுள்ளதாக தெரிவித்தார் டிரம்ப்.

மேலும், இரண்டு நாடுகளுக்கு இடையிலான பாதுகாப்பு மற்றும் வர்த்தக உறவுகள் மேம்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்திய ராணுவத்திற்காக, ஹெல்ஃபயர் ஏவுகணைகள் பொருத்தப்பட்ட 24 சீஹாக் ஹெலிகாப்டர்களை 2.6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் வாங்கவுள்ளது. மேலும், 6 அப்பாச்சி ஹெலிகாப்டர்களும் வாங்கப்படவுள்ளது.

மேலும், நீர்மூழ்கிக் கப்பல்கள், போர்க் கப்பல்கள் மற்றும் கடலில் மீட்புப் பணிகளை மேற்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது எம்எச்-60 ரோமியோ சீஹாக் ஹெலிகாப்டர்கள்.

இந்த ஹெலிகாப்டர், உலகின் சிறந்த கடற்போர் ஹெலிகாப்டராக மதிப்பிடப்படுகிறது. இதை பல நிலைகளில் பயன்படுத்த முடியும் என்று கூறப்படுகிறது.