பெங்களூரு,

சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு சிறையில் எந்தவித வசதியும் செய்து தரப்படவில்லை என்று சிறைத்துறை டிஜிபி சத்திய நாராயண விளக்கம் அளித்துள்ளார்.

சசிகலாவுக்கு சிறையில் வசதி செய்துகொடுக்க பெங்களூரு சிறைத்துறை டிஜிபி சத்திய நாராயணா 2 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக, கர்நாடக சிறைத்துறை டிஐஜி  ரூபா, சிறைத்துறைக்கு கடிதம் எழுதியிருந்தார்.

கடிதத்தில், சிறைத்துறையில் விதிமுறை மீறல்கள் அதிகளவில் நடைபெற்று வருகிறது. ரூ.2 கோடி அளவில் லஞ்சம் வாங்கிக்கொண்டு, சிறையில் தண்டனைக் கைதியாக உள்ள சசிகலாவுக்கு தனி சமையலறை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது.

இந்த விதிமுறை மீறல்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து தங்கள் மீது சுமத்தப்படும் களங்கங்களைப் போக்குங்கள்.

ஒரு சிறைத்துறை அதிகாரியாக சிறையைச் சோதனையிடுவதற்கான அத்தனை உரிமையும் எனக்கு உள்ளது’ என்று கடிதம் அனுப்பியுள்ளார்.

இந்த கடிதத்தின் நகல் வெளியாகி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், டிஐஜி ரூபாவின் குற்றச்சாட்டுக்கு டிஜிபி சத்தியநாராயணராவ் இன்று செய்தியாளர்களுக்கு பதில் அளித்தார்.

 

அப்போது,  பெங்களூர் சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் எதுவும் செய்து தரப்படவில்லை என்றும்,  சசிகலாவிடம் ரூ.2 கோடி லஞ்சம் பெற்றுக் கொண்டு சிறப்பு சலுகை வழங்கியதாக டி.ஜி.பி. மீது புகார் கூறியது உண்மை இல்லை என்று  மறுப்பு தெரிவித்தார்.

மேலும், சிறைக்குள் கைதிகள் சமையல் வேலை செய்வது விதிகளுக்குட்பட்டதுதான் என்றும், சசிகலாவிற்கு சிறையில் எந்த வசதியும் அளிக்கவில்லை, V.K.சசிகலாவுக்கு சிறை கேண்டினில் இருந்தே உணவு கொடுக்கப்படுகிறது என்றும் அவர் கூறினார்.

விஷம் கலந்து உணவு கொடுக்கப்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் தனி உணவு அளிக்கப்பட்டதாக டிஐஜி கூறியதாக கர்நாடக ஊடகங்களில் செய்தி வெளியானது.

இந்த நிலையில் எந்தவித ஆதாரமும் இல்லாமல் டிஐஜி ரூபா குற்றம் சாட்டுகிறார் என்று சத்யநாராயணா தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.