பெங்களூரு:

ர்நாடகாவில் நடைபெற்று வரும் காங்கிரஸ் ஜேடிஎஸ் கூட்டணி அரசை கலைக்க முயற்சி மேற்கொண்டு வரும் பாஜக குறித்து விசாரணை நடத்த, சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட் டுள்ளது.

கர்நாடகாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், அதிக சட்டமன்ற தொகுதிகளை பெற்ற பாஜக, கவர்னர் துணையுடன் ஆட்சி கட்டிலில் ஏறியதும், பின்னர் உச்சநீதி மன்றம் தீர்ப்பு காரணமாக, பெரும்பான்மை நிரூபிக்க முடியாமல் எடியூரப்பாக சட்டமன்றத்தை விட்டு கண்ணீரோடு வெளியேறியதும்  அனைவரும் அறிந்ததே.

அதைத்தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் ஐக்கிய ஜனதாதளம் கட்சி கூட்டணி ஆட்சி அமைத்தது.  மாநில முதல்வராக குமாரசாமி பதவி ஏற்ற நிலையில், துணைமுதல்வராக கர்நாடக காங்கிரஸ் முன்னாள் தலைவர் பரமேஸ்வராவும் மற்றும் கூட்டணி மந்திரிசபையும் அமைக்கப்பட்டு ஆட்சி நடைபெற்று வருகிறது.

கர்நாடக சட்டமன்றத்தில் பாஜகவுக்கு 104 எம்எல்ஏக்கள் உள்ளனர். சமீபத்தில் காங்கிரசுக்கு ஆதரவு கொடுத்து வந்த 2 காங்கிரஸ் எம்எல்ஏ க்களை தங்கள் அணிக்கு இழுத்துக்கொண்ட பாஜக, மேலும் சில காங்கிரஸ், ஜேடிஎஸ் கட்சி எம்எல்ஏக்களுக்கு வலைவீசி வருகிறது. இதில் சில எம்எல்ஏக்கள் சிக்கி இருப்பதாக தெரிகிறது. 4 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் காங்கிரஸ் தலைமைக்கு கட்டுப்படாமல் சட்டமன்ற நிகழ்ச்சிகளை புறக்கணித்து வருகின்றனர்.

113 எம்எல்ஏக்கள் இருந்தால் ஆட்சியை கைப்பற்றி விடலாம் என்று கணக்குப் போட்டுள்ள பாஜக, அதற்கான பேரத்தில் ஈடுபட்டு வருகிறது. ஜேடிஎஸ் கட்சி எம்எல்ஏ மகனிடம் எடியூரப்பா பேரம் பேசிய ஆடியோ மற்றும், கர்நாடக சட்டமன்ற சபாநாயகரிடம் பேரம் பேசிய ஆடியோக்களை சமீபத்தில் முதல்வர் குமாரசாமி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்த நிலையில்,  ஆட்சியை கலைக்க பாஜக மேற்கொண்ட ஆடியோ விவகாரம் தொடர்பாக சிறப்பு விசாரணை குழு அமைத்து முதல்வர் குமாரசாமி உத்தரவிட்டு உள்ளார்.

இந்த குழுவானது ஆடியோ பேரம் குறித்து விசாரணை நடத்தி,  15 நாட்களுக்குள் சட்டசபையில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டு உள்ளது.