கூட்டணி கட்சிகள் கேட்டது என்ன? தி.மு.க.சொன்னது என்ன?

கூட்டணி கட்சிகள்
கேட்டது என்ன?
தி.மு.க.சொன்னது
என்ன?


காங்கிரசை தவிர்த்த தி.மு.க.வின் பிரதான கூட்டணி கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட் ,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்,ம.தி.மு.க.மற்றும் விடுதலை சிறுத்தைகள் அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க.குழுவுடன் முதல் ரவுண்ட் பேச்சுவார்த்தையை முடித்து விட்டார்கள்.
அங்கே நடந்தது என்ன? நடக்கப்போவது என்ன ?
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நாகப்பட்டினம், திருப்பூர்,கோவை மற்றும் வட சென்னை ஆகிய நான்கு தொகுதிகளை குறித்து கொடுத்து அதில் இரண்டு இடங்களை கேட்டுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி,மதுரை, வடசென்னை, திருப்பூர்,கன்னியாகுமரி ஆகிய 4 தொகுதிகளின் பட்டியலை அளித்து இரண்டு தொகுதிகளை கேட்டுள்ளது.கன்னியாகுமரி கண்டிப்பாக வேண்டும் என்பது அந்த கட்சியின் ‘டிமாண்ட்’.
விருதுநகர்,ஈரோடு, காஞ்சிபுரம், தென்காசி,தேனி,தஞ்சை ,தென் சென்னை ஆகிய 7 தொகுதிகளை ம.தி.மு.க. கேட்கிறது.
விடுதலை சிறுத்தைகள் சிதம்பரம்,விழுப்புரம், திருவள்ளூர் ஆகிய 3 தொகுதிகளை குறித்து கொடுத்து ‘இவற்றில் நிச்சயம் இரண்டு தொகுதிகள் வேண்டும்’ என அடம் பிடிக்கிறது.
தி.மு.க.என்ன பதில் சொன்னது?
நாகப்பட்டினம் தொகுதியில் இடதுசாரிகள் கடந்த முறை தனித்து போட்டியிட்டார்கள்.இந்த கூட்டணியின் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் 1 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றார்.எனவே –இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு இந்த தொகுதியை மட்டும் தர தி.மு.க.சம்மதித்துள்ளது.
கடந்த தேர்தலில் கன்னியாகுமரியில் சி.பி.எம்.வேட்பாளர் 35 ஆயிரம் சொச்சம் வாக்குகளே வாங்கினார்.அதனால் அந்த தொகுதி கிடையாது என்று மறுத்து விட்டது.கோவை கொடுக்கப்படலாம்.
ம.தி.மு.க. கடந்த தேர்தலில் விருதுநகரில் மூன்றரை லட்சம் ஓட்டுகள் வாங்கியது.தி.மு.க.வை பின்னுக்கு தள்ளி விட்டு இரண்டாம் இடம் பிடித்தது. இந்த முறை அந்த தொகுதி ம.தி.மு.க.வுக்கு உறுதி.ஈரோட்டில் இரண்டரை லட்சம் வாக்குகள் பெற்றது.இந்த தொகுதியை கொடுப்பதில் பரிசீலனை நடந்து வருகிறது.
விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு சிதம்பரம் தொகுதி நிச்சயம். ஆம். ஒரு தொகுதி மட்டுமே.
இது –இன்றைய நிலவரம்.
ஸ்டாலின் தற்போது வெளியூர் சுற்றுப்பயணத்தில் இருக்கிறார். திரும்பியதும் இடங்கள் ஒதுக்கப்படும்.

–பாப்பாங்குளம் பாரதி