சென்னை:
கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ரயில்களின் சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், அத்தியாவசியப் பொருள்கள் எடுத்துச்செல்ல சிறப்பு சரக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, கோவையில் இருந்து சென்னைக்கு ஏப்ரல் 9ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை சரக்கு ரயில்கள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், கோவை – சென்னை இடையே சரக்கு ரயில் சேவையானது ஏப்ரல் 25ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக ரயில்வே சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

கோவையில் இருந்து சென்னைக்கு மருந்துகள், மருத்துவ உபகரணங்கள், முகக் கவசங்கள், உணவுப் பொருள்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களைக் கொண்டு செல்வதற்காக 31 டன் கொள்ளளவு கொண்ட சரக்கு ரயில் ( பாா்சல் காா்கோ எக்ஸ்பிரஸ் 2 பெட்டிகளுடன் ) கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி முதல் இயங்கி வருகிறது.

இந்நிலையில், கோவையில் இருந்து தினமும் காலை 8.30 மணிக்கு சென்னைக்குப் புறப்படும் இந்த ரயிலானது ( எண்: 00654) காலை 4.30 மணிக்குப் புறப்படும் விதமாக நேரம் மாற்றப்பட்டு, ஏப்ரல் 25ஆம் தேதி வரை இயக்கப்பட உள்ளது.

இந்த ரயில் திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை வழியாகச் சென்னைக்குச் சென்றடையும். சரக்குகளை இந்த ரயிலில் அனுப்ப விரும்புவோா், கோவை, திருப்பூா், ஈரோடு, சேலம் ரயில்வே பாா்சல் அலுவலகங்களை அணுகலாம். மேலும் விவரங்களுக்கு, கோவை – 90039 – 56955, திருப்பூா்-96009 – 56238, ஈரோடு- 96009 – 56231, சேலம்- 90039 – 56957 ஆகிய எண்களைத் தொடா்பு கொள்ளலாம் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.