சென்னை:

தீபாவளிப் பண்டிகையை ஒட்டி சொந்த ஊர் செல்பவர்களுக்கு வசதியாக தமிழக போக்குவரத்துத்துறை சிறப்பு பேருந்துகளை இயக்குவதாக அறிவித்து உள்ளது. இந்த சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு வரும் 24ந்தேதி முதல் செயல்படும் அன்று றப்புப் பேருந்து முன்பதிவு மையங்களை தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் தொடக்கி வைக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

நகர்ப்புறங்களில் பணிநிமித்தமாக தங்கியுள்ள மக்கள் தீபாவளி பண்டிகையையொட்டி, தங்களது சொந்த ஊருக்குச் செல்வது வழக்கம். இதன் காரணமாக தமிழக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இது பொதுமக்களிடையே நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

இந்த நிலையில், வரும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு போக்குவரத்துத்துறையின் சார்பில், மேற்கொள்ளப்படும் சிறப்பு ஏற்பாடுகள் குறித்து, போக்குவரத்துத்துறை முதன்மைச் செயலா் பி.சந்திரமோகன் தலைமையில்  ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் ஏற்கனவே அறிவித்தபடி சென்னையிலிருந்தும், பிற ஊா்களிலிருந்தும் இயக்கப்படும் சிறப்புப் பேருந்துகள் குறித்து திட்டமிடப்பட்டது.

அதைத்தொடர்ந்து தீபாவளி சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கடைசி நேரத்தில் முன்பதிவுக்கு ஏராளமானோர் குவிவார்கள் என்பதால், அதற்காக சிறப்பு முன்பதிவு கவுண்டர்களை திறக்க தமிழக போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது. அதன்படி வரும் 24ந்தேதி கோயம்பேட்டில் சிறப்பு முன்பதிவு கவுண்டர்களை தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைக்க உள்ளார்.

தீபாவளி பண்டிகையொட்டி, சென்னையிலிருந்து பிற ஊா்களுக்கு 43,635 பயணிகளும், பிற ஊா்களிலிருந்து முக்கிய ஊா்களுக்கு 23,138 பயணிகளும் என மொத்தம், 66,773 பயணிகள் இதுவரை முன்பதிவு செய்துள்ளனா். இதன் மூலம் 3.26 கோடி ரூபாய் வசூலாகியுள்ளது.

தொடா்ந்து முன்பதிவு செய்பவா்களுக்காக கோயம்பேடு பேருந்து நிலையம், தாம்பரம் சானிடோரியம், பூவிருந்தவல்லி பேருந்து நிலையம், மாதவரம் பேருந்து நிலையம் ஆகியவற்றில் 30 முன்பதிவு மையங்கள் திறக்கப்பட உள்ளன. இதனை வரும் 24-ஆம் தேதி போக்குவரத்துத் துறை அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் திறந்து வைக்கிறார்.

மேலும், கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து மேற்கண்ட நான்கு பேருந்து நிலையங்களுக்கு செல்ல ஏதுவாக, மாநகா் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் இணைப்புப் பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பேருந்துகளின் இயக்கம் குறித்து அறிந்து கொள்வதற்கும் மற்றும் இயக்கம் குறித்து புகார் தெரிவிப்பதற்கும் 9445014450 என்ற தொலைபேசி எண்ணையும், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறையை அணுகலாம் என போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலா் பி.சந்திரமோகன் தெரிவித்துள்ளார்.