சென்னை: மத்திய அரசு விதிக்கும் நிபந்தனைகள் சிலவற்றை ஏற்க மறுப்பதால், அண்ணா பல்கலைக்கழகத்திற்கான சிறப்பு அந்தஸ்து, இன்னும் ஓராண்டு தள்ளிப் போகும் நிலை ஏற்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

‘இன்ஸ்டிட்யூட் ஆஃப் எக்ஸலன்ஸ்’ எனப்படும் சீர்மிகு கல்வி நிறுவனம் என்று சிறப்பு அந்தஸ்தை தமிழகத்தின் புகழ்பெற்ற அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வழங்க மத்திய அரசு முன்வந்தது.

ஆனால், சிறப்பு அந்தஸ்து வழங்கும் முன்பாக மத்திய அரசு கூறும் சில வழிமுறைகளைப் பின்பற்றி, புதிய திட்டங்களை வகுக்க வேண்டும். அதற்கான செலவில் 50% ஐ தமிழக அரசு ஏற்க வேண்டும் என்பன போன்ற சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. ஆனால், மத்திய அரசின் நிபந்தனைகளை ஏற்பதில் தமிழக அரசு தாமதம் செய்தது.

சிறப்பு அந்தஸ்து கிடைத்தால், அண்ணா பல்கலைக்கழகம் மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் சென்று விடலாம் என பேராசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள் சந்தேகம் தெரிவித்தனர். தமிழக அரசின், இட ஒதுக்கீடு விதிகளை பின்பற்றுவதில் சிக்கல் ஏற்படலாம் என்ற சந்தேகமும் எழுந்தது.

எனவே, இதுதொடர்பாக தமிழக அரசின் உயர்மட்டக் குழுவின் சார்பில் இன்னும் எந்த முடிவும் மேற்கொள்ளப்படவில்லை. மேலும், சட்டசபையில் உயர்கல்வித்துறை மானியக் கோரிக்கையிலும் இதுதொடர்பான எந்த அறிவிப்பும் வெளியாகாத காரணத்தால், சிறப்பு அந்தஸ்து விவகாரம் இன்னும் ஓராண்டிற்கு தள்ளிப்போகும் நிலை ஏற்பட்டுள்ளது.