பாகிஸ்தானுக்கு சிறப்பு வரிச்சலுகை அந்தஸ்து – 2 ஆண்டுகள் நீட்டிப்பு!

பிரஸல்ஸ்: பாகிஸ்தான் நாட்டிற்கு ஜிஎஸ்பி – பிளஸ் எனப்படும் ஏற்றுமதிக்கான சிறப்பு வரிச் சலுகை அந்தஸ்தை, மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டித்துள்ளது ஐரோப்பிய யூனியன்.

பாகிஸ்தானில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரிச் சலுகை அளிக்கும் வகையிலான சிறப்பு அந்தஸ்தை ஐரோப்பிய யூனியன் வழங்கி வருகிறது.

கடந்த 2014ம் ஆண்டு வழங்கப்பட்ட இந்த சிறப்பு அந்தஸ்தானது இடையில் இரண்டு முறை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற ஐரோப்பிய யூனியன் கூட்டத்தில் இந்த சிறப்பு பொருளாதார அந்தஸ்தை, தேவைக் கருதி மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிக்க முடிவு செய்யப்பட்டது.

இதனால், பாகிஸ்தானிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரிச் சலுகை அல்லது வரி ரத்து வசதி கிடைக்கும்.

ஏற்கனவே கடும் நிதி நெருக்கடியில் பாகிஸ்தான் சிக்கியுள்ள நிலையில், இது பாகிஸ்தானுக்கு பெரிதும் உதவிகரமாக இருக்கும் என்று கூறுகின்றனர் சர்வதேச பொருளாதார நிபுணர்கள்.