சென்னை:
மிழகத்தில் ஜூலை 31ம் தேதி வரை சிறப்பு ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கடந்த ஒரு வாரமாக மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.  இதனால், தமிழகத்தில் பொது போக்குவரத்துக்கு விதிக்கப்பட்ட  தடையை  ஜூலை 31ந்தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது.
இந்த நிலையில், தமிழகத்திலும் சிறப்பு ரயில் போக்குவரத்தும் தடை செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது.
தமிழகத்தில், சென்னையை தவிர்த்து பல மாவட்டங்களில் பயணிகள் சிறப்பு ரயில் கடந்த ஒரு மாதமாக இயக்கப்பட்டு வந்தது. கொரோனா தீவிரமாகி வருவதால்,  ரயில் சேவையை ரத்து செய்ய வேண்டும் என தமிழக அரசு தெற்கு ரயில்வேக்கு கடிதம் எழுதிருந்தது. அதன்படி ஏற்கனவே ஜூலை 1ந்தேதி முதல் 15ந்தேதி வரை சிறப்பு ரயில் சேவையை ரத்து செய்திருந்தது.
இந்த நிலையில், தற்போது ரயில் சேவைக்கான தடை ஜூலை 31ந்தேதி நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது.
அதன்படி திருச்சி – செங்கல்பட்டு, மதுரை –  விழுப்புரம், கோவை – காட்பாடி, செங்கல்பட்டு – திருச்சி, அரக்கோணம் – கோவை, கோவை  – மயிலாடுதுறை, திருச்சி – நாகர்கோவில் ஆகிய பகுதிகளில் இயக்கப்பட்டு வந்த 7 சிறப்பு ரயில்கள் வருகின்ற 31ம் தேதி வரை ரத்து செய்வதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.