அத்திவரதர் தரிசனத்திற்காக சிறப்பு ரயில்கள் இயக்கம்: தென்னக ரயில்வே அறிவிப்பு

அத்திவரதர் தரிசனத்திற்காக நாளை முதல் காஞ்சிபுரத்திற்கு கூடுதலாக 6 ரயில்கள் இயக்கப்படும் என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

40 ஆண்டுகளுக்கு ஒருமுறை காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலின் குளத்தில் இருந்து எடுக்கப்பட்டு, பூஜிக்கப்படும் அத்திவரதரை காண பல்லாயிரக்கணக்கில் மக்கள் குவிந்து வருகின்றனர். ஒரு மண்டலத்திற்கு வெளியே எடுக்கப்பட்டு பூஜிக்கப்படும் அத்திவரதர், முதல் 24 நாட்கள் சயன முறையில் காட்சி தருவார். ஜூலை 1ம் தேதி முதல் தற்போது வரை 4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் காஞ்சிபுரம் வந்து சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இத்தகைய நிலையில் தொடர்ந்து பக்தர்களின் வருகை அதிகரித்து வருவதன் காரணமாக, நாளை முதல் காஞ்சிபுரத்திற்கு கூடுதலாக 6 ரயில்கள் இயக்கப்படும் என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. இது தொடர்பாக தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், “முதல் சிறப்பு ரயில் தாம்பரத்திலிருந்து நாளை அதிகாலை 04.15 மணிக்கு புறப்பட்டு காலை 06.05 மணிக்கு காஞ்சிபுரம் சென்றடையும். இதை தொடர்ந்து இரண்டாவது சிறப்பு ரயில் சென்னை கடற்கரையிலிருந்து காலை 04.25 மணிக்கு புறப்பட்டு காலை 07.15 மணிக்கு காஞ்சிபுரம் சென்றடையும். இதையடுத்து செங்கல்பட்டில் இருந்து காலை 10.00 மணி, மதியம் 12.00 மணி, பிற்பகல் 03.10 மணி மற்றும் மாலை 05.30 மணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதனை போலவே காஞ்சிபுரத்தில் இருந்து காலை 07.30 மணி முதல் இரவு 07.45 மணி வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை கடற்கரைக்கு 6 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கார்ட்டூன் கேலரி