சென்னை: பேசவும் கேட்கவும் இயலாத மாற்றுத் திறனாளிகள் மற்றும் அவர்கள் தொடர்புடைய நபர்களுக்கு, தமிழக அரசின் சார்பில் 81,000 ஊடுருவும் தன்மையுள்ள முகக் கவசங்கள் தமிழக அரசின் சார்பில் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்குறிப்பிட்ட மாற்றுத் திறனாளிகளின் பெற்றோர்கள், பயிற்சியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் அவர்களோடு தொடர்புடைய பிறர் ஆகியோருக்கு இந்த ஊடுருவும் தன்மையுள்ள முகக் கவசங்கள் வழங்கப்படவுள்ளன. இதன்மூலம், உரையாடலின்போதான உதட்டு அசைவுகளைக் கண்டு மாற்றுத் திறனாளிகள் புரிந்துகொள்ள முடியும்.
மாற்றுத் திறனாளிகள் நல ஆணையரகம் இதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளது. இந்தத் திட்டத்தின்கீழ், மொத்தம் 13500 மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்கள் சார்ந்தோருக்கு 81000 ஒளி ஊடுருவும் முகக் கவசங்கள் வழங்கப்படவுள்ளன.
இதன்மூலம், சம்பந்தப்பட்டவர்கள், பாதுகாப்பை உறுதிசெய்துகொள்வதுடன், தங்களின் உரையாடலையும் தடையின்றி தொடர முடியும் என்று கூறப்படுகிறது. நல்வாழ்வு சங்கங்களின் மூலம் இவை வழங்கப்படவுள்ளதாக தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மாநில அரசு இந்த முடிவை மேற்கொள்வதற்கு முன்னரே, திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மருத்துவரான முகமது ஹக்கீம், இந்த மாத துவக்கத்தில் இந்த ஊடுருவும் தன்மையுள்ள முகக் கவசத்திற்காக அறியப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.