சென்ன‍ை: ஊரடங்கு 5வது கட்டமாக நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், பல கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், கண்காணிப்பு அடிப்படையிலான கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வ‍ேண்டுமென நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

வயதான மனிதர்கள் மற்றும் ஏற்கனவே பிற நோய்களால் பாதிக்கப்பட்ட மக்கள் மீதான கண்காணிப்பை தீவிரப்படுத்தினால், இறப்பு எண்ணிக்கையைக் குறைக்கலாம் என்று அவர்கள் ஆலோசனை தெரிவித்துள்ளனர்.

நோயாளிகளின் இரண்டாம் நிலை தொடர்புகளை பரிசோதனை செய்வது மற்றும் தனிமைப்படுத்துவதை ஏற்கனவே நிறுத்திவிட்ட தமிழக அரசு, நோயாளியுடன் முதல்நிலை தொடர்பில் இருக்கும் அறிகுறி இல்லாத நபர்களையும் பரிசோதனை செய்வதை தற்போது நிறுத்தியுள்ளது.

இதற்கு முன்னர், ஒரு தெருவில், ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டால் அந்த தெருவே மூடப்படும் மற்றும் கடுமையான கண்காணிப்பிற்கு உள்ளாக்கப்படும்.

ஆனால், மே மாதம் நடுப்பகுதியிலிருந்து ஒட்டுமொத்த தெருவை மூடுவதற்கு பதிலாக, சம்பந்தப்பட்ட வீடு அல்லது அடுக்குமாடி குடியிருப்பை மட்டுமே ‘லாக்’ செய்யும் நடைமுறை கொண்டுவரப்பட்டது.

இந்நிலையில், ஐந்தாம் கட்ட ஊரடங்கு தொடங்கியுள்ள நிலையில், வயதான மற்றும் ஏற்கனவே பிற நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் விஷயத்தில் மட்டும் அக்கறை செலுத்தினால், இறப்பு விகிதத்தை குறைக்கலாம் என்று ஆலோசனை கூறப்பட்டுள்ளது.