அஷ்ட லட்சுமிகள் தரும் ஆற்றல்

அஷ்ட லட்சுமி பற்றிய சிறப்பு பதிவு – முதல் பகுதி

காணும்போது கண்ணுக்கும் மனதுக்கும் குளிர்ச்சி அளிக்கும் மகாலட்சுமி, தனம், தானியம், வெற்றி, நீர், நிலம், காற்று, தீ, உணவு, உடை, உறையுள் ஆகியவற்றில் வாசம் செய்கிறாள்.

சந்திர சகோதரி என்றபடியால் சந்திரனுக்கு உடன் பிறந்தவள் மகாலட்சுமி. இவளை வணங்குவதற்கு ஒவ்வொரு பௌர்ணமி திதியும் உகந்ததுதான். குபேரன் மகாலட்சுமியிடம் ஐஸ்வர்யத்தைப் பெற்ற நாள் சித்திரை மாதப் பௌர்ணமி என்கிறது புராணம்.

சென்னை பெசன்ட் நகரில் உள்ள அஷ்டலட்சுமி திருக்கோயிலில் உலக மக்கள் அனைவரின் நன்மை வேண்டி சித்திரை மாத பௌர்ணமியன்று ஒரு நாள் முழுவதும் லட்சார்ச்சனை சிறப்பாக நடைபெற்றது.

மகாலட்சுமி திருக்கோயிலைச் சென்னையில் சிறப்புற அமைக்க வேண்டும் என்பது காஞ்சி ஸ்ரீமகா பெரியவரின் எண்ணம். அவர் எண்ணிய அத்திருப்பணியை ஒக்கூர் சீனிவாச வரதாச்சாரியார் நிறைவேற்றினார் என இத்திருக்கோயில் தல புராணம் தெரிவிக்கிறது.

கடலில் தோன்றியவள் மகாலட்சுமி என்பதால் கடலுக்கு அருகில் தாயாருக்குக் கோயில் எழுப்பக் காஞ்சி மகா பெரியவர் விரும்பினார். அதன் விளைவாகவே சென்னை பெசன்ட் நகர் அஷ்ட லட்சுமி கோயில் உருவானது.

‘வங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனை’ என்று திருப்பாவையில் குறிப்பிடுகிறாள் ஆண்டாள். கடலில் பள்ளி கொள்ளும் பெருமாளைக் காண்பது போல மகாலட்சுமி கோயில் கடலை நோக்கிய வண்ணம் அமைந்துள்ளது.

தாயார்கள் மட்டும் தனித்திருத்தல் கூடாது என்பதால் இக்கோயிலின் தரைத் தளத்தில் மகாலட்சுமி உடனுறை லட்சுமி நாராயணர் திருமணக் கோலத்தில் காட்சி அளிக்கின்றார். இரண்டு அடுக்கு மாடியாக உள்ள இத்திருக்கோயில் ஓங்கார வடிவமாக உள்ளது.

அஷ்டாங்க விமானம்

அன்ன லட்சுமி, திருமடைப்பள்ளி நாச்சியார், மோட்ச லட்சுமி, கோலபுர நாயகி, மகுட லட்சுமி, குபேர லட்சுமி, தீப லட்சுமி என லட்சுமி பல திருநாமங்கள் கொண்டவள். இத்திருக்கோயிலில் அஷ்ட லட்சுமிகள் அஷ்டாங்க விமானத்தில் இருந்துகொண்டு அருள்பாலிக்கிறார்கள். இந்த விமானத்தின் நிழல் பூமியில் வீழ்வதில்லை என்பது சிற்பக் கலையின் சிறப்புக்கு எடுத்துக்காட்டு.

கடலை நோக்கியுள்ள கோபுரப் பகுதியில் ஒருபுறம் ஆதிசங்கரர் கனகதாரா ஸ்தோத்ரம் சொல்லியதால் மகாலட்சுமி தோன்றி, தங்க நெல்லிக்கனி வர்ஷித்த காட்சியும், மறுபுறம் ஸ்ரீ வேதாந்த தேசிகரின் வேண்டுகோளுக்கு இணங்க மகாலட்சுமி பொன்மழை பொழிந்த காட்சியும் இடம்பெற்று சைவ, வைணவ ஒற்றுமையைக் குறிக்கின்றன.

சென்னை பெசன்ட் நகர் அஷ்டலட்சுமி கோயிலில் உள்ள சன்னிதிகளும் அதன் சிறப்புகளும் இன்றும் ஆயிரமாயிரம் பக்தர்களை ஈர்க்கின்றன.

நாளை அஷ்ட லட்சுமிகளின் விவரத்தை இரண்டாம் பகுதியில் காண்போம்