புதுடெல்லி: கடந்தகால ஏல செயல்பாடுகளில் விற்பனையாகாத அலைக்கற்றைகளால் நாட்டிற்கு ஏற்பட்ட நஷ்டம் ரூ.5.4 லட்சம் கோடிகள் என்று பிராட்பேண்ட் இந்தியா ஃபோரம் மதிப்பிட்டுள்ளது.

எனவே, வருங்காலங்களில் மேற்கொள்ளப்படும் 5ஜி ஏல செயல்பாடுகளில், அலைக்கற்றைக்கு, விற்பனையாகக்கூடிய விலையை நிர்ணயிக்க வேண்டுமென்று அரசிடம் அந்த அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

தற்போது 5ஜி அலைக்கற்றைக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள விலை என்பது மிகவும் அதிகமானது என்றும், பிற நாடுகளோடு ஒப்பிடுகையில் இது 4 மடங்கு அதிகம் எனவும், எனவே விரைவான மாற்றம் தேவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நிர்ணயிக்கப்படும் விலையானது, விற்பனையை தூண்டும் வகையில் இருக்க வேண்டும் மற்றும் இதன்மூலமான நீண்டகால நன்மைகளை கருத்தில்கொண்டு முடிவெடுக்க வேண்டுமெனவும், குறுகியகால லாபங்களை கணக்கில்கொண்டு முடிவெடுக்கக்கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.

டிஜிட்டல் கம்யூனிகேஷன்ஸ் கமிஷன் கூட்டத்தில் இந்த கருத்துகளை எடுத்து வைத்தது பிராட்பேண்ட் இந்தியா ஃபோரம். டிஜிட்டல் கம்யூனிகேஷன்ஸ் கமிஷன்தான் ஏலம் தொடர்பான பல முக்கிய விஷயங்களை முடிவுசெய்யும் அமைப்பாகும். இந்த நிதியாண்டில் ஏலம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.