பீகார் மாநில தேர்தல் பிரச்சாரத்தில் யோகி ஆதித்ய நாத் பேசுவது என்ன?

பாட்னா

பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தில் உபி முதல்வர்  யோகி ஆதித்ய நாத் கலந்து கொண்டுள்ளார்.

பீகார் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது.  ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் எதிர்க்கட்சியின் மெகா கூட்டணி ஆகிய இரண்டும் பலம் பொருந்தியதாக உள்ளன.  இதற்கிடையில் மத்திய தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வசிக்கும் லோக் ஜன்சக்தி கட்சியும் தனித்துப் போட்டியிட்டு வருகிறது.

பாஜக ஆளும் உபி மாநில முதல்வர் யோகி ஆதித்ய நாத் தேர்தல் பிரச்சாரத்தில் கலந்துக் கொண்டு வருகிறார்.  நேற்று தனது பிரசாரத்தில் அவர் ராம்கர், அர்வால் மற்றும் கராகத் ஆகிய மூன்று பகுதிகளில் பேரணியில் கலந்து கொண்டார்.   அவர் தனது உரையின் தொடக்கத்தில் வந்தேமாதரம் எனவும் இறுதியில் ஜெய்ஸ்ரீராம் என்னும் கோஷத்துடனும் பேசி வருகிறார்.

அவர் தனது பிரசாரங்களில், அதிகாரப் பூர்வ தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களுக்கு மட்டும் வாக்களித்து நிதிஷ்குமார் மீண்டும் முதல்வராக உதவுமாறு கேட்டுக் கொள்கிறார்.   இதன் மூலம் அவர் சிராக் பாஸ்வானின் லோக் ஜன்சக்தி கட்சிக்கு வாக்களிக்க வேண்டாம் என மறைமுகமாகக் கூறி வருகிறார். அவருடைய பரப்புரையில் ராமர் கோவில், காஷ்மீர், மற்றும் பாகிஸ்தான் முக்கிய இடம் வகிக்கிறது.

பல ஆண்டுகள் காத்திருப்புக்குப் பிறகு தற்போது ராமர் கோவிலுக்கு மோடி அடிக்கல் நாட்டியதை அவர் சுட்டிக்காட்டி பரப்புரை செய்கிறார்.  அடுத்ததாக விதி எண் 370 ஐ விலக்கி காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததால் தற்போது அங்கு பயங்கரவாதம் அழிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கிறார்.   பாகிஸ்தான் ஆதரவில் நடக்கும் அனைத்து தீவிரவாதங்களும் மோடி ஆட்சியில் ஒடுக்கப்பட்டு விட்டதாகவும் அவர் தனது பிரச்சாரத்தில் கூறி வருகிறார்.

இந்த பிரசாரங்கள் பீகார் மக்களிடையே எடுபடுமா என்பதைத் தேர்தல் முடிவுகள் மட்டுமே சொல்ல முடியும்.