டெல்லி: சோனியா, ராகுல் மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோருக்கு வழங்கப்பட்டு வந்த எஸ்பிஜி பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டு உள்ளது.

இந்திரா காந்தி மரணத்துக்கு பிறகு, ராணுவத்தின் ஒரு பிரிவினரால் எஸ்பிஜி என்ற படை அமைக்கப்பட்டது. ராஜீவ் மரணத்தால், எஸ்பிஜி சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டது.

அதன்படி, அனைத்து முன்னாள் பிரதமர்கள், பிரதமர் குடும்பத்தினருக்கு எஸ்பிஜி பாதுகாப்பு வழங்குவது என்று திருத்தம் கொண்டு வரப்பட்டது. பிறகு, 1999ம் ஆண்டில் ஆண்டு வாஜ்பாய் அரசில் இந்த விவகாரம் கையில் எடுக்கப்பட்டது.

எஸ்பிஜி பாதுகாப்பு மறு ஆய்வு செய்யப்பட்டு, முன்னாள் பிரதமர்கள் நரசிம்ம ராவ், தேவகவுடா, ஐ.கே.குஜ்ரால் ஆகியோருக்கு வழங்கப்பட்டு வந்த எஸ்பிஜி பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டது.

ராஜீவ் கொல்லப்பட்ட பின் சோனியா குடும்பத்தாருக்கு எஸ்பிஜி பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது. கிட்டத்தட்ட 28 ஆண்டுகளாக அவர்களுக்கு இந்த பாதுகாப்பு அளிக்கப்பட்டு வந்தது. அதில் தற்போது மாற்றம் கொண்டு வரப்படுகிறது.

இனி, அவர்களுக்கு எஸ்பிஜி பாதுகாப்பு வழங்கப்படாது என்று அதன் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக மூவருக்கும் சிஆர்பிஎப் மூலம் வழங்கப்படும் இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

அகமது பட்டேல்

இது குறித்து காங்கிரசின் மூத்த தலைவர் அகமது படேல் கூறுகையில், ஆட்சிக்கு வந்த நாளில் இருந்து தனிப்பட்ட அரசியல் பழிவாங்கலை முன் வைத்து பாஜக செயல்படுகிறது என்று குற்றம்சாட்டினார்.

சமீபத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு வழங்கப்பட்ட சிறப்பு பாதுகாப்புப் படை பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டது. தற்போது, சிஆர்பிஎப் சார்பில் வழங்கப்படும் இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. இனி மேல் பிரதமர் மோடிக்கு மட்டும் எஸ்பிஜி பாதுகாப்பு வழங்கப்படும், வேறு யாருக்கும் கிடையாது என்பது குறிப்பிடத் தக்கது.