நீர்வழி விமானச் சேவையை 2 நாட்களுக்கு ரத்து செய்த ஸ்பைஸ்ஜெட் நிறுவனம்

கமதாபாத்

நீர்வழி விமான சேவை தொடங்கி 5 நாட்களில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் பராமரிப்புக்காக 2 நாட்களுக்கு ரத்து செய்துள்ளது.

கடந்த மாதம் 31 ஆம் தேதி அன்று சர்தார் வல்லபாய் படேல் 145 ஆம் பிறந்த தினத்தை முன்னிட்டு அவருடைய பிரம்மாண்ட சிலை அமைந்துள்ள சர்தார் சரோவர் அணைக்கு நீர்வழி விமான சேவை தொடக்கப்பட்டது.  இதைப் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.  இந்த சேவை அகமதாபாத் நகரில் இருந்து அணை வரை செயல்பட்டது.

இந்த நீர்வழி விமான சேவை மூலம் அகமதாபாத் சபர்மதி ஆற்றங்கரையில் இருந்து 200 கிமீ தூரம் உள்ள அணைக்கு 40 நிமிடங்களில் செல்ல முடியும்.   அகமதாபாத் மற்றும் சர்தார் சரோவர் அணைப் பகுதியில் பல கட்டுமானங்கள் எழுப்பப்பட்டுள்ளன.  இவற்றின் மூலம் பயணிகள் நீர்வழி விமானத்தில் ஏற மற்றும் இறங்க வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த சேவை தொடங்கி ஒரு வாரத்துக்குள் அதாவது 5 நாட்களில் பராமரிப்பு காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.  இது குறித்து இந்த சேவையை வழங்கும் ஸ்பைஸ்ஜெட் ஏர்லைன்ஸ் நிறுவனம், இந்த நீர்வழி விமானம்  என்பது சிறிய எந்திரங்களைக் கொண்டது என்பதால் அதிக பராமரிப்பு தேவைப்படுவதாகத் தெரிவித்துள்ளது.  மேலும் கடந்த 4 தினங்களாக இந்த விமானம் அதிக அளவில் பயன்படுத்தப் பட்டுள்ளதால் பராமரிப்பு அவசியம் எனவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.