தூத்துக்குடி – பெங்களூரு புதிய விமான சேவை: ஜூலை 1-ந்தேதி தொடங்குகிறது

தூத்துக்குடி:

தூத்துக்குடி  பெங்களூரு இடையே  புதிய விமான சேவையை  ஜூலை 1-ந்தேதி முதல் தொடங்கப்பட இருப்பதாக விமான நிலைய  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தூத்துக்க்குடி அருகே வாகைகுளத்தில் விமான நிலையம் இயங்கி வருகிறது. இங்கு சிறிய ரக விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு தினசரி விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த விமான சேவை காரணமாக தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்ட மக்கள் பயனடைந்து வருகின்றனர்.

விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள தூத்துக்குடி விமான நிலையம்

சமீப காலமாக விமானப் பயணம் மேற்கொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், தூத்துக்குடியில் இருந்து மற்ற மாநிலங்களுக்கும் விமானங்கள் இயக்க கோரிக்கை விடுக்கப் பட்டு வந்தது.

அதைத்தொடர்ந்து, விமான நிலைய விரிவாக்க பணிகளும் நடைபெற்று வந்தன. தற்போது தூத்துக்குடி விமான நிலையம், ஏர்பஸ் போன்ற பெரிய விமானங்கள் தரையிறங்கும் வகையில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. விமானங்களுக்கு பெட்ரோல் நிரப்பும் முனையமும் இங்கு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தூத்துக்குடியில் இருந்து பெங்களூருக்கு விமானம்  இயக்க விமானத்துறை  முடிவு செய்துள்ளது. அதன்படி தூத்துக்குடியில் இருந்து பெங்களூருக்கு தனயிர் விமான சேவை வரும் 1ந்தேதிமுதல் இயக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் இந்த விமானத்தை இயக்குகிறது. பெங்களூருவில் இருந்து தினமும் பிற்பகல் 2.15 மணிக்கு புறப்பட்டு  மாலை 3.30 மணிக்கு தூத்துக்குடி வந்து சேரும். தூத்துக்குடியில் இருந்து மாலை 4 மணிக்கு புறப்படும் விமானம் மாலை 5.15 மணிக்கு பெங்களூரு போய் சேரும்.

மேலும், ஜூலை 26-ந்தேதி மற்றொரு தனியார் நிறுவனம் தூத்துக்குடி-சென்னை இடையே தினமும் புதிதாக 3 விமான சேவைகளை தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த விமான பயணத்திற்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளதாகவும், விமான பயணக் கட்டணம் ஸ்பைஸ் சேவர் டிக்கெட் கட்டணம்  2999 என்றும், ஸ்பைஸ் மேக்ஸ் கட்டணம் 3752 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.