வார்விக்ஷைர்: இங்கிலாந்து கவுன்டி கிரிக்கெட் போட்டி ஒன்றில், தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் காலின் அக்கர்மேன், 18 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை வீழ்த்தி, டி-20 போட்டியில் புதிய உலக சாதனையைப் படைத்துள்ளார்.

28 வயதான காலின் லெய்செஸ்டர்ஷைர் அணிக்காக விளையாடுகிறார். வார்விக்ஷைர் அணியின் மைக்கேல் பர்கெஸ், சாம் ஹெய்ன், வில் ரோட்ஸ், லியாம் பேன்க்ஸ், அலெக்ஸ் தாம்ஸன், ‍ஹென்றி புரூக்ஸ் மற்றும் ஜுட்டன் படேல் ஆகியோரின் விக்கெட்டுகளை காலிசெய்து, தனது அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் வெல்ல உதவினார்.

இதற்கு முன்னர் டி-20 போட்டியில் பந்துவீச்சு உலக சாதனையை 6-5 என்ற விகிதத்தில் தக்கவைத்திருந்தார் மலேசியாவைச் சேர்ந்த பந்துவீச்சாளர் அருள் சுப்பையா. சோமர்செட் அணிக்காக பந்துவீசிய அவர் கிளாமர்கான் அணியை துவம்சம் செய்தார்.

“இந்தப் போட்டி என் நினைவில் நீண்டகாலம் நிலைத்திருக்கும்” என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார் காலின். 190 ரன்களை சேஸிங் செய்த வார்விக்ஷைர் அணி, 134 ரன்களில் சுருண்டது.