ஆன்மீக அரசியல் சந்தையில் ஆன்மா -3

அற்புத மகிமைகளின் அடியிலே தோண்டிப் பார்த்தால்…

அ. குமரேசன்

யிர் என்று தனித்து இயங்கும் விசை எதுவும் இல்லை என்று பார்த்தோம். உயிர் தனியாக இயங்கினாலும் சரி, அல்லது உடலின் இயக்கமாக இருந்தாலும் சரி, அதை இயக்குகிற சக்தி ஒன்று இருக்கத்தானே வேண்டும் என்று கேட்கிறார்கள். உயிர் என்பதே இயங்குவதுதான், வேறொரு சக்தியால் இயக்கப்படுவதல்ல என்பதே பதில்.  இதே விளக்கம் ஆன்மா என்று கூறப்படுவதற்கும் பொருந்தும். உயிரை விடவும் மனிதச் சிந்தனையில் ஆழமாகப் பதிந்திருப்பது இந்த ஆன்மா அல்லது ஆத்மா என்ற சொல்தான்.

ஆன்மா என்பது தனக்குள் தேடிக் கண்டறிய வேண்டிய ஒன்று என்று தொடங்கி, புரிவது போலவும் புரியாமலும் என்னென்னவோ விளக்கங்கள் தரப்படுகின்றன. இந்த விளக்கங்களைத் தருவதில் ஒருவர் எவ்வளவுக்கு எவ்வளவு சொல் வளமும், பேச்சாற்றலும் உள்ளவராக இருக்கிறாரோ அவ்வளவுக்கு அவ்வளவு அவர் ஆன்மீக ஞானியாகப் போற்றப்படுகிறார். இப்படிப்பட்ட விற்பன்னர்களை மதம் சார்ந்த நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்கின்றன. அடுத்தடுத்த உரை நிகழ்வுகள், “அவர் சொல்வதைக் கேட்கும்போது ஆத்மா அமைதியாகிறது” என்று வாய்மொழியாகப் பரப்பப்படும் விளம்பரங்கள், குத்துவிளக்கு, சிலுவைக்குறி, பச்சைக்கொடி என உரையரங்க மேடையின் ஆன்மீக மணம் கமழும் பின்னணிகள், அமைதியே உருவாக வரவேற்று அமர வைக்கும் பக்தர்கள்/சீடர்கள்/தொண்டர்கள், வழங்கப்படும் புத்தகங்கள், “சென்ற முறை இவரது உரை கேட்டபிறகு என் வாழ்க்கையே மாறிவிட்டது” என்பதாக அந்த அரங்கிலேயே அருகிலிருப்பவர்கள் பேசுவதன் மூலம் ஏற்படுத்தப்படும் எதிர்பார்ப்புகள், மதத் தலைவர்கள் மட்டுமல்லாமல் அரசாங்க சிம்மாசனத்தில் இருப்பவர்கள் முதல், உள்ளூர் அதிகாரிகள் வரை கலந்துகொள்வதன் மூலம் கட்டமைக்கப்படும் நம்பிக்கைகள்… இப்படியாக அந்த ஆன்மீக உரையாளர்கள் முக்கியத்துவம் பெறுகிறார்கள்.

ஒரு கட்டத்தில் இந்த உரையாளர்கள் இது வரை இருந்த மத நிறுவன உறைகளிலிருந்து வெளியேறி சுய நிறுவனங்களாக உருவெடுப்பதும் உண்டு. அவர்களைப் பற்றி எழுதவும் அவர்களைக் காட்டவும் சில பல ஊடக நிறுவனங்களும் ஒத்துழைக்கும். அவர்களது பயணங்களுக்கும் சந்திப்புகளுக்கும் சில பல கார்ப்பரேட் நிறுவனங்கள் நிதி வழங்கும்…

இதிலேயே இரண்டு வகையினர் இருக்கிறார்கள். அற்புத மகிமைகளை வெளிப்படுத்தி அற்ப மானிடரெனப்படும் பக்தர்களை அசரவைத்துத் தங்களின் விசுவாசிகளாக மாற்றுகிறவர்கள் ஒரு வகையினர். மந்திர தந்திரங்களைக் கையாளாமால் ஆன்மீகக் கருத்துகளை மட்டும் பேசி மரியாதை பெறுகிறவர்கள் இரண்டாவது வகையினர்.  சாய்பாபா போன்றவர்கள் அந்தரத்திலிருந்து தங்கச் சங்கிலி, மோதிரம் உள்ளிட்ட பரிசுப் பொருள்களை வரவழைத்துப் பிரசாதமாகத் தருவது போல் இவர்கள் செய்வதில்லை என்ற அளவில்  இந்த இரண்டாவது வகையினர் மரியாதைக்குரியவர்கள்தான். ஆனால், அவர்கள்  செய்கிற ஆன்மீக அரசியல், அவர்கள் நடத்துகிற ஆன்மீக வணிகம், அவர்கள் வளர்க்கிற ஆன்மீக மயக்கம் ஆகியவற்றைத்தான் இவர்களும் செய்கிறார்கள், நடத்துகிறார்கள், வளர்க்கிறார்கள். ஆகவே இவர்களும் விமர்சனத்திற்கு உரியவர்கள்தான்.

முதல் வகையினர் எப்படிச் செயல்படுகிறார்கள் என்பதற்கு சாட்சியாய் ஒரு காட்சி: ஒரு குடும்பம் ஒரு புகழ்பெற்ற ஆன்மீக மடத்திற்கு வருகிறது. வெறும் தரிசனம் அல்லது கோவில் பூசையுடன் திரும்புவதல்ல அக்குடும்பத்தின் நோக்கம். மடத்தின் தலைவரான (சுவாமி, குருஜி, அன்னை, அம்மா, ஸ்ரீலஸ்ரீ, அடிகள், தேவ்ஜி என்று ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு விதமான பெயர்) சாமியாரைச் சந்திக்க வேண்டும், அவரிடம் தங்கள் மனதில் உள்ள கவலையைத் தெரிவிக்க வேண்டும், தீர்வுக்கு வழி கேட்டுச் செல்ல வேண்டும் என்ற நோக்கத்துடன் வந்திருப்பவர்கள் அவர்கள். அவ்வாறு வந்திருப்பவர்களைத் தனியொரு மண்டபத்தில் இரவு தங்கிக்கொள்ளுமாறு கூறி, அதற்கான வசதிகளையும் செய்துகொடுக்கிறார்கள்.

அந்த மண்டபமும் பக்தி மணம் பரப்பும் பின்னணி இசை, கூடவே நாசியிலும் மணம் ஏற்றும் ஊதுபத்திப் புகை, புராணக் கதைகளைச் சித்தரிக்கும் ஓவியங்கள் என அருள்மயமாய் அமைக்கப்பட்டிருக்கிறது. போதாக்குறைக்கு மந்திரிக்கப்பட்ட குடிநீரைப் பருகிவிட்டுப் படுக்குமாறு அறிவுரை. இரவு உணவாகத் தூய்மையான பிரசாதம். அதிகாலையில் எழுந்து, புனிதக் குளத்தில் நீராடிவிட்டு, எதுவும் புசிக்காமல் அருள்வாக்கு மண்டபத்திற்கு வருமாறு சீடர்கள் சொல்லிவிட்டுச் செல்கிறார்கள். இந்தச் சூழல்களெல்லாமாகச் சேர்ந்து உருவாக்கிய உளவியல் நிலையோடு இருப்பவர்களிடம், இறை வாழ்த்து எழுத்துகள் பதிக்கப்பட்ட அகலமான சமுக்காளம் தரப்படுகிறது. மறுநாள் ஆன்மீக வழிகாட்டியைப் பார்க்கப்போகும் பரவசத்தோடும் பரபரப்பு உணர்வோடும் படுக்கிறார்கள் குடும்பத்தினர். அருகில் விரிக்கப்பட்ட சமுக்காளத்தில் அதே போல் வந்து படுக்கிறது இன்னொரு குடும்பம்.

சிறிது நேரத்தில் இயல்பாக இரு குடும்பத்தாருக்கும் இடையே நீங்கள் யார், எங்கிருந்து வருகிறீர்கள் என்ற விசாரிப்புடன் பேச்சு தொடங்குகிறது. பக்கத்துச் சமுக்காளத்துக்காரர், தனது வாழ்க்கையில் நடந்த, பொதுவாக யாரும் மற்றவர்களிடம் சொல்லத் தயங்குகிற  மிக அந்தரங்கமான பிரச்சனை ஒன்றை (மகள் ஓடிப்போனது, மனைவி கோபித்துக்கொண்டு தனது பெற்றோர் வீட்டிற்குச் சென்று தங்கியது, மேலதிகாரியால் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டது, வியாபாரத்தில் பெரிய நஷ்டம் ஏற்பட்டது இத்தியாதிகள்…) இவர்களிடம் பகிர்ந்துகொள்கிறார். சுவாமிகளைச் சந்தித்ததால் அந்தப் பிரச்சனை எப்படி எளிதாகத் தீர்ந்தது என்ற கதையை நெக்குருகச் சொல்கிறார்.  மற்றொரு பிரச்சனை ஏற்பட்டிருப்பதைச் சொல்லி அதற்குப் பரிகாரம் கேட்டுச் செல்லவே இப்போது வந்திருப்பதாகக் கூறுகிறார். அந்தக் குடும்பத்தின் மீது ஏற்பட்ட நம்பிக்கையோடு இந்தக் குடும்பத்தினர் தங்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கலைப் பற்றிக் கூறுகிறார்கள். கவலையே வேண்டாம், சுவாமிகளைப் பார்த்தபின் எல்லாச் சிக்கல்களும் பறந்துவிடும் என்று அவர்கள் ஆறுதலாகக் கூற, நித்திரா தேவி வந்து அணைத்துக்கொள்கிறாள்.

அதிகாலை இருட்டில் எழல், குளத்தின் குளிர் நீரில் நீராடல் என்று முடித்துவிட்டு, அருள்வாக்கு மண்டபத்திற்குச் செல்கிறது புதிதாக வந்த குடும்பம். எல்லோரும் அமர்ந்து காத்திருக்கும்போது தெய்வீக நடை நடந்து வருகிறார் சுவாமிகள். தனக்கான இருக்கையில் எழுந்தருள்கிறார் (சாதாரண ஆள் இருக்கையில் அமர்ந்தால் அதை ‘உட்கார்ந்தார்’ என்று சொல்ல வேண்டும். அருட்செல்வர்கள் அமர்ந்தால் ‘எழுந்தருளினார்’ என்று சொல்ல வேண்டும்). தன் முன்னால் பயபக்தியோடு அமர்ந்திருக்கும் குடும்பத்தினரைப் பார்த்து, “…. இந்த ஊரிலிருந்து வந்திருக்கிற …. இன்னார்தானப்பா நீ,” என்று கேட்கிறார். அதிலேயே பாதி மூளையைக் கொடுத்துவிடுகிற குடும்பத்தினர், அடுத்ததாக சுவாமிகள், “நீ ஒன்றும் சொல்ல வேண்டா ம்.

அந்த ….. பிரச்சனைதானே…. அது அடுத்த பவுர்ண மிக்குள் தீர்ந்துவிடும்…. தினமும் காலையில் ஈர ஆடையுடன் இந்த மந்திரத்தைக் குடும்பத்தில் எல்லோரும் உச்சரித்து வாருங்கள்…” என்கிறார். மீதி மூளையையும் சமர்ப்பித்துவிட்டுப் புறப்படு கிறது அந்தக் குடும்பம். ஊர் திரும்பியதும், வீட்டிற்கு வருகிறவர்களிடமெல்லாம், தாங்கள் எதுவுமே சொல்லாமல் சுவாமிகள் தங்களைப் பற்றியும் தங்களுடைய பிரச்சனைகளைப் பற்றியும் தானாகப் பேசியது பற்றிப் பரவசத்தோடு சொல்கிறார்கள். சுவாமிக்கு எப்படித்தான் இதெல்லாம் தெரிந்தது என்று வியந்து வியந்து பேசுகிறார்கள். பக்கத்துச் சமுக்காளத்துக் குடும்பத்தினரிடம் பேசியது அவர்களின் நினைவுக்கு வருவதே இல்லை. ஆனால் அவர்கள் இப்படிப் பேசப்பேச சுவாமிகளின் மகிமை பற்றிய அடுத்த சுற்று வாய்மொழி விளம்பரம் பரவுகிறது.

பொதுவாக இப்படிப்பட்ட கவலைகளோடு செல்கிறவர்கள் தொடர்ந்து சும்மா இருக்கப்போவதில்லை என்பதால் அவர்களில் பலருக்குப் பிரச்சனைகள் தாமாகவே தீர்ந்துவிடும். ஆனாலும் அவர்கள், சுவாமிகள் சொன்னது அப்படியே பலித்தது என்றுதான் கருதுவார்கள். அந்த விளம்பரமும் பரவும். சிலரது விசயத்தில் உண்மையாகவே சுவாமிகள் சொன்னபடி தீர்வு ஏற்படும். ஆனால், எப்படி அந்தப் பக்கத்துச் சமுக்காள ரகசியம் தெரிய வருவதில்லையோ, அதே போலத்தான் சுவாமிகளுக்கு அரசாங்க அதிகார வளாகங்களுக்குள் இருக்கிற ஆழமான தொடர்பும் வலுவான செல்வாக்கும் தெரியவரப் போவதில்லை. ஒருவேளை சுவாமிகள் சொன்னபடி நடக்கவில்லை, பிரச்சனை  தொடர்கிறது, மேலும் சிக்கலாகிறது என்றால் இருக்கவே இருக்கிறது, “எல்லாம் விதி,” என்ற இறுதி வாக்கு.

இவ்விரு வகையினரிலும் சிலர் நேரடியாகவோ திரைமறைவிலோ ஒற்றை மத, ஒற்றைக் கலாச்சார ஆதிக்க அரசியலுக்குத் துணை போகிறவர்களாகவும் இருக்கிறார்கள். இங்கே மட்டுமல்ல, உலகம் முழுவதும் பல நாடுகளில் இப்படிப்பட்ட ஆன்மீகக் குருமார்கள் அந்தந்த நாட்டில் ஆதிக்கம் செலுத்தும் மதம் சார்ந்த அரசிய லோடு சம்பந்தப்பட்டவர்களாகவே இருக்கிறார்கள். அது தற்செயலானது என்று சொல்லிவிட முடியாது, திட்ட ‘மிட்ட ஏற்பாடாகவும் இருக்கும்.

இவர்களை வேறு இரண்டு வகையினராகவும் பிரித்துப் பார்க்கலாம். உண்மையிலேயே தாங்கள் பேசுவதையும் பின்பற்றுவதையும் உண்மை என்று நம்புகிறவர்கள் ஒரு வகையினர். இவர்கள் பெரும்பாலும் விவாதங்களிலோ விவகாரங்களிலோ ஈடுபடுவதில்லை. இன்னொரு வகையினர் இருக்கிறார்களே, அவர்கள் தாங்கள் செய்வது மோசடிதான் என்று தெரிந்தே செய்கிறவர்கள். அது அம்பலமாவது வெள்ளமெனப் பாயும் பணத்திற்கோ, எண்ணற்றவர்களை விசுவாசிகளாகப் பெற்றுள்ள தங்களது செல்வாக்கிற்கோ தடைபோட்டுவிடும் என்பதால் வரிந்து கட்டிக்கொண்டு தத்துவ விளக்கங்களில் ஈடுபடுவார்கள், தேவைப்பட்டால் இறைவனின் ஆட்சியை நிறுவுவதற்காக என்று சொல்லிக்கொண்டு மனிதர்களை வன்முறையில் இறக்கிவிடுவார்கள். ஆன்மீக வளாகங்களில் நடைபெறும் சித்துவிளையாட்டுகளை அம்பலப்படுத்த முயலும் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்ட பல நிகழ்வுகள் நடந்துள்ளன.  இதுவும் ஒரு ஆன்மீக அரசியல்தான்.

எல்லாச் சமயங்களையும் சார்ந்த ஆன்மீகக் குருமார்களாலும் அவர்களது அமைப்புகளாலும் கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், கைவிடப்பட்டோர் இல்லங்கள் போன்றவை நடத்தப்படுகின்றன. உண்மையான சேவை உணர்வோடு இவற்றை நடத்துகிறவர்களும் உண்டு,

தங்களது சொத்து வேட்டை, சொகுசு வாழ்க்கை போன்றவற்றை மறைப்பதற்கான ஒரு கவச ஏற்பாடாக இந்த நிறுவனங்களை நடத்துகிறவர்களும் உண்டு. “புகழ்பெற்ற” சில தாதாக்கள் இத்தகைய சேவை நிறுவனங்களை நடத்துவது பற்றிய செய்திகள் வெளியாகியிருப்பதும், திரைப்படங்கள் வந்திருப்பதும் நினைவுக்கு வருகிறது. அவர்களும் மேற்படி ஆன்மீக பீடாதிபதிகளும் நடத்துகிற கல்வி, மருத்துவம் போன்ற சேவையகங்களின் அடித்தளத்தில், இத்தகைய அடிப்படைக் கடமைகளை நிறைவேற்றத் தவறிய அரசின் அக்கறையின்மை, தோல்வி, துரோகம் எல்லாம் இருக்கின்றன. அரசு அமைப்பு மீது மக்களுக்கு ஏற்படக்கூடிய – ஏற்பட வேண்டிய – நியாயச் சீற்றத்தைத் தணிக்கிற உத்தியும் இதில் இருக்கிறது. பொதுச் சேவை என்பதை தனியார் வணிக வேட்டைச் சந்தையாக்குகிற ஆட்சியாளர்களின் கொள்கையை மக்கள் ஏற்கவைக்கும் ஒத்தடமாகவும் இந்த ஆன்மீக அறக்கட்டளை நிறுவனங்கள் அமைகின்றன. அந்த வகையிலும் ஆன்மீகம் ஒரு அரசியலாகிறது.

நேற்றைய அனுபவம் பற்றிய கசப்புகள், இன்றைய நிலைமை பற்றிய மிரட்சிகள், நாளைய வாழ்க்கை பற்றிய அவநம்பிக்கைகள் என நிறைந்துள்ள உலகில் குழப்பங்களும் அச்சங்களும் மக்கள் மனதில் பாய்ந்துள்ளன. அவர்களுக்கு இந்த ஆன்மீக வலையமைப்புகள் ஒரு பிடிப்பைத் தருகின்றன, வலி மறக்கச் செய்கின்றன என்பது உண்மை. இயற்கைக் கல்வியோ, பகுத்தறிவுச் சிந்தனைகளோ, இயக்கவியல் மற்றும் வரலாற்றுப் பொருள்முதல்வாதப் புரிதல்களோ பரவலாகச் சென்றடையாத நிலையில் இந்த ஆன்மீக அரசியல் வலுவான இடத்தைப் பிடித்துக்கொள்கிறது என்பதும் உண்மை.

உலகின் அத்தனை கோடி மனிதர்களில், இறை நம்பிக்கையாளர்கள், ஆன்மீகத்தின் மீது பற்றுள்ளவர்கள், ஏதோவொரு மதத்தின் வழியைப் பின்பற்றுகிறவர்கள்தான் ஆகப்பெரும்பாலோர். ஆயினும், நடைமுறை வாழ்க்கையில் அவர்கள் நாத்திகர்கள்தான்!

எப்படி? தொடர்ந்து பேசுவோம்.