உலகில் மிகுந்திருப்போர் யாரென்று பார்த்தால்…

அ. குமரேசன்

குடும்ப நண்பர் ஒருவர் தனது குடும்பத்தாருடன் கலந்துகொள்ளச் சென்ற ஆத்ம சரீர சுகமளிக்கும் ஒரு அற்புத மகிமை ஜெபக்கூட்டத்திற்கு என்னையும் அழைத்தார். “அங்கே வந்து, என்ன நடக்கிறது என்பதை நேரில் பார். அதற்கப்புறம் ஆண்டவனும் ஆத்மாவும் அற்புத மகிமையும் உண்மைதான் என்று நீயே புரிந்துகொள்வாய்,” என்றார். அன்று வேறு பணிகள் இல்லை என்பதாலும், எதிலும் ஒரு முறை இறங்கிப் பார்த்துவிடுவதில் உள்ள ஆர்வத்தின் காரணமாகவும் அவர்களோடு சென்றேன். குறிப்பாக, எதிர்க் கருத்துகளைக் கேட்கலாகாது என விசுவாசிகளைக் கட்டுப்படுத்துகிற மதத்தலைவர்கள் போல அல்லாமல், அவற்றையும் கேட்டறிந்தால்தான் சரியான வாதங்களைக் கொண்டுசெல்ல முடியும் என்ற மார்க்சிய வழிகாட்டலின் அடிப்படையிலும் அங்கே போனேன்.

அருளுரை வழங்கியவர் கோட் சூட் அணிந்திருந்தார், இசைக்கருவிகளை இயக்கியபடி ஒரு குழுவினர் ஆராதனைப் பாடல்கள் பாடிக்கொண்டிருந்தார்கள், வரிசைப்படி சில இயலாதவர்கள் மேடைக்கு வரவழைக்கப்பட்டார்கள், அவர்களின் தலையில் தொட்டு ஆசிர்வதித்த அருளாளர் அவர்கள் நலம் பெறுவதற்காக சிறப்பு ஜெபம் நடத்திக் கர்த்தரை வலியுறுத்திக்கொண்டிருந்தார். இவற்றையன்றி இதர பல ஆன்மீகத் திருவருள் கூட்டங்களுக்கும் அதற்கும் பெரிய வேறுபாடுகள் இல்லை.

கூட்டத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மேடைக்கு வரலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும், யாரை அழைப்பது என்று சீடர்கள் முறைப்படுத்திக்கொண்டிருந்தார்கள். அவர்களும் கோட் சூட் அணிந்திருந்தார்கள். சிலர் அந்த மேடையிலேயே தங்களுக்குக் குணமாகிவிட்டதாகப் பரவசத்தோடு அறிவித்தார்கள், அவர்கள் முறைப்படுத்தி அழைக்கப்பட்டவர்கள். சிலருக்கு ஆசிர்வாத மொழிகள் மட்டும் வழங்கப்பட்டு, தொடர்ந்து ஜெபக்கூட்டங்களில் கலந்துகொண்டால் விரைவில் குணமாகும் என்று நம்பிக்கைச் சொற்கள் கூறப்பட்டன. அவர்கள் தாங்களாகக் கூட்டத்திலிருந்து மேடைக்கு வந்தவர்கள்.

வீட்டுக்குத் திரும்பிய பின், என் மனதில் மாற்றம் ஏற்பட்டிருக்கும் என்ற எதிர்பார்ப்புடன், “என்ன நினைக்கிறாய்,” என்று கேட்டான் நண்பன். சுவையான உணவை வழங்கியவாறு அவனது இணையரும் பிள்ளைகளும் நான் சொல்லப்போவதைக் கவனித்தார்கள்.

மேடைக்குச் சிலர் திட்டமிட்டபடி வரவழைக்கப்பட்டது, சிலர் தாங்களாக வந்தது இரண்டுக்கும் இடையேயான வேறுபாடு புரியவில்லையா என்று கேட்டேன். “உன்னுடைய அலுவலகத்தில் மேலதிகாரி உன்னை சித்திரவதை செய்வது பற்றி என்னிடம் அடிக்கடி புலம்புவாயே, அந்தப் பிரச்சனையில் தலையிடக் கர்த்தரிடம் வேண்டுகோள் விடுக்குமாறு அந்த அருளுரையாளரைக் கேட்டுக்கொள்ளலாம் என்று உனக்கு ஏன் தோன்றவில்லை,” என்றும் கேட்டேன்.

“பக்கத்து வீட்டுக்காரர் உங்கள் மனையிலிருந்து ஒரு அரையடியை ஆக்கிரமித்து வைத்திருப்பது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருக்கிறீர்களே, வேலிச்சுவரைத் தாண்டி அந்த அரையடி நிலத்தை உங்கள் மனைக்குள்ளேயே இழுத்துவிடுமாறு கர்த்தரைக் கேட்டுக்கொள்ள நீ ஏன் வேண்டுகோள் விடுக்கவில்லை,” என்று நண்பனின் இணையரைக் கேட்டேன்.

ஜெபக்கூட்டத்தில் கலந்துகொண்டதால் தங்கள் மனம் ஆறுதல் அடைந்திருக்கிறது, உற்சாகம் ஏற்பட்டிருக்கிறது என்றெல்லாம் என்னிடம் சொல்லிக்கொண்டிருந்த இருவரும் மௌனமானார்கள். சிறிது நேரம் கழித்து, “உனக்கு வேற வேலையே இல்லை,” என்றான் நண்பன். புன்னகைத்தேன். நான் கேட்டதில் கடுப்பாகிவிட்டார்கள் என்றாலும், அன்பின் சுவை கலந்த உணவைப் பரிமாறுவதில் எந்தக் குறையும் வைக்கவில்லை. அந்த உரையாடலின்போது உணவு மேசையில் உடன் அமர்ந்திருந்த குழந்தைகள் குறுகுறுவென்று பார்த்துக்கொண்டிருந்தது எனக்கொரு நம்பிக்கையைக் கொடுத்தது.

நான் கேட்டது தொடர்பாக அந்தக் குழந்தைகள் பெற்றோரிடம் தொடர்ந்து விசாரித்திருப்பார்கள், அவர்கள் இப்படியெல்லாம் பேசக்கூடாது என்று கூறி குழந்தைகளைத் “திருத்தியிருப்பார்கள்” என்று எதிர்பார்க்கலாம். ஆயினும் கேள்வி விதை விழுந்த மனதில் மேலும் மேலும் கேள்விகள் துளிர்க்காமல் போகாது. சரியான பதில்கள் விளையாமல் போகாது. கேள்விதானே உண்மையான ஞானத்தின் திறவுகோல்?

ஆனால், அந்தத் திறவுகோலைக் கையிலெடுக்கவிடாமல் தடுக்க வீட்டில் நடைபெறும் சிறப்பு ஜெபங்கள், அந்த ஜெபங்களுக்கு வருகிற குருமார்களின் அறிவுரைகள், உறவினர்களின் அச்சுறுத்தல்கள் என்ற நிகழ்வுகள் தொடரும் என்றும் எதிர்பார்க்கலாம்.

இப்படி எல்லாச் சமயங்களிலிரும் ஞானக்கதவை மூடிவைத்து, கேள்வித் திறவுகோலைத் துருப்பிடிக்கச் செய்கிற ஏற்பாடுகள் இருக்கின்றன. சீருடைகளும் பூசைச் சடங்குகளும் வேண்டுதல் மொழிகளும்தான் மாறுபடுமேயல்லாமல், நோக்கத்தில் மாறுபாடில்லை. தங்களைப் பின்பற்றும் மக்களை வேலிகளுக்குள்ளேயே சுற்றி வரவைப்பதுதான் அந்த நோக்கம்.

கேள்வி கேள் என்பது பகுத்தறிவு. அப்படிக் கேள்விகள் கேட்டவர்களால்தான் உலகச் சமுதாயமே இன்றைய வளர்ச்சிகளைச் சந்தித்திருக்கிறது. ஆப்பிள் பழம் ஏன் மரத்திலிருந்து கீழே விழ வேண்டும், ஏன் கீழிருந்து மேலே போகக்கூடாது என்று கேள்வி கேட்டவரால்தான் புவியீர்ப்பு விசை என்ற இயற்கை ரகசியம் கண்டறியப்பட்டது.

அது கண்டுபிடிக்கப்பட்டதால்தான் அதை மீறிச்செல்லும் விமானங்களும், விண்கலங்களும் உருவாகின. விண்கலங்களின் மூலம் செலுத்தப்படும் செயற்கைக் கோள்கள் உலகத்தையே ஒரு கிராமமாக்கி, அன்றாட நடப்புகளை அவை நிகழ்கிறபோதே அறியவும், பூமியின் எந்த மூலையில் இருப்போருடனும் உரையாடி நட்பை வளர்க்கவும், வணிகத் தொடர்புகளை விரிவுபடுத்தவும், அரசியல் உறவுகளை மேம்படுத்தவும் உதவிக்கொண்டிருக்கின்றன.

நியூட்டன்களும் கலிலியோக்களும் ஆர்யபட்டாக்களும் இப்படிப்பட்ட இயற்கை அறிவியல் கேள்விகளை எழுப்பினார்கள், எழுப்புகிறார்கள், எழுப்பிக்கொண்டே இருப்பார்கள். அதே போல் கார்ல் மார்க்ஸ்களும் அம்பேத்கர்களும் பெரியார்களும் சமூக அரசியல் கேள்விகளை எழுப்பிக்கொண்டே இருப்பார்கள். உழைப்புச் சுரண்டலுக்கும் சாதிய ஒடுக்குமுறைக்கும் சமூக அநீதிக்கும் முடிவு கட்டும் போராட்டப் பயணம் தொடர்ந்துகொண்டே இருக்கும்.

நம்பிக்கைகளைக் கேள்விக்கு உட்படுத்தக்கூடாது என்பது ஒரு மோசமான ஒடுக்குமுறை. இப்படியெல்லாம் கேள்வி கேட்டால் உன் ஆன்மாவை ஆண்டவன் கைவிட்டுவிடுவான், அது அந்தரத்தில் அலைந்துகொண்டிக்கும் என்பது ஒரு மோசமான அச்சுறுத்தல். இப்படியெல்லாம் கேள்வி கேட்டால் நமது ஆன்மா அமைதியிழந்துவிடும் என்பது ஒரு மோசமான அச்சம். ஆன்மா பற்றிய அச்சமாக வெளிப்பட்டாலும் அதன் உள்ளே இருப்பது என்னவென்றால், நடைமுறை வாழ்வியல் சார்ந்த கவலைகள்தான். இப்படிக் குதர்க்கமாகக் கேள்வி கேட்டால்  நமக்குக் கிடைக்க வேண்டிய நல்ல வாழ்க்கை கிடைக்காமல் போய்விடும், தொழில் விருத்தியடையாமல் தேங்கிவிடும், பதவி உயர்வு இல்லாமல் போய்விடும், மனதுக்கு நெருக்கமானவர்களின் கடுமையான உடல் நோய் குணமாகாமல் போய்விடும், குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்பட்டுவிடும் என்ற அச்சத்தின் அடிப்படையிலேயே ஆகப்பெரும்பாலோர் தங்களின் கேள்விச் சிறகுகள் வெட்டப்படுவதற்கு உடன்படுகிறார்கள்.

அவ்வாறு உடன்பட்டுப்போவது குறித்த உறுத்தல் இல்லாமல் போவதை உறுதிப்படுத்தும் வகையில், “நம்பிக்கைகளைக் கேள்விக்கு உட்படுத்தக்கூடாது,” என்று கூறி வாதக் கதவை மறுபடியும் மூடிவிடுவார்கள். ராமர் பாலம் கட்டினாரா, சிவனார் நக்கீரரை எரித்தது சரிதானா, ஆண்டாள் என்றொருவர் உண்மையிலேயே இருந்தாரா, ஏசுநாதர் உண்மையாகவே உயிர்த்தெழுந்து மேலுலகம் சென்றாரா, அல்லா மெய்யாகவே நபிகளிடம் பேசினாரா… இப்படியான எந்தக் கேள்விகளுக்கும் ஒரே பதில், “நம்பிக்கைகளைக் கேள்வி கேட்காதீர்,” என்பதே.

இப்படிப்பட்ட அருள்மிகு நிகழ்வுகள் எல்லாம் ஏதோவொரு கடந்த காலத்தில் மட்டுமே நடந்ததாக இருப்பது ஏன், பிற்காலத்திய  மகிமைச் செய்திகள் எதுவுமே வரவில்லையே ஏன், அப்படி நிகழ்ந்திருந்தால் அத்தகைய திருச்செயல்கள் பற்றி சமயங்களின் நூல்களில் சேர்க்கப்படாதது ஏன்… இப்படியான எல்லா ஏன்களுக்கும் ஒரே விடைதான்: “நம்பிக்கைகளைக் கேள்வி கேட்காதீர்.”

ஆன்மீகச் சொற்பொழிவாளர்கள் சிலருக்கு என்னை அறிமுகப்படுத்தி, இவருடைய அறியாமையைப் போக்குங்கள் என்று கேட்டுக்கொண்ட நண்பர்கள் உண்டு. அறியாமையில்தான் இருக்கிறேன் என்றால் அது போக்கப்படுவது நல்லதுதானே என்று நானும் அவர்களோடு உரையாடியிருக்கிறேன். அவர்களும் மரியாதையுடனேயே பேசியிருக்கிறார்கள். ஒரு கட்டத்திற்கு மேல், இப்படியான “ஏன்” கேள்விகளை முன்வைக்கிறபோதெல்லாம் அவர்கள் இன்னொரு பதிலைக் கூறி உரையாடலை முடி(றி)த்திருக்கிறார்கள். “விதண்டாவாதத்திற்கு பதிலளிப்பதில்லை,” என்பதே அந்த பதில்.

இக்கேள்விகள் பக்குவமற்றவைதான் என்றால், என்னைப் போன்ற அறியாமை இருளில் மூழ்கியிருப்போருக்குத் தெளிவை ஏற்படுத்தி நல்வழிப்படுத்துவதற்கான வாய்ப்பாக அல்லவா ஆன்மீகவாதிகள் எடுத்துக்கொள்ள வேண்டும்? அதை விடுத்து விதண்டாவாதம் என்பதும், கேள்வி கேட்காதே என்பதும் தங்களது வாதத்திறன் மீது அவர்களுக்கு நம்பிக்கை இல்லாததாலா அல்லது ஆன்மீகத்தின் மீதே முழு நம்பிக்கை இல்லாததாலா? பயந்து, பணிந்து, பரவசமாகிப் போகிற வர்களுடன் மட்டுமே உரையாடத் தயாராக இருப்பது எவ்வளவு வசதியானது! தெளிந்து, துணிந்து, பரவலாகக் கேள்வி கேட்பவர்களுடன் பேச மறுத்து விதண்டாவாதம் எனத் தள்ளுவது எப்பேற்பட்ட நழுவல் உத்தி!

இன்னொரு சாரார் இருக்கிறார்கள். அவர்கள் கேள்வி கேட்காதே என்று தடுப்பதில்லை, விதண்டாவாதம் எனத் தள்ளுவதில்லை. ஆனால், “நாத்திகராய் இருந்து இக்கேள்விகளைக் கேட்டால் தெளிவு ஏற்படாது, ஆன்மீகத்தை ஏற்றுக்கொண்டு கேட்டால்தான் தெளிவு ஏற்படும்,” என்பார்கள். இவர்களில் ஒரு சிலர் ஒரு படி மேலே போய், “நாத்திகராய் இருந்துகொண்டு ஆத்திகம் பற்றிக் கேள்வி எழுப்பத் தகுதி இல்லை,” என்பார்கள். கேள்வி எழுப்புவதற்கான ஒரே தகுதி யார் என்ன சொன்னாலும் கண்ணை மூடிக்கொண்டு ஏற்பதற்கு மாறாக, எது பற்றியும் ஐயம் கொள்கிற மனநிலைதானேயன்றி நாத்திகராக இருப்பதா அல்லது அநாத்திகராக இருப்பதா என்பதல்ல. இறை நம்பிக்கையாளராகவே இருக்கிற ஒருவர் இதே கேள்விகளைக் கேட்டால், நீ அந்தக் கடவுளைக் கும்பிடுகிற ஆள், ஆகவே இந்தக் கடவுள் பற்றிக் கேட்பதற்குத் தகுதி இல்லை என்று சொல்லிவிடுவார்கள்.

அதே சாமியை வணங்கிடும் ஒருவர் இதே கேள்விகளைக் கேட்டால், உன் மனதில் நாத்திக விஷம் கலந்துவிட்டது என்பார்கள். பய பக்தியோடு கேட்டால், “அஞ்ஞானக் கண் கொண்டு பார்த்தால் இதுவெல்லாம் புரியாது, ஞானக் கண் கொண்டு பார்த்தால்தான் புரியும்,” எனக்கூறி, கேட்டவரை கேட்டராக்ட் சிகிச்சைக்கு அனுப்பிவிடுவார்கள்.

உலக மக்கள் தொகையில் எந்தக் கடவுளையும் வணங்காதவர்கள்தான் மூன்றாவது இடத்தில் இருக்கிறார்கள் என்கிறது ஒரு ஆய்வு. மதம் மற்றும் பொதுவாழ்வுக்கான பியூ அமைப்பு என்ற நிறுவனம் 2012ல் வெளியிட்ட, 230 நாடுகளின் சுமார் 2,500 மக்கள்தொகை கணக்கெடுப்பு விவரங்களை அடிப்படையாகக் கொண்ட ஆய்வறிக்கையின்படி, உலகில் முதலாவதாக  220 கோடிப்பேர் அதாவது  32 விழுக்காட்டினர் கிறிஸ்துவம் சொல்கிற கடவுளை நம்புகிறவர்கள். இரண்டாவதாக 160 கோடிப்பேர் இஸ்லாம் காட்டுகிற கடவுளை ஏற்றவர்கள். மூன்றாவதாக 110 கோடிப்பேர் எந்தக் கடவுளையும் நம்பாதவர்கள், எந்த மதத்தையும் பின்பற்றாதவர்கள்.

இந்தியாவில் பெரும்பான்மை மக்களின் நம்பிக்கைக்குரிய, வேறு பல நாடுகளில் சிறுபான்மையினராக வாழக்கூடியவர்களின் சமயமாகிய இந்துத்துவம் கற்பிக்கும் கடவுள்களை வணங்குகிறவர்கள் 100 கோடிப்பேர்தான். புத்த மத நம்பிக்கைகளோடு இருப்பவர்கள் 500 லட்சம் பேர். இதர சமயங்கள் போதிக்கிற வழியில் இறைமார்களை நம்புகிறவர்கள் இந்தப் பட்டியலுக்குப் பின்னால்தான் வருகிறார்கள் என்கிறது அந்த அறிக்கை.

புள்ளிவிவர அடிப்படையிலான இந்தத் தகவல் ஒருபுறமிருக்க, இன்னொருபுறம், வாழ்க்கை அடிப்படையிலேயே பார்த்தாலும் நாத்திகர்களே மிகுதி, அல்லது முழுமையாகக் கடவுளை நம்பாத அரை அநாத்திகர்களே மிகுதி! என்னதான், நீ முற்றிலுமாக உன்னைப் பரம்பொருளோடு ஐக்கியப்படுத்திக்கொள் என்று எல்லாச் சமயங்களும் வழி காட்டினாலும், அப்படியெல்லாம் ஒப்படைத்துக்கொள்ள முடியாது என்று அரை நம்பிக்கையோடு வாழ்கிறவர்களே உலகெங்கும் இருக்கிறார்கள்.

வாழ்க்கையிலிருந்து இதற்குச் சில சான்றுகள் இதோ: தேர்வுக்குப் படிக்கிற ஒரு மாணவர், தேர்வுக்கு விழுந்து விழுந்து படிக்கிறார், தனது பெற்றோர் காட்டிய கடவுளிடமும் வேண்டுதல் விடுக்கிறார். விடைத்தாள்களைக் கடவுள் பார்த்துக்கொள்வார் என்று அவர் படிக்காமல் இருப்பதில்லை. அவராவது விவரம் புரியாத இளையவர். வயதானவர்கள் எப்படி? தனது பதவி உயர்வுக்காக அல்லது பணியிட மாற்றத்திற்காக முயற்சி செய்கிற ஒருவர் தனது கடவுளிடம் பிரார்த்தித்தது போதுமென இருப்பதில்லை. மேலதிகாரிளின் பாராட்டைப் பெறுகிற வகையில் வேலைகளைச் செய்யவோ, உரிய அன்பளிப்புகளை வழங்கவோ தவறுவதில்லை. உடல் நலம் மோசமாகச் சீர்குலைந்த ஒருவரது உற்றார், அவருக்காக நேர்ந்துகொண்டதால் எல்லாம் நல்லபடியாக முடியும் என்று சும்மா இருப்பதில்லை, உயிர்ப்பாதுகாப்பை வணிகமாக்கிய கட்டணமுயர்ந்த மருத்துவமனைக்குக் கொண்டுசென்று, எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை, எப்படியாவது இவரைக் காப்பாற்றிவிடுங்கள் என்று மருத்துவரிடம் கேட்டுக்கொள்ள மறுப்பதில்லை.

இப்படிக் கடவுளையும் முழுமையாக நம்ப முடியாமல், சுய முயற்சியையும் கைவிட முடியாமல் இரட்டை வாழ்க்கை வாழ்கிறவர்களே புவியெங்கும் மிகப்பெரும்பான்மையினராகப் பரவியிருக்கிறார்கள். கடவுளை முழுமையாக நம்பாதவர்கள் நாத்திகர்கள் என்றால், இவர்களும் நாத்திகர்கள்தானே!

இஸ்லாமிய அன்பர்கள் நடத்திய ஒரு விழாவில் என்னையும் பேச அழைத்தார்கள். அவர்களது நம்பிக்கையோடு தொடர்புள்ள அந்த விழாவில் நானொரு நாத்திகன் என்று தெரிந்தே பேசச் சொல்கிற பண்பு அவர்களிடம் இருக்கிறது. அப்போது நான், மேற்படி சிந்தனையைப் பகிர்ந்துகொண்டேன். விழாத்தலைவர் தமது நிறைவுரையில் இதைக் குறிப்பிட்டு, “அல்லாவை வேண்டிக்கொண்டே உன் குதிரையை லாயத்தில் கட்டி வைக்கத் தவறாதே என்று நபிகள் நாயகம் கூறியிருக்கிறார்,” என்று மேற்கோள் காட்டினார். உடனே நான் எழுந்து, “அப்படியானால் நபிகளும் ஒரு நல்ல நாத்திகர்தான் என்று தெரிகிறது,” என்றேன். அவையினர் எல்லோரும் ரசித்துச் சிரித்தனர்.

இவ்வாறு மாற்றுக் கருத்துகளோடும் நம்பிக்மைககளோடும் நம்பிக்கை மறுப்புகளோடும் தோழமையைப் பேணி வளர்க்க முடிவது எவ்வளவு அழகானது! கடவுள் மறுப்பாளர்களை மட்டுமல்லாமல், வேறு கடவுள்களை வணங்குவோரையும் கூடப் பகைவராய்க் கருதுவது எவ்வளவு அருவருப்பானது! ஆன்மீக நம்பிக்கை எப்படி மதவெறியாக மாறுகிறது? அங்கேதான் ஆன்மீகம் ஒரு அரசியலாகிறது.

இன்னும் பேசுவோம்.