மரணத்தைத் தொட்டுத் திரும்பியவர்களின் ஆத்ம அனுபவம்

அ. குமரேசன்

ப்படிச் சுற்றி வந்தாலும் ஆன்மீகம் பற்றிய உரையாடலும் ஆன்மா பற்றிய பேச்சும் ‘நாத்திகம் – எதிர் – அநாத்திகம்’ தொடர்பான விவாதமாக மாறுகிறது. அதன் அடுத்த தளமாக ‘மத நம்பிக்கை – எதிர் – மத மறுப்பு’ தொடர்பான வாதப்போராக மாறுகிறது. இறை நம்பிக்கையோடு குறிப்பிட்ட ஒரு மதத்தைச் சார்ந்திருப்பவர்கள், இறை நம்பிக்கை இருந்தாலும் மதச் சார்பு இல்லாதவர்கள் ஆகிய இரு தரப்பாருமே மனித உடலில் ஆன்மா/ஆத்மா என்ற ஒன்று இருப்பதாகக் கூறுவதில் ஒன்றுபடுகிறார்கள். அதே போல, நாத்திகவாதிகள் என்று அறியப்பட்டவர்களில் கூட சிலர், “கடவுள் இல்லை ஆனால் ஆன்மா இருக்கிறது” என்பார்கள்.

அறிவார்ந்த புரிதலின் அடிப்படையில் கடவுளோ, இயற்கைக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தியோ இல்லை என்ற முடிவுக்கு வராமல், மற்றவர்களிடமிருந்து மாறுபட்ட ஆளாகத் தன்னைக் காட்டிக்கொள்வதற்காகக் கடவுளாவது கிடவுளாவது என்று பேசத்தொடங்கி யவர்கள் அவர்கள். முழுக்க முழுக்கப் பகுத்தறிவு சார்ந்து, அறிவியல் தேடல் சார்ந்து சிந்திப்போர் மட்டுமே ஆன்மாவும் இல்லை என்ற தெளிவோடு இருக்கிறார்கள்.

ஆன்மாவை அமைதிப்படுத்துவது, ஆன்மாவுக்கு விடுதலையளிப்பது, ஆன்மாவில் புனிதம் சேர்ப்பது… இவைதாம் ஆன்மீகம் என்று எல்லா வகையான ஆன்மீகவாதிகளும் கூறுகிறார்கள். சில ஆண்டுகளுக்கு முன் ஏதோவொரு பண்டிகை விடுமுறையையொட்டி விருந்துக்கு வரச்சொல்லியிருந்த உறவினர் வீட்டிற்குக் குடும்பத்தோடு சென்றிருந்தோம். உணவு மேசையில் பரிமாறப்பட்ட பல்சுவை விருந்தை ஒரு பிடி பிடித்த பிறகு, தொலைக்காட்சியில் பரிமாறப்பட்ட பல்சுவை விருந்தைக் கவனிக்க அமர்ந்தோம். இசைஞர் இளையராஜா பற்றிய ஒரு சிறப்புத் தொகுப்பு ஒளிபரப்பப்பட்டது.

அதில் பேட்டியளித்த திரைப்பட நடிகரும் தயாரிப்பாளருமான ராஜ்கிரண், “சில கசப்பனுபவங்களால் சோர்வாக இருந்தேன். என்னுடைய படத்திற்கு இசைஞானி அமைத்துக்கொடுத்த பின்னணி இசையைக் கேட்டதும் மனதில் ஒரு உற்சாகம் ஊறியது. ‘இப்போதுதான் எனக்கு ஒரு ஆத்மதிருப்தி ஏற்படுகிறது,’ என்று அவரிடம் சொன்னேன். அதற்கு இளையராஜா, ‘ஆத்மாவுக்கு ஏது திருப்தி,’ என்று உடனே கேட்டார். எவ்வளவு பெரிய தத்துவத்தை எவ்வளவு சாதாரணமாகச் சொல்லிவிட்டார் என்று நான் பிரமித்துப்போய்விட்டேன்,” என்று கூறினார்.

இப்படித்தான் சிலருக்கு ஆன்மீகப் பட்டை கட்டிவிடப்படுகிறது என்பது ஒருபுறமிருக்க, நிகழ்ச்சியைப் பார்த்துக்கொண்டிருந்த நான் உடனே இப்படிக் கேட்டேன்: “ஆத்மாவே ஏது? அதைக் கண்டுபிடித்த பிறகல்லவா ஆத்மாவுக்கு ஏது திருப்தி என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும்!”

எல்லோரும் புன்னகைத்தார்கள் என்றாலும், யாரும் நான் சொன்னதை ரசிக்கவில்லை என்பது புரிந்தது. ஏனென்றால் ஆத்மா என்பதாக ஒரு ஆழ்ந்த கருத்து தலைமுறை தலைமுறையாகப் பதிப்பிக்கப்படுகிறது, புதுப்பிக்கப்படுகிறது. ஆண்டவனை ஏற்காதவர்கள் கூட ஆத்மாவை ஏற்கிறார்கள். “நான் என் ஆத்ம திருப்திக்காகவே எழுதுகிறேன்,” என்று பேசுகிற எழுத்தாளர்களைப் பார்த்திருக்கிறேன். அதே போல் தங்களது ஆத்ம திருப்திக்காக ஓவியம் தீட்டுகிறவர்கள், சிலை செதுக்குகிறவர்கள், அரசியலில் இறங்குகிறவர்கள், சமூகப் பணிகளை மேற்கொள்கிறவர்கள், மருத்துவம், கல்வி, சட்டம், தொழில்நுட்பம், வணிகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஈடுபடுகிறவர்கள் இருக்கிறார்கள்.

ஆத்ம திருப்தி என்று அவர்கள் சொல்ல வருவது உண்மையில் மனநிறைவைத்தான். ஆனால், மன நிறைவு என்று சொன்னால் அது ஏதோ பொருளுலகு சார்ந்த மேலோட்டமான ஒன்றாகவும், ஆத்ம திருப்தி என்று சொன்னால் அது ஏதோ அருளுலகு சார்ந்த ஆழமான ஒன்றாகவும் எடுத்துக்கொள்ளப்படுகிறது. சொல்கிறவர் கேட்கிறவர் இரு தரப்பாருமே அப்படி எடுத்துக்கொள்ளப் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறார்க ள்.

“ஆன்மா இல்லை எனக் கூறும் அறிவிலிகளே, நீங்கள் எந்த ஆதாரத்தில் அப்படிச் சொல்கிறீர்கள்,” என்று சில ஆன்மீகக் குருமார்கள் கேட்பதுண்டு.  இல்லாத ஒன்றுக்கு எப்படி ஆதாரம் காட்ட முடியும்? இருப்பதாகச் சொல்லப்படுவது எதுவோ, அது உண்மை  யிலேயே இருக்குமானால் அதற்குத்தானே ஆதாரம் ஏதேனும் இருக்கும்? அதற்குத்தானே ஆதாரம் காட்ட வேண்டும்? இந்த எளிய வாதநியாயத்தைக் கூட யோசிக்கத் தயாராக இல்லாமல், விதண்டாவாதிகளை அந்தக் குருமார்கள் சரியாக மடக்கிவிட்டதாக வியந்து அவர்கள் மீதான மதிப்பை மேலும் வளர்த்துக்கொள்கிறார்கள் விசுவாசிகள். அவர்களில் பலரது விசுவாசத்தில் அவரவர் மதம் சார்ந்த குருபீடங்களின் அருள்வாக்கு அல்லது அதிகாரச் செல்வாக்கு மூலமாக நிறைவேற வேண்டிய தங்களது சொந்தத் தேவைகள் பற்றிய அக்கறையும் கலந்திருக்கும் எனலாம்.

குருபீடங்கள் நிலங்களை வளைத்துப்போடுவது, மரபின் பெயரால் பொது நடைமுறைகளை அவமதிப்பது, பணத்தில் புரள்வது, பாலியல் அத்துமீறல்களில் ஈடுபடுவது, குழந்தைப் பருவத்தினரின் சுதந்திர மூளையை அடக்கிப் பீடத்திற்கான சேவைகளில் முடக்குவது உள்ளிட்ட நெறிமீறல்களைச் சுட்டிக்காட்டுவோர் மீது வன்மத் தாக்குதல் தொடுக்கவும் தயங்காத அளவுக்கு அல்லவா அந்த விசுவாசம் இருக்கிறது!

அந்தக் குருபீடங்களும் விசுவாசப் படைகளும் வரவேற்றுக் கொண்டாடும் வகையில் 2011ம் ஆண்டில் ஒரு பரபரப்புச் செய்தி வந்தது. ஏதோவொரு நாட்டின் அறிவியலாளர் குழு ஒன்று பத்தாண்டு காலமாக நடத்தி வந்த ஆய்வின் அடிப்படையில், மனித உடலுக்கு அப்பாற்பட்ட ஆத்மா ஒன்று இருப்பது உண்மைதான் என்று நிறுவப்பட்டுவிட்டதாக அந்தச் செய்தி கூறியது. அடுத்தடுத்த ஆண்டுகளிலும் அதே போன்ற செய்திகள் வந்தன. பின்னர் விசாரித்தபோது, 2011ல் வந்த செய்தியைத்தான் வெவ்வேறு வடிவங்களில் வெளியிட்டுப் புதிய ஆய்வு என்பது போல் வெளியிட்டு வந்திருக்கிறார்கள் என்று தெரியவந்தது.

ஆனாலும், அறிவியல் உலகம் அந்தச் செய்தியைக் குப்பை என்று தள்ளிவிடவில்லை. ஆராயாமல் அப்படியே ஏற்கவோ, தனக்கு எதிரானதை ஏற்காமல் தள்ளவோ சொல்வது மதம்! அறிவியல் அப்படிச் சொல்லாது. எதையும் ஆராய்ந்து விவாதித்து ஏற்பதும் தள்ளுவதுமே அறிவியல். அந்த வகையில் மேற்படி ஆய்வு முடிவும் ஆராய்ச்சிக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. பெரும்பாலும் அனுமானங்களின் அடிப்படையிலேயே ஆத்மா பற்றிய விளக்கங்கள் இருப்பதை ஆய்வாளர்கள் எடுத்துக்காட்டினார்கள். அதே வேளையில், மரணத்தைத் தொட்டுவிட்டுத் திரும்பியவர்கள் பற்றிய செய்திகள் அவ்வப்போது வருகின்றன அல்லவா? அவ்வாறு மரணத்தின் விளிம்புக்குப் போய்விட்டு, தீவிர மருத்துவ சிகிச்சையின் பலனாக மீண்டுவந்தவர்களுடன் பேசியபோது, அவர்கள் பிரகாசமான ஒன்றைப் பார்த்ததாகவும் மிக அமைதியாக உணர்ந்ததாகவும் தங்களுடைய உடலை விட்டு விலகி நின்று நடப்பதைப் பார்க்கிற உணர்வு கூட ஏற்பட்டதாகவும் கூறினார்கள் என்று அந்தத் தகவல்கள் தெரிவித்தன.

இதை அறிவியலாளர்கள் அக்கறையோடு எடுத்துக்கொண்டார்கள். இங்கிலாந்து நாட்டின் சௌதாம்ப்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் நான்கு ஆண்டுகளாக இது தொடர்பான ஆய்வை மேற்கொண்டார்கள். 2016ல் அந்த ஆய்வுத் தகவல்களும் கருத்துகளும் வெளியிடப்பட்டன. பல்வேறு நாடுகளையும் சேர்ந்த மருத்துவமனைகளில், மரணப்படுக்கையில் இருந்த 2,060 பேர், அவர்களது ஒப்புதலோடு இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டார்கள். மாரடைப்பு ஏற்பட்டதால் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்ட வர்கள் அவர்கள். இறந்த பின் உடலை மருத்துவக் கல்விக்கு வழங்குவது போல, தங்களது ஒப்புதல் மரண விளிம்பு உணர்வுகள் பற்றிய ஆய்வுக்கும், ஆத்மா பற்றிய உண்மைகளைக் கண்டறிவதற்கும் பயன்படுவது பெருமைக்குரியதுதான் என்று அவர்களும் அவர்களது குடும்பத்தினரும் கருதியதால் அந்த ஒத்துழைப்புக் கிடைத்தது.

அந்த 2060 பேரில் 330 பேர்தான் சிகிச்சையின் பலனாக உயிர் பிழைத்தார்கள். அவர்களில் 132 பேர்தான் கேள்விகளுக்குப் பதிலளிக்கக் கூடிய நிலையில் இருந்தார்கள். பெரும்பாலானவர்களுக்குத் தங்களது இதயத் துடிப்பு நின்றிருந்த நேரத்தில் மூளையில் எத்தகைய உணர்வு இருந்தது என்பதை நினைவுகூர முடியவில்லை. இதயம் நின்று மறுபடி இயங்கும்போது மூளையில் ஏற்படக்கூடிய காயம் அல்லது அந்நேரம் செலுத்தப்படும் மயக்க மருந்துகளின் தாக்கத்தால் மறதி ஏற்படுவது இயல்புதான் என்று மருத்துவர்கள் விளக்குகிறார்கள்.

உடலிலிருந்து விடுபட்டது போன்ற உணர்வு ஏற்படுவதும் மருத்துவ விளக்கத்திற்கு உட்பட்டதே. எடுத்துக்காட்டாக, அறுவை சிகிச்சைகளுக்காக என மயக்க நிலையை ஏற்படுத்தச் செலுத்தப்படும் கேட்டமைன் என்ற மருந்தின் விளைவாக உடலிலிருந்து விடுபட்டது போன்ற உணர்வு ஏற்படும். ஒரு அமைதி உணர்வு, ஒரு பரவச உணர்வு ஏற்படும். (மதுவோ, கஞ்சாவோ, இதர பல போதை மருந்துகளோ கூட இப்படிப்பட்ட உணர்வை ஏற்படுத்தக்கூடியவைதான்.) வலியை உணர்கிற மூளையின் செயல்பாடு கிட்டத்தட்ட ஓய்வுக்கு வருவதால் ஏற்படுகிற உணர்வு அது. அப்படித்தான் மரணத்தைத் தொடும் தருவாயிலும் ஏற்படுகிறது.

மரணத்தை நெருங்கிய அனுபவம் (நியர் டெத் எக்பீரியன்ஸ்) என்பதை மருத்துவ அறிவியல் உலகில் என்.டீ.இ. என்று சுருக்கமாகக் குறிப்பிடுகிறார்கள். மூளையின் நினைவுப் பகுதியில் ஏற்படும் அதிர்வுகள் அல்லது இழுப்புகள் காரணமாக என்.டீ.இ. போன்றதான உணர்வு ஏற்படுகிறது. இதயத் துடிப்பு நிற்பதைத்தான் மரணம் என்று சொல்கிறோம். பொதுவாக இதயம் நின்ற பிறகு சிறிது நேரம் மூளை இயங்கிக்கொண்டிருக்கும். அந்தச் சிறிது நேரம் என்பது ஆகப்பெரும்பாலும் சில நொடிப்பொழுதுதான். மரணம் நிச்சயமான நிலையில், அதுவரையில் உடலோடு பொருத்தப்பட்டிருந்த உயிர் காப்புக் கருவிகள் நீக்கப்பட்ட நோயாளிகளின் மூளை நரம்புச் செயல்பாடும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.

மீண்டு வந்தவர்களுடன் உரையாடியதில் அவர்களில் 20 விழுக்காட்டினர் மட்டுமே தங்களது என்.டீ.இ. நேரத்து உணர்வை மறக்காமல் நினைவில் வைத்திருந்தார்கள். “அமைதியாக உணர்ந்தேன்,” “நேரத்தின் ஓட்டம் மிகவும் வேகம் பிடிப்பது இருந்தது,” “நேரம் மிக மந்தமாகக் கடப்பது போல் இருந்தது,” “மிகவும் ஒளிர்ந்த ஒரு வெளிச்சம் தெரிந்தது,” “எங்கும் எதையுமே பார்க்க முடியாத இருட்டு படர்ந்திருந்தது,” “விலங்குகள் நடமாடுவது போலத் தோன்றியது,” “எதற்குள்ளோ இழுக்கப்படுவது போன்ற அனுபவம் கிடைத்தது,” என்பன உள்ளிட்ட உணர்வுகளை அவர்கள் வெளிப்படுத்தினார்கள்.

அவர்களில், தங்கள் உடலை விட்டு விலகி நிற்பது போல உணர்ந்ததாகக் கூறியவர்கள் 13 விழுக்காட்டினர்தான். ஒரே ஒருவர், அறுவை சிகிச்சைக் கூடத்தின் ஒரு மூலையில் நின்றுகொண்டு நடப்பதைப் பார்த்துக்கொண்டிருப்பது போல இருந்தது,” என்றார். ஒருவர் அப்படி விலகி நிற்கிறபோது சிகிச்சைக்கான மின்னணுக் கருவியிலிருந்து வந்த ‘பீப்’ ஒலி கேட்டதாகத் தெரிவித்தார்.

இத்தகைய அனுபவங்களின் பின்னால் என்ன இருக்கும்? ஏற்கெனவே வாழ்க்கைப் பாதையில் அவர்கள் அறிவுரைகளாகவோ, அதிசயச் செய்திகளாகவோ, மரணத்திற்குப் பிந்தைய “அவ்வுலகம்” பற்றிய கதைகளாகவோ கேள்விப்பட்ட, மனதில் (மூளையில்) வலுவாக பதிந்துவிட்ட எண்ணங்களின் வெளிப்பாடாக இருக்கலாம். இதற்கு முன் வாழ்க்கையில் ஒருபோதும் பார்த்திராத, யாரிடமிருந்தும் கேட்டிராத, எங்கேயும் படித்திராத, ஐம்புலன்களால் எவ்வகையிலும் அறிந்திராத ஒன்றைப் பற்றிக் கற்பனை செய்து பார்க்க முடியுமா? எவராலும் முடியாது. அப்படித்தான் மரணத்தை நெருங்கிய நொடிகளில் ஏற்படும் உணர்வுகளும் அமையும்.

இவ்வாறு மரண விளிம்பில் நின்றது தொடர்பாக வாக்குமூலம் அளித்தவர்களில் 2 விழுக்காட்டினர் சொன்ன தகவல்கள் மட்டுமே, உண்மையாக அந்தச் சூழலில் பெருமளவுக்குச் சரியாக இருந்தன. “இரண்டு விழுகிகாட்டினர்தானே அப்படிச் சொன்னார்கள் என்பதால் அதைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடக்கூடாது. அவர்களால் எப்படி அந்தச் சூழலைச் சரியாகச் சொல்ல முடிந்தது என்ற அடுத்த கட்ட ஆராய்ச்சியை நோக்கிச் செல்ல வேண்டியுள்ளது,” என்று சௌதாம்ப்டன் பல்கலைக்கழக ஆய்வுக்குழுவினர் சொல்கிறார்கள். அறிவியல் என்பதே இயற்கை உண்மையை அறிவதுதான் என்பதால், இந்த உண்மை என்ன என்று கண்டுபிடித்து உலக மக்கள் முன் வைப்பதற்கான அடுத்த கட்ட ஆராய்ச்சி தொடர்கிறது.

இயற்கை பற்றிய புதிர்களைக் களைந்து, வாழ்க்கை பற்றிய மிரட்சிகளை விரட்டுகின்றன அறிவியல் ஆய்வுகள். வேடிக்கை என்னவென்றால், நவீன அறிவியல் வளர்ச்சிகளைப் பயன்படுத்திக்கொண்டே அறிவியலுக்குப் புறம்பான மயக்கச் சிந்தனைகள் போதிக்கப்படுவதுதான். இயற்கையைப் புரிந்துகொண்டு நேசிக்கத் துணை செய்யும் தேடல்களுக்கோ, ஆதாரப்பூர்வ விசாரணைகளை அடிப்படையாகக் கொண்ட ஆய்வுகளுக்கோ இடமளிக்காத ஆன்மீகப் போதனைகளைக் கேள்வியின்றி ஏற்க வேண்டுமென வற்புறுத்துவதில் ஒரு அரசியல் இருக்கிறது. ஒரு வகையில், அறிவியல் தேடல் என்பதே கூட அந்த அரசியலுக்கு எதிரான, ஒரு மாற்று அரசியல்தான்.

இந்த இரண்டு அரசியல்கள் பற்றியும் நிறைவாகப் பேசுவோமே…