ஏகாந்தப் பெருவெளியில் ஏக்கமும் அச்சமும் நீங்கிட நம்பகமான மாற்று

அ. குமரேசன்

ரசியல் என்பதற்கான ஆங்கிலச் சொல்லாகிய பாலிடிக்ஸ், கிரேக்க மொழியின் பாலிஸ் என்ற சொல்லிலிருந்து பரிணமித்தது. ஊரை நிர்வகித்தல் என்பது அதன் பொருள். ஊர் நிர்வாகம் என்பது பின்னர் ஒரு சமூகத்தை நிர்வகித்தல், ஒரு நாட்டை நிர்வகித்தல் என்று விரிவடைந்தது. தமிழில் அரசு – அரசியல்  என்ற சொற்கள் சங்க இலக்கிய காலத்திலேயே இருந்துள்ளது. கீழடித் தடயங்கள் தமிழர் வாழ்வின் தொன்மையை எடுத்துக்காட்டுகிற பின்னணியில் இங்கு ஊர் நிர்வாகங்களும் அதற்கான சொல்லாக்கங்களும் நெடுங்காலமாக இருந்து வந்திருக்கும் என்று உணர்த்துகின்றன. மேலும், ஒரு ஊராகவோ சமூகமாகவோ நாடாகவோ நிர்வகிப்பதென்பது எல்லாக் கண்டங்களிலும் எல்லா இனங்களிலும் இருந்து வந்திருக்கும் என்பதால் அதைக் குறிப்பதற்கு அந்தந்த மண்ணிலும் மொழியிலும் அரசியல் என்பதற்கு ஈடான சொல் உருவாகியிருக்கும் எனக்கொள்ளலாம்.

கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் “அரசியல் பிழைத்தார்க்கு அறம் கூற்றாகும்” என்ற நீதியைச் சொல்லவே தாம் ‘சிலப்பதிகாரம்’ இயற்றியதாக இளங்கோவடிகள் சீத்தலைச் சாத்தனாரிடம் தெரிவித்தார் எனக்கூறும் பாயிரம் உள்ளது. அரசியல் என்ற சொல் பாலிஸ் என்பதை விடவும் கச்சிதமாகப் பொருள் விளங்கச் செய்கிறது. அரசு, அதன் அதிகாரம் ஆகியவற்றை அடையாளப்படுத்திய இந்தச் சொல், பின்னர் நேரடியாக அரசாங்க அதிகாரம் சாராத செயல்பாடுகளுக்கும் பொருந்துவதானது. ஆட்சியில் இருப்பவர்களின் செல்வாக்கு, அதிகார பலம் ஆகியவை மட்டுமல்லாமல், ஆட்சியைக் கைப்பற்றப் போராடுகிறவர்களின் ஆளுமை, மக்கள் ஆதரவு ஆகியவற்றையும் இந்தச் சொல் குறிப்பிடுகிறது.

ஏதோவொரு அதிகார மையத்தை மட்டுமல்லாமல், அந்த மையத்திற்கான எதிர்ப்பையும் குறிப்பதற்கு அரசியல் என்ற சொல்லையே கையாளுகிறோம். ஒரு தொழில் நிறுவனத்தின் நிர்வாகக் குழுவில், ஒரு சங்கத்தின் பொறுப்பாளர் அமைப்பில் என்று எங்கும் எதிலும் அரசியல் இருக்கிறது.

குடும்பத்திற்குள் நடக்கிற அரசியலைக் குறைத்து மதிப்பிட முடியுமா? குடும்ப அரசியலில் ஜனநாயகத்தைக் கடைப்பிடிக்கிறவர்கள் மகிழ்ச்சிகரமாக வாழ்கிறார்கள். ‘குடும்பத்தலைவர்’ என்பவரின் அதிகாரத்திற்குக் கட்டுப்படுத்தப்பட்டிருக்கும் குடும்பங்கள் கசப்புணர்வுகளோடு வாழ்க்கையைக் கடத்துகிறார்கள்.

எப்படி வந்தது இந்த அரசியல்? புவியெங்கும் வனமாகவே இருந்த காலகட்டத்தில், ஆதிச் சமூகத்தில், இயற்கைச் சீற்றங்கள், இதர விலங்கினங்களின் தாக்குதல்கள், பிற சமூகக் குழுக்களுடனான மோதல்கள் ஆகிய சூழல்களில் முன்னனுபவத்தால் வளர்த்துக் கொண்ட அறிவின் அடிப்படையில் வழிகாட்டியவர்கள் இருந்தார்கள். அதைத் தொடக்கநிலை அரசியல் என்று புரிந்துகொள்ளலாம். ஆயினும் அதில் அனுபவ அறிவுக்கே முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

உணவையும் பாதுகாப்பான இடத்தையும் தேடி நகர்ந்துகொண்டே இருந்த மனிதர்கள் ஆங்காங்கே தலைமுறைகளாக வாழ்ந்து அந்தந்த வட்டாரத்துச் சமூகங்களாக  அடையாளம் பெற்றார்கள். எப்போது பயிர்களைத் தேடி அலைய வேண்டியதில்லை, இருக்கிற இடத்திலேயே விளைவிக்க முடியும் என்று கண்டுபிடித்தார்களோ, அந்த வேளாண் அறிவியலைத் தொடர்ந்து, நிலத்திற்குப் புது மதிப்புத் தோன்றியது. அதுவரையில் யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் தாய் மடியாகக் கருதிப் புரண்ட நிலம் எனும் நல்லாள், இப்போது வலிமை வாய்ந்தவர்களின் உடைமைப் பொருளாக்கப்பட்ட திருப்பம் நிகழ்ந்தது.

வேளாண்மைப் புரட்சியைத் தொடர்ந்து ஊர்கள் உருவாகின. பல ஊர்கள் சுற்றியிருக்க மையத்தில் நகரங்கள் கட்டப்பட்டன. உடல் வலிமை, ஆள் வலிமை, ஆயுத வலிமையைப் பயன்படுத்தி நிலத்தைக் கூறுபோட்டுக் கைப்பற்றியவர்களுக்கிடையே மோதல்கள் தொடர்ந்தன. ஒரு துண்டு நிலத்தைக் கூட சொந்தமாகப் பெற முடியாதவர்களுக்கும் நிலவுடைமையாளர்களுக்கும் இடையேயான மோதல்களும் நீடித்தன.

அந்த மோதல்களில் தலையிட்டுக் கட்டுப்படுத்துகிற ஏற்பாடாகத்தான் முதன் முதலில் ஊராட்சி முறை அரசியல் உருவெடுத்தது. நகர அரசியல் எட்டிப்பார்க்காத பழங்குடி மக்களிடையே இது இன்றளவும் வலுவாக இருப்பதைக் காண முடியும்.

இன்றைக்கு அரசியல் களம் எப்படியெல்லாம் வடிவமெடுத்திருக்கிறது, அதில் என்னவெல்லாம் நடக்கிறது என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். இதிலே ஆன்மீகத்தை எதற்காக இழுக்க வேண்டும்? ஆன்மீகமே ஒரு அரசியல்தான் என்று எதற்காகச் சொல்ல வேண்டும்?

விடை மிக எளிதானது. நிலத்தையும் இதர இயற்கை வளங்களையும் சொந்தமாக்கிக்கொண்டவர்களிடையே ஏற்பட்ட சண்டைகளில், ஊர் நிர்வாகத் தலைவரோ சமூகக் குருவோ தலையிட்டு ஒரு தீர்ப்புச் சொல்கிறார்கள் என்றால் சம்பந்தப்பட்டவர்கள் அதை எப்படி ஏற்பார்கள்? துண்டுநிலம் கூடக் கிடைக்காதவர்களாக, மற்றவர்களின் நிலங்களில் அடிமை வேலை செய்து பிழைத்தாக வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டவர்கள் எதிர்த்துக் கிளம்பியிருப்பார்கள். அவர்கள எப்படி தீர்ப்பை ஏற்பார்கள்?

அங்கேதான் கடவுள் கொண்டுவரப்படுகிறார். “இந்தத் தீர்ப்பை அளிப்பது நானல்ல, என் மூலம் கடவுள் அளிக்கிற தீர்ப்பு இது,” என்று சொல்லப்படுகிறது. அது கட்டுப்படுத்துகிறது.

ஆதிச் சமூகத்தில் திடீரென வந்து தாக்கும் இயற்கைச் சீற்றங்களுக்கெல்லாம் நமக்கு அப்பாற்பட்ட சக்திதான் காரணம் என்ற நம்பிக்கை போதுமானதாக இருந்தது. அதற்கும் முன்னதாக, உடன் வாழ்ந்த மனிதர்கள் இறந்துபோனால், அவர்களின் உடலி லிருந்து பிரிந்து சென்ற ஆவி சுற்றிக்கொண்டே இருக்கும் என்று நம்பினார்கள். அந்த ஆவி மறுபடியும் தனது உடலைத் தேடிப் புகுந்துகொள்ளக்கூடும் என்ற நம்பிக்கையோடு உடலைப் பல நாட்கள் வைத்திருந்தார்கள். அப்படியெல்லாம் ஆவி வந்து புகாது என்பதை நம் தாத்திகளும் தாத்தன்களும் புரிந்துகொள்ளப் பல காலம் ஆகியிருக்கும். இன்றைக்கும் கூட, வேறொரு உடலில் புகுந்துகொண்ட ஆவியை விரட்டுவதற்குப் பூசைகள் நடத்தப்படுகின்றன. ஆவிக்குரிய எழுப்புதல் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.

ஆம், ஒரு வகையில் ஆன்மாவுக்கும் மூத்தது ஆவி எனலாம்!

ஊர் வளர வளர, ஊர் நிர்வாக முறைகள் மாற மாற, பல ஊர்கள் இணைக்கப்பட்டு நாடுகளாகின்றன. அந்த நாடுகளின் ஆட்சி சிம்மாசனத்தில் அமர்கிறவர்களுக்கு ஏற்ப ஆன்மீகமும் செதுக்கப்படுகிறது. முறையான வழிபாடுகள், சடங்குகள் என்றெல்லாம் வகுக்கப்படுகின்றன. அந்தந்த வட்டாரத்து மக்கள் நம்பி வழிபட்ட வனத் தெய்வங்கள், ஊரைப் பாதுகாத்த வீரர்கள், குடும்பத்துக்கு மட்டுமல்லாமல் குலத்திற்கே அன்னையாய் அரவணைத்த தலைமைப் பெண்கள்…. இத்தகைய வரலாறுகளும் கற்பனைகளோடு கலந்து பெரு வழிபாட்டு முறைகள் உருவாக்கப்படுகின்றன.

பேரரசுகள் பற்றிய வரலாறுகள் அனைத்திலும், அரியனைக்கு சமமாக ஆன்மீக குருமார்கள் அமர்ந்து வழிகாட்டியதைப் பார்க்கலாம். அந்தக் குருமார்களே அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றச் சதிகளில் ஈடுபட்ட கதைகளும் நிறைய இருக்கின்றன. முதலாளித்துவ வளர்ச்சி, அதில் நாடாளுமன்ற ஜனநாயகம் இரண்டும் நிலைநாட்டப்படுகிற வரையில் ஆன்மீகவாதிகள் அதிகாரம் செலுத்தினார்கள். நம் நாட்டில் இன்றும் அவர்கள் எப்படி அரசியலில் தலையிடுகிறார்கள் என விளக்க வேண்டுமா என்ன?

இயற்கை வளங்களை ஆக்கிரமிப்பது உள்ளிட்ட அத்துமீறல்களுக்குக் கூச்சப்படாத பல அருளாளர்களின் விழாக்களுக்கு அரசாங்க அதிகார பீட நாயகர்கள் வருகிறார்கள் என்றால், அது அவர்களது சொந்த ஆன்மீக நம்பிக்கையால் மட்டுமல்ல, அந்த அருளாளர்களைப் பின்பற்றுகிறவர்களின் ஆதரவுத் தளத்தைத் தங்களது அரசியலுக்குப் பயன்படுத்துவதற்காகவும்தான். அண்மையில் ஏற்பட்டதல்ல இது.

இந்தியாவின் ஈடற்ற இதிகாசமான ‘மகாபாரதம்’ நெடுங்கதையில், ‘பகவத் கீதை’ ஏன் சேர்க்கப்பட்டது என்பது பற்றி எழுதிய ஆய்வாளர் ஆர்.எஸ். சர்மா, அரசியல் அதிகாரத்தை ஒரு தத்துவமாக நிலைநாட்டத்தான் என்று பதிலளித்திருப்பார். மக்கள் சமூகத்தைப் பல அடுக்குகளாகப் பிரித்துப் பாகுபடுத்துகிற ஏற்பாட்டை சட்டப்பூர்வமாகச் செயல்படுத்துவதற்கு சாணக்கியர் ஒரு ‘அர்த்த சாஸ்திரம்’ வகுத்தது போல, அந்தப் பாகுபாட்டைத் தத்துவமாகவே ஏற்கவைப்பதற்கு கீதை சொல்லப்பட்டது என்று ஆய்வாளர்களும் சமூகவியலாளர்களும் கூறுகிறார்கள். பிற்காலத்தில் பாரதக் கதையைச் செழுமைப்படுத்தியவர்கள் கீதையிலும், பொதுவாக ஏற்கத்தக்க கூறுகளைச் சேர்த்தார்கள் என்றும் கூறப்படுகிறது.

மற்றொரு ஈடில்லா இதிகாசமான ‘ராமாயணம்’ மற்றும் இதர பல புராணக்கதைகளும் இப்படி அரசியல் அதிகாரத்தைச் சுற்றியே காலத்தை வென்று நிற்கும் கற்பனை வளத்தோடு புனையப்பட்டன.

இதையெல்லாம் வாதங்களுக்கும் எதிர்வாதங்களுக்கும் உட்படுத்துகிற ஆரோக்கியமான சமூக மனநிலையை வளர்ப்பதற்கு மாறாக, இந்து மதத்தைக் குறைகூறுகிறார்கள் என்று கூறி சிந்தனைக் கதவு மூடப்பட்டுவிடுகிறது என்பது கவலைக்குரியது. கதவை மூடுவது எதற்கென்றால், இறுக்கமாக வைக்கப்பட்டிருக்கும் சாதிக் கட்டுமான அரசியலும், பெண்ணடிமைத்தன அரசியலும் வெளியேறிவிடக்கூடாது என்பதற்காகத்தான் என்று ஏன் சொல்லக்கூடாது?

இப்படிக் கதவை மூடியே வைக்கிற திருக்காரியத்தை பைபிள், குரான் உள்பட உலகின் எல்லா மத வேதங்களும் செய்கின்றன. உன் கேள்விகள் அனைத்துக்கும் அன்றைக்கே பதில் சொல்லப்பட்டுவிட்டது என்று மனிதர்களைத் தேடலில் இறங்க விடாமல் தடுக்கிற திருக்காரியம் அது. அந்தக் கதவுகளை உடைத்துக்கொண்டோ, வேறு வாசல்களைக் கண்டுபிடித்தோதான் உண்மைக்கான தேடல் தேங்கிப்போகாமல் தொடர்கிறது.

இப்படிப்பட்ட ஆன்மீகத்தில் அரசியல் அதிகாரம் மையம் கொண்டிருக்கிறது என்பதை ஏற்கலாம், ஆனால் சிலர் ஆன்மீகப் பயணம் என்று தன்னந்தனி யாகக் கிளம்புகிறார்கள், தங்களுக்குள் எதையோ தேடுகிறார்கள். அப்படிப்பட்ட, எந்த மதமும் சாராத ஏகாந்த ஆன்மீகத்தில் அரசியல் எங்கிருந்து வருகிறது? எல்லோர் வாழ்விலும் தாக்கம் செலுத்திக்கொண்டி ருக்கிற அரசியல் அநீதிகள் கண்டு, சினம் கொண்டு, அந்த அநீதிகளைத் தட்டிக்கேட்கிற மக்களுக்கான அரசியல் இயக்கத்தோடு இணையாமல், யாரோ எப்படியோ போகட்டும், எனது ஏகாந்தமே பரமானந்தம் என்று ஒதுங்குவதும், அதுவே மெய்ஞானம் என ஒதுங்க வைப்பதும் எவ்வளவு பெரிய அரசியல்! நியாயங்களுக்காகப் போராடுவதும் அரசியல்தான், போராட விடாமல் முடக்குவதும் அரசியல்தான்.

ஆன்மீக அரசியலில் இவ்வளவு இருக்கிறபோது, நன்கு படித்தவர்கள் கூட இதை நம்புவது ஏன்? நவீன மடிக்கணினியில் செயல்படுவோர் கூட, அதை மடியில் வைத்துத் திறந்ததும் திரையில் அவர்களுடைய நம்பிக்கைக்குரிய இறையுருவம் தோன்றுவது போல் அமைத்து, அதை வணங்கிவிட்டுத்தான் விசைப்பலகையைத் தட்டத் தொடங்குகிறார்கள். மதிப்பெண்களைக் குவிப்பதற்கான கல்வியும் வாழ்க்கையை மதிப்பிடுவதற்கான கல்வியும் ஒன்றல்ல.

இன்றைய உலகமயப் பொருளாதார வேட்டைச் சூழலில், நாளைய வாழ்க்கைக்கான உத்தரவாதத்தை அளிக்கிற ‘சிஸ்டம்’ எங்கும் இல்லை. தன்னளவிலாவது அப்படிப்பட்ட பாதுகாப்பான வாழ்க்கை அமையவேண்டும் என்ற ஏக்கம், கிடைத்திருக்கிற வாழ்க்கை கையைவிட்டுப் போகாமல் இருக்க வேண்டும் என்ற அச்சம் – இந்த இரண்டும்தான் அவர்களில் பலரை ஆன்மீக நம்பிக்கையின்பால் தள்ளுகின்றன.

மக்களின் இந்த நிகழ்கால ஏக்கம், எதிர்கால அச்சம் இரண்டையும் அப்பட்டமான மதவாத அரசியல் சக்திகள் பயன்படுத்திக் கொள்கின்றன. ஆன்மீக அரசியல் என்று சொல்வதும் இதன் மற்றொரு சாயல்தான்.

ஆன்மீகத்தை அதிகார மலையேறுவதற்கான வாகனமாகப் பயன்படுத்த முயல்கிறவர்கள் உறுத்தலில்லாமல் அதைத் தொடர்ந்து செய்துகொண்டுதான் இருப்பார்கள். ஆனால் தங்களது எளிய நம்பிக்கைகளை இப்படி அரசியல் சதுரங்கக் காய்களாக்குகிறவர்கள் குறித்து மக்கள்தான் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். தங்களின் ஏக்கங்களும் அச்சங்களும் நீங்குவதற்கான ஒரே நம்பகமான மாற்று அரசியல் வழி பற்றிப் புரிந்துகொள்ள வேண்டும். தனக்காக அல்லாமல் சக மனிதர்களின் விடுதலை, முன்னேற்றம், சமத்துவம் ஆகியவற்றுக்காகப் போராட்டக் களத்தில் இறங்குவதே அந்த மாற்று.

முற்றும்.