தோஹா: கத்தார் நாட்டில் நடந்த உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரின் 5000 மீட்டர் ஓட்டத்தில், விளையாட்டு உணர்வுக்கு உதாரணமாய் இரண்டு வீரர்களின் செய்கை பலத்த பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

கினியா நாட்டைச் சேர்ந்த டாபோ மற்றும் அருபா நாட்டைச் சேர்ந்த பஸ்பி ஆகியோர்தான் அந்த இரண்டு வீரர்களும்.

பந்தயத்தில் ஓடிக்கொண்டிருந்தபோது, ஒரு கட்டத்தில் திடீரென பஸ்பி நிலைக்குலைந்தார். அப்போது அவரின் அருகில் ஓடிக்கொண்டிருந்த டாபோ, தன் ஓட்டம்தான் தனக்கு முக்கியம் என்று நினைத்து அப்படியே விட்டுவிட்டுச் சென்றுவிடவில்லை.

பஸ்பியின் உதவிக்கு வந்தார். பிற வீரர்கள் வெகுதூரம் ஓடிவிட்டதைப் பற்றி அவர் கவலைப்படவில்லை. பஸ்பியை கையால் தாங்கிக்கொண்டு சிறிதுதூரம் ஓடியவர், பின்னர் அவரின் கையை தனது தோளின் மேல் போட்டுக்கொண்டு, அவரை கிட்டத்தட்ட இழுத்துக்கொண்டே சென்று எல்லைக்கோட்டை தொட்டார்.

இந்த இருவரின் செயலையும் அரங்கில் கூடியிருந்த ரசிகர்கள் எழுந்து நின்று கைதட்டி ஆரவாரம் செய்தனர். இன்னொருவரின் உதவியுடன் ஓடியதால் பஸ்பி போட்டியிலிருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டாலும், டாபோவின் செயலுக்காக, அவருக்கு விளையாட்டு நேர்மைக்கான தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது.