பள்ளிகளில் தினசரி 1 மணி நேரம் மாணவர்களுக்கு விளையாட்டு பயிற்சி: அமைச்சர் செங்கோட்டையன்

சென்னை:

மிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் மாணவ மாணவிகளுஙககு தினசரி 1 மணி நேரம் விளையாட்டு, யோகா, நடன பயிற்சி அளிக்க வேண்டும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை  அமைச்சர் செங்கோட்டையன்  அறிவித்து உள்ளார்.

தமிழக மாணவர்கள் விளையாட்டில் ஈடுபடுவது குறைந்து வருவதாக சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், பெற்றோர்களே, பிள்ளைகளை விளையாட விடுவது இல்லை என்றும் இந்த நிலையை மாற்ற பள்ளிகளில் கூடுதல் விளையாட்டு ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், தினசரி ஒரு மணி நேரம் பள்ளி மாணவ மாணவிகள் விளையாட ஒதுக்க வேண்டும் என்று தெரிவித்து உள்ளார். அதன்படி,  தினமும் பள்ளிகளில் காலை வழிபாட்டுக்கு முன் 15 நிமிடம், மாலை 45 நிமிடம் உடல் சார்ந்த பயிற்சி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், தமிழக அரசின் சார்பில், பள்ளி தொடங்குவதற்கு முன்பு மாணவர்களுக்கு 15 நிமிடங்கள் உடற்பயிற்சி தருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்று முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதற்கான சுற்றறிக்கை உடனடியாக வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து உடனடியாக பள்ளிக்கல்வித் துறை சார்பில், முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உடற்கல்வி தொடர்பான சுற்றறிக்கை தயார் செய்யப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது.

அதில், அரசு நிதியுதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் தற்போது ஒரு வகுப்புக்கு வாரத்துக்கு இரு பாடவேளைகள் மட்டுமே உடற்கல்விக்காக ஒதுக்கப்படுகின்றன. மாணவ, மாணவியரின் படிப்பின் ஒரு பகுதியாக அன்றாடம் உடல் சார்ந்த பயிற்சிகள் கொண்டு வரப்பட்டால் பாடச் சுமையின் காரணமாக ஏற்படும் மன அழுத்தம் குறைந்து கற்றல் திறன் மேம்படும்.

அதனால், ஒவ்வொரு பள்ளியிலும் காலை வழிபாட்டுக் கூட்டத்துக்கு முன் 15 நிமிடங்களும், மாலை 45 நிமிடங்களும் உடல் சார்ந்த பயிற்சிகள் அளிக்கப்படும். இதனால், மாணவர்களின் உடற்தகுதி மேம்படுவதுடன், தனித்திறன் ஆளுமை மேம்பட்டு கற்கும் திறனும் அதிகரிக்கும்.

இதனை அனைத்து பள்ளிகளிலும் செயல்படுத்த தலைமை ஆசிரியர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர்கள் அறிவுறுத்த வேண்டும். உடல் சார்ந்த பயிற்சிகளில் விளையாட்டு, யோகா, நடனம் என அனைத்தும் இடம்பெற வேண்டும்.

அரசு உயர்நிலை, மேல் நிலைப்பள்ளிகளை பொறுத்த வரை முழுநேர உடற்கல்வி ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர்களை கொண்டு இதை செயல் படுத்தலாம். அவ்வாறு இல்லாத பள்ளிகளில் அனைவருக்கும் கல்வித்திட்டத்தின் கீழ் செயல்படும் பகுதி நேர உடற்கல்வி ஆசிரியர் களை பயன்படுத்தலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.