சென்னை: நாட்டின் விளையாட்டுக் கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் வகையில், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் விளையாட்டும் ஒரு பாடமாக சேர்க்கப்படும் என்று கூறியுள்ளார் மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு.

சென்னை வந்திருந்த அவர் கூறியதாவது, “தமிழகம் விளையாட்டுக் கலாச்சாரம் நிறைந்த மாநிலமாக உள்ளது. விளையாட்டுதான் நாட்டின் ஒற்றுமையை உறுதி செய்கிறது.

படிக்காமல் விளையாடிக்கொண்டே இருந்தால் வாழ்வில் முன்னேற முடியாது என்ற கூற்றைப் பொய்யாக்க வேண்டும். சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் விரைவில் விளையாட்டும் ஒரு பாடமாக சேர்க்கப்படவுள்ளது. ஒலிம்பிக் போட்டிகளில் வெற்றிபெறுவோருக்கு மட்டுமின்றி, பங்குகொள்வோருக்கும் வேலை வாய்ப்பு வழங்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

நாட்டிற்காக விளையாடியவர்கள் கவுரவிக்கப்பட வேண்டும் என்பதே எங்களின் கொள்கை. எனவே, நாட்டிற்காக விளையாடி பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் விளையாட்டு வீரர்கள் தாராளமாக என்னை அணுகலாம். தேவையான உதவிகள் செய்யப்படும்.

2020ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளுக்கு சில மாதங்களே உள்ளன. அடுத்த 2024ம் ஆண்டு ஒலிம்பிக்கில் இந்தியா இரட்டை இலக்கத்தில் பதக்கம் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதோடு, 2028ம் ஆண்டு ஒலிம்பிக்கில் பதக்கப் பட்டியலில் முதல் 10 நாடுகளில் ஒன்றாக இடம்பெறுவதை உறுதிசெய்யும் வகையிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும். தமிழகத்திலிருந்து வருங்காலத்தில் பல திறமையான வீரர்கள் உருவாகி வருவார்கள் என்ற நம்பிக்கையுள்ளது” என்றார்.