பெங்களூரு: முன்னாள் காதலன் மீது ஆசிட் வீசிய பெண் செவிலியரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக விசாரணை நடத்தி வரும் போலீசார் தெரிவித்ததாவது.

பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் செவிலியராக பணிபுரிகிறார் லிடியா ஃபிசிபா(26),  துணி வியாபாரம் செய்துவந்த இளைஞர் ஜெயக்குமார்(32), இருவரும் கடந்த ஏழு  ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

ஒருகட்டத்தில் இவர்களது காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரியவர, மதத்தைக் காரணம் சொல்லி இரு குடும்பத்தினரும் கடுமையாக எதிர்த்தனர்.

இந்த நிலையில், ஜெயக்குமாரை கிறிஸ்தவ மதத்துக்கு மாறச்சொல்லி வற்புறுத்தியிருக்கிறார் லிடியா ஃபிசிபா. அப்படி மாறினால் தனது குடும்பத்தினர் ஏற்றுக்கொள்வார்கள் என்று தெரிவித்திருக்கிறார்.

ஜெயக்குமாரோ, “நான் வேறு எந்த பெண்ணையும் மணக்க மாட்டேன். திருமணம் என்றால் உன்னோடுதான். ஆனால் மதம் மாற மாட்டேன். நீயும் மாற வேண்டாம்” என்று தெரிவித்திருக்கிறார்.

மதம் மாறவிட்டால் தனது பெற்றோர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று லிடியா வற்புறுத்தி வந்திருக்கிறார். இதனால் இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டிருக்கிறது. கடந்த அக்டோபர் மாதம் இருவரும் பிரிந்தனர்.

இந்த நிலையில்,  ஜெயக்குமாருக்கு அவரது பெற்றோர் பெண் பார்க்க ஆரம்பித்தனர்.  இதை அறிந்த லிடியா பலமுறை அவரை சந்திக்க முயற்சித்துள்ளார். அது முடியாமல்போனதால் ஜெயகுமாரின் முகத்தை சிதைக்க திட்டமிட்டு ஆசிட் வீசி இருக்கிறார்.

ஒவ்வொரு திங்களன்றும் விஜயநகர் பைப்லைன் சாலையில் உள்ள கோவிலுக்கு ஜெயகுமார் வருவதையறிந்த லிடியா, அவரது உறவினர் சுனில் குமாரின் உதவியுடன் ஜெயகுமாரை வேகமாக நெருங்கி அவர் மீது ஆசிட் வீசுவதற்கு முன் அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தும் கத்தியால் ஜெயகுமாரின் கழுத்தில் ஆழமாக குத்தி, ஆசிட்டை வீசிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார்.

ஜெயக்குமாரை அருகில் இருந்தவர்கள் மருத்துமனையில் சேர்த்தனர். உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த லிடியாவை காவல்துறையினர் கைது செய்தனர்.