ரஷ்யா மற்றும் ஜான்சன் & ஜான்சன் அறிவித்துள்ள மூன்றாம் கட்ட சோதனைகள்

தனித்துவ கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்து உருவாக்கும் முயற்சியில், தனது மூன்றாம் கட்ட சோதனைகளுக்காக சுமார், 60,000 பேருக்கு அதன் தடுப்பு மருந்து செலுத்தப்படும் என்று ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் அறிவித்ததே இதுவரையிலான மிகப்பெரிய திட்டமிடப்பட்ட மருத்துவ மனித சோதனையாக இருந்தது.  மாடர்னா மற்றும் ஃபைசர் போன்ற பிற முன்னணி போட்டியாளர்கள் தங்களின் தடுப்பு மருந்தை சுமார் 30,000 தன்னார்வலர்களை சேர்க்க திட்டமிட்டுள்ளனர். இது ஏற்கனவே தொடங்கிவிட்டது.

ஜான்சன் அண்ட் ஜான்சன் செப்டம்பர் முதல் மூன்றாம் கட்ட சோதனைகளைத் தொடங்குவதாக நம்புவதாகவும், 18 வயதுக்கு மேற்பட்ட 60,000 ஆரோக்கியமான நபர்களைப் பட்டியலிடும் வேலைகள் நடந்து வருவதாகவும் தெரிவித்திருந்தனர். அமெரிக்கா, மெக்ஸிகோ மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில் சுமார் 180 இடங்களில் இந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில், ரஷ்யா தனது தடுப்பு மருந்தை சுமார் 40,000 பேருக்கு பரிசோதிக்கவிருப்பதாக கூறியுள்ளது. மூன்றாம் கட்ட  சோதனைகளில் 40,000 பேருக்கு ஏற்கனவே ஒப்புதல் பெறப்பட்ட ஸ்புட்னிக்-வியை செலுத்தவுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. கட்டம் -3 சோதனைகள் கூட இல்லாமல், ஆகஸ்ட் 11 அன்று மாஸ்கோவின் கமலேயா நிறுவனம் உருவாக்கிய தடுப்பூசிக்கு ரஷ்யா ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கது. போதுமான சோதனைகளை மேற்கொள்ளாமல் தனது தடுப்பு மருந்துக்கு ஒப்புதல் அளித்ததற்கு உலகளாவிய அளவில் விமர்சனங்களை எதிர்கொண்டுள்ள ரஷ்யா, ஏற்பட்ட சேதங்களை மறைக்க இந்த விளம்பரம் தேடும் வேலைகளில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால், பின்னர் தனது தடுப்பு மருந்துக்காக தனி சிறப்பு வலைத்தளத்தை அறிமுகப்படுத்திய ரஷ்யா, அதில் தடுப்பு மருந்து தொடர்பான அனைத்து தகவல்களையும் தரவுகளையும் வழங்க முற்பட்டுள்ளது. கடந்த வாரம் ஒரு விரிவான அறிக்கையை வெளியிட்ட இரஷ்ய தடுப்பு மருந்துக்கு நிதியுதவி அளித்த அரசு அமைப்பு , தடுப்பு மருந்து குறித்து எழுப்பப்படும் கேள்விகள் ஆதாரமற்றவை மற்றும் அவர்களின் தடுப்பு மருந்து பொது பயன்பாட்டில் மிகவும் பாதுகாப்பாக செயல்பட்டது என்றும் கூறியுள்ளது. அதே அறிக்கையில், அடுத்த வாரம் தடுப்பு மருந்தின் மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனைகள் தொடங்கவுள்ளதாகவும் அறிவித்துள்ளது.  அதில், 45 க்கும் மேற்பட்ட இடங்களில் 40,000 க்கும் மேற்பட்டவர்களுக்கு இது பரிசோதிக்கப்படும் என்றும், இந்த சோதனைகள் முன்னரே திட்டமிடப்பட்டவை என்றும், ரஷ்ய மருந்துகள் கட்டுப்பாட்டாளருடன் தடுப்பு மருந்தை பதிவுசெய்த பிறகு அவை நடைபெறவிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

பத்திரிகையாளர்களுடனான ஒரு தனி உரையாடலில், கமலேயா இன்ஸ்டிடியூட்டில் விஞ்ஞானப் பணிக்கான துணை இயக்குநர் டெனிஸ் லோகுனோவ், ரஷ்ய தடுப்பு மருந்துக்கு நாட்டின் மருந்துகள் கட்டுப்பாட்டாளரால் “நிபந்தனையுடன் கூடிய பதிவு சான்றிதழ்” மட்டுமே வழங்கப்பட்டுள்ளது என்றும், இதன் பொருள் மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனைகளின் கட்டுப்பாடிற்கு உட்பட்டது என்றும் கூறினார்.