மாஸ்கோ: ரஷ்யாவின் ஸ்புட்னிக் – வி கொரோனா தடுப்பூசி 91.6% சக்திவாய்ந்தது என்றும், இது மக்களுக்கு பாதுகாப்பானது என்றும் பிரிட்டிஷ் மருத்துவ இதழ் ஆய்வுகள் தெரிவித்துள்ளன.

உலகநாடுகளை மிரட்டி வரும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் உலக நாடுகள் தடுப்பு மருந்துகள் தயாரித்துள்ளன. இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்டு  தடுப்பு மருந்துகள் தயாரிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளன. அதுபோல,  அமெரிக்காவின் ஃபைசர், ஜெர்மனியின் பயோன்டெக் , ஆக்ஸ்போர்டு அஸ்ட்ராஜெனெகா, அமெரிக்காவின் மாடர்னா நிறுவனத்தின் தடுப்பூசி, சீனாவில் தயாரிக்கப்பட்டுள்ள சினோவாக், சினோபார்ம் ஆகிய தடுப்பூசிகள், ரஷ்யாவைச் சேர்ந்த கமலேயா, உயிரி தொழில்நுட்பம் மற்றும் வைரஸ் ஆராய்ச்சி மையம் ஆகியவற்றின் தடுப்பு மருந்துகளான ஸ்புட்னிக்-வி உள்பட பல நிறுவனங்கள் தயாரித்துள்ள மருந்துகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.

இந்த தடுப்பு மருந்துகள் குறித்து, பிரிட்டிஷ் மருத்துவ இதழ் ஆய்வு மேற்கொண்டு வந்தது. இதில், ரஷ்யாவின் ஸ்புட்னிக் – வி மருந்து நல்ல பலனை தருவதாக தெரிவித்துள்ளது.

ரஷ்யாவின், கமாலேயே ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் ஆர்டிஐஎஃப் இணைந்து தயாரித்துள்ள ஸ்புட்னிக் – வியின்  3-ம் கட்ட பரிசோதனை கடந்த நவம்பரில் மாஸ்கோவில் 20 ஆயிரம் பேருக்கு இந்த தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன் முடிவுகள் வெளியானது. அதில், ஸ்புட்னிக் – வி மிகவும் பாதுகாப்பானது என தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில்,  பிரிட்டிஷ் மருத்துவ இதழான தி லான் சர்ட், கொரோனா தடுப்பூசிகள் குறித்து ஆய்வுகள் நடத்தியது. அதில்,  ஸ்புட்னிக் – வி தடுப்பூசி 91.6% செயல்திறன் வாய்ந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பாதுகாப்பானது எனவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த தடுப்பூசியை முதல் டோஸ் செலுத்திய 21 நாட்களுக்கு பின்னர் எடுக்கப்பட்ட பரிசோதனையின் அடிப்படையில் முடிவு வெளியிடப்பட்டுள்ளது. அதே சமயம் இந்த மருந்தை செலுத்திய 4 பேர் உயிரிழந்திருப்பதும், அதற்கு ஸ்புட்னிக் – வி தடுப்பூசி மருந்து காரணம் இல்லை என்றும் அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.