மாஸ்கோ: ரஷ்யாவின் ஸ்புட்னிக் v  தடுப்பூசி உற்பத்தி, இந்தியா மற்றும் சீனாவில் உள்ள மருந்து நிறுவனங்களுடன் இணைந்து தொடங்கப்படும் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றுக்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் சோதனையில் 40க்கும் மேற்பட்ட உலக நிறுவனங்கள் 3ம் கட்ட சோதனையில் உள்ளன. ஆனால், உலகின் முதல் கொரோனா தடுப்பூசியை உருவாக்கிவிட்டதாக,  ரஷ்யா கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவித்தது.

ஸ்புட்னிக் v என்றழைக்கப்படும் இந்த கொரோனா தடுப்பூசி, இந்தியாவிலும் பரிசோதிக்கப்பட்டு வருகிறது. இந் நிலையில் பிரிக்ஸ் நாடுகளின் 12வது மாநாட்டில் ரஷ்ய அதிபர் புடின் பேசியதாவது: ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியம் அதன் பிரேசிலிய மற்றும் இந்திய கூட்டாளிகளுடன் ‘ஸ்புட்னிக் v’ தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ளும் ஒப்பந்தங்களை எட்டியுள்ளது.

இந்தியா, சீனா ஆகிய நாடுகளில் உள்ள மருந்து நிறுவனங்களுடன் இந்த தடுப்பூசியை உற்பத்தி செய்யும் ஒப்பந்தத்தையும் எட்டியுள்ளது. இது அந்த நாடுகளின் தேவையை பூர்த்தி செய்து, மற்ற நாடுகளுக்குமான தடுப்பூசியை வழங்கவும் வழிவகை செய்யும் என்றார்.