நீர் நிலை, புறம்போக்கு நில ஆக்கிரமிப்புகள்: தமிழகஅரசு அரசாணை வெளியீடு

சென்னை:

நீர்நிலை ஆக்கிரமிப்பு  மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களில் வசிக்கும் ஏழை மக்கள் அங்கிருந்து அகற்றப்பட்டு, வேறு இடத்தில்  வீடு கட்டித் தர ஏதுவாக  வீட்டுமனைப்பட்டா வழங்குவதற்கான அரசாணை தமிழக அரசால் இன்று  வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை உள்பட மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் நீர் நிலைகள் மற்றும் அரசு புறம்போக்கு நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு குடிசைகள் போட்டு மக்கள் வசித்து வருகின்றனர். இதன் காரணமாக இயற்கை பேரிடர் காலங்களில் மழைநீர் வழிந்தோடு வழியின்றி கடும் சேதங்களை ஏற்படுத்தி வருகிறது.  நீர் நிலைகளில், ஆக்கிரமிப்புகளை அகற்றியிருந்தால் வெள்ளப் பாதிப்புகளை தடுத்திருக்க முடியும்.

இதுதொடர்பாக சென்னை உயர்நீதி மன்றத்திலும் பல வழக்குகள் தொடரப்பட்டு நிலுவையில் உள்ளன.

இந்த நிலையில்,  அரசு புறம்போக்கு நிலம் மற்றும் நீர் நிலைகளில உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் வகையில் தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.

அதில், 5 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருக்கும் தகுதியுள்ள நபர்களை வெளியேற்றவும்,  அவர்களுக்கு மறுகுடி அமைப்பு தொடர்பாக மாற்று இடத்தில் வீட்டு மனைப்பட்டா வழங்கப்பட இருப்பதாகவும், அதன்படி தனியாரிடம் இடம் வாங்கி 3 சென்ட் இலவச வீட்டு மனைகள் வழங்க முடிவு செய்திருப்பதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.