கொச்சின்: தனக்கு விதிக்கப்பட்ட 7 ஆண்டுகள் தடைக்குப் பிறகு, உள்நாட்டுப் போட்டியில் களமிறங்கிய வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த், கவனிக்கத்தக்க வகையிலான பங்களிப்பை அளித்துள்ளார்.

உள்நாட்டு அளவிலான சையது முஷ்டாக் டி-20 தொடரில், கேரள அணிக்காக களமிறங்கியுள்ளார் ஸ்ரீசாந்த். இந்நிலையில், புதுச்சேரி அணிக்கெதிரான தனது முதல் போட்டியில் பங்கேற்றார் ஸ்ரீசாந்த்.

தனது 7வது பந்தில், அவுட்ஸ்விங்கர் மூலம், புதுச்சேரி அணியின் ஃபேபிட் அகமதுவை வெளியேற்றினார். மொத்தம் 4 ஓவர்கள் வீசி, 29 ரன்களை விட்டுக்கொடுத்து 1 விக்கெட் எடுத்தார் ஸ்ரீசாந்த்.

இந்திய அணிக்காக, சர்வதேச அளவில் 53 ஒருநாள் போட்டிகள், 27 டெஸ்ட் போட்டிகள் தவிர, டி-20 போட்டிகளிலும் பங்கேற்றுள்ளார். 2011ம் ஆண்டு உலகக்கோப்பை வென்ற இந்திய அணியில் இவர் இடம்பெற்றிருந்தார்.