கற்றுத்தந்த வித்யாம்மா!:

டி.வி.எஸ்.சோமு பக்கம்:

வாழ்க்கை முழுதுமே படிப்பினை கிடைத்துக்கொண்டே இருக்கும். அப்படியொரு படிப்பினை வித்யாம்மா மூலம் கிடைத்தது. எல்லோருக்கும் புரியும்படி சொல்வதானால் நடிகை ஸ்ரீவித்யா.\

அப்போதுதான் பல வருட சட்டப்போராட்டத்துக்குப் பிறகு ஸ்ரீவித்யா , தனது கணவர் ஜார்ஜிடம் இருந்து விவாகரத்து பெற்றார். அப்போது பிரபலமாக இருந்த பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் எல்லாவற்றிலும் அவரது பேட்டிகள் வெளியாகின. ஒரு இதழில் அவரது வாழ்க்கைத் தொடரும் வெளியானது.

எல்லாவற்றிலும் தனது (முன்னாள்) கணவர் ஜார்ஜை கடுமையாக விமர்சித்துவந்தார். பணத்துக்காகவே தன்னை ஜார்ஜ் திருமணம் செய்துகொண்டதாகவும், கொடுமைப்படுத்தியதாகவும் தெரிவித்து வந்தார்.

பொதுவாக திரைத்துறை சம்பவங்கள் குறித்து நான் அக்கறைகொள்வதில்லை. திரைச் செய்திகளும் எழுதுவதில்லை.

ஆனால், “அந்த ஜார்ஜை ஒரு கொடும் வில்லனாக ஸ்ரீவித்யா சித்திரிக்கிறாரே..  அது உண்மையாகக் கூட இருக்கட்டும். ஆனால் அவரது தரப்பு.. அல்லது அவரது பேட்டி ஏன் எந்த இதழிலும், தொ.கா.விலும் வரவில்லை” என்ற கேள்வி எனக்குள் எழுந்தது.

இதையடுத்து ஜார்ஜை பேட்டி எடுக்க குமுதம் ஆசிரியர் குழுவிடம் அனுமதி பெற்றேன்.

எனக்குத் தெரிந்த திரைத்துறை பத்திரிகை நண்பர்களிடம் ஜார்ஜ் முகவரி கேட்டேன். பலருக்குத் தெரியவில்லை. சிலர் கூறிய முகவரி தவறாக இருந்தது. அதாவது முன் எப்போதோ ஜார்ஜ் அங்கு வசித்திருப்பார் போலும்.

அடுத்து ஒரு யோசனை தோன்றியது. சமீபத்தில்தானே விவாகரத்து ஆகியிருக்கிறது. ஆகவே அவர்களது வழக்குரைஞர்களைத் தொடர்புகொண்டு ஜார்ஜின் முகவரியைப் பெறலாமே என்று நினைத்ன். அதன்படி எனக்குத் தெரிந்த வழக்குரைஞர் நண்பர்கள் மூலம் ஜார்ஜின் முகவரியைப் பெற்றேன்.

கோடம்பாக்கம் அய்யப்பன் கோயில் அருகே அவரது வீடு இருந்தது. தொலைபேசியில் அவரைத் தொடர்புகொண்டு நேரம் கேட்டு, நேரில் சென்றேன்.

“இப்போ எல்லா பத்திரிகை டி.வியிலும் என் பெயர்தான் ஒலிக்குது. ஆனால் என் கருத்தைக் கேட்கணும்னு யாருக்கும் தோணலை. நீங்களாவது வந்தீங்களே..” என்று ஆதங்கத்தோடு வரவேற்றார் ஜார்ஜ்.

அவர் மீது ஸ்ரீவித்யா தெரிவித்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் கேட்டேன்.

அதற்கு அவர் ஸ்ரீவித்யாவை மிக மோசமாக விமர்சித்தார். மிகக் கொச்சையான மொழிகள்.  அதிரவைக்கும் குற்றச்சாட்டுக்கள்.

எனக்கு மிக அதிர்ச்சியாக இருந்தது. நீதிமன்றத்தில் ஸ்ரீவித்யா பற்றி இவர் என்னவெல்லாம் கூறினாரோ அதையே தெரிவிக்கிறார் என்பது புரிந்தது.

எனக்கு அதிர்ச்சி ஒருபுறம் ஏற்பட்டாலும்  “பெரும்பாலான நடிகைகளின் வாழ்வில் நடப்பவை என்று கேள்விப்பட்டதைத்தானே சொல்கிறார். தவிர, ஸ்ரீவித்யா இவரை விமர்சிக்கிறார். பதிலுக்கு இவர் விமர்சிக்கிறார். நமக்கு இன்னொரு தரப்பான இவரைக் கேட்டு வெளியிட ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது” என்று என்னை நானே சமாதானம் செய்துகொண்டேன்.

எப்போதும்போல எதிர்த்தரப்பான ஸ்ரீவித்யாவின் கருத்தை அறிய அவரது எண்ணுக்குத் தொடர்புகொண்டு பேசினேன். ஜார்ஜ் என்று கூறியவுடனேயே தொடர்பைத் துண்டித்துவிட்டார் ஸ்ரீவித்யா.

ஜார்ஜின் பேட்டி குமுதம் இதழில் வெளியானது… அவர் சொன்ன அதே கொச்சையான அதிர்ச்சி அளிக்கும் வார்த்தைகளுடன்..

படித்தோர் அதிர்ந்தனர். இது என் கவனத்துக்கு வந்தவுடன், திருப்தியாய் புன்னகைத்துக்கொண்டேன்.

அவ்வளவுதான். பிறகு அடுத்தடுத்து எடுக்க வேண்டிய பேட்டிகளுக்குள் மூழ்கிப்போனேன்.

சில காலத்துக்குப் பிறகு குங்கும் இதழில் சேர்ந்தேன்.  அங்கும் பரபரப்பாக ஓடியது பத்திரிகை வாழ்க்கை.

அப்போது குங்குமம் இதழ் அலுவலகம் கோடம்பாக்கம் முரசொலி வளாகத்தில் செயல்பட்டது.

ஒரு நாள் அலுவலகத்தினுள் நுழையும்போது கவனித்தேன். மரத்தடி அருகே பெரிய விளக்குகளைப் பொறுத்திக்கொண்டிருதார்கள். ஏதோ தொலைக்காட்சித் தொடருக்கான படப்பிடிப்பு நடக்க  இருக்கிறது என்று நினைத்துக்கொண்டேன். அங்கு அவ்வப்போது இப்படி படப்பிடிப்பு நடப்பது உண்டு.

மாடியில் இருக்கும் அலுவலகத்துக்கு வந்து ஏதோ எழுத ஆரம்பித்தேன்.

யாரோ ஒருவர் வந்து, “டி.வி.எஸ். நீங்கதானே” என்றார். (டி.வி. சோமசுந்தரம் என்பதை சுருக்கி டி.வி.எஸ். என்று பேட்டி, கட்டுரைகள் எழுதுவதால் பலருக்கு டிவிஎஸ் என்றுதான் அறிமுகம்.)

நான், “ஆமாம்.. என்ன விசயம்” என்றேன்.

“ஸ்ரீவித்யா மேடம் கூப்பிடுறாங்க.. கீழே ஷூட்டிங் ஸ்பாட்ல வெயிட் பண்றாங்க..” என்றார்.

எனக்கு ஒன்றும் புரியவில்லை.  அவர் நமக்கு அறிமுகமே இல்லையே நம்மை ஏன் கூப்பிடுகிறார் என்று யோசனை. குமுதத்தில் அவரது முன்னாள் கணவரை நான் எடுத்த பேட்டியையும் மறந்திருந்தேன்.

குழப்பத்துடன் கீழே சென்றேன். மரத்தடி அருகே ஒரு நாற்காலியில் ஸ்ரீவித்யா அமர்ந்திருந்தார்.

என்னை அழைத்துவந்தவர், ஸ்ரீவித்யா அருகே என்னை நிறுத்தினார். அப்படித்தான் தோன்றியது எனக்கு.

என்னை ஏறிட்ட ஸ்ரீவித்யா, “நீங்கதான் ரிப்போர்ட்டர் டி.வி.எஸ்.ஸா” என்றார்.

அதே குழப்பத்துடன், “ஆமாம்.. என்னை ஏன் கூப்பிட்டீங்க” என்றேன்.

மெலிதான புன்சிரித்தவர், அருகே ஒரு பெரிய படுதாவால் தடுத்துவைக்கப்பட்டிருந்த பெரும் அறைக்குள் அழைத்தார்.

அங்கும் சில நாற்காலிகள் இருந்தன. என்னை உட்காரச் சொல்லிவிட்டு அவரும் அமர்ந்தார்.

பிறகு என் கண்களை நோக்கியவர், “குமுதத்தில என்னைப் பற்றி ஒரு ஆர்டிகிள் எழுதினீங்களே நினைவிருக்கா” என்றார்.

அப்போதுதான் எனக்கு ஜார்ஜ் பேட்டி நினைவுக்கு வந்தது.

சற்று நேர அமைதிக்குப் பிறகு ஸ்ரீவித்யா பேசினார்:

“நீங்க ஒரு ஜர்னலிஸ்ட். பரபரப்பா விசயம கிடைச்சா போதும்னு நினைப்பீங்க..”

நான் குறுக்கிட்டு, “உங்க தரப்பு மட்டும் வந்துகிட்டிருந்தது.. அதான் அவர் தரப்பை வெளியிடலாமே என்று..” என்றேன்.

“குட்! நல்ல நோக்கம்தான். ஒரு மனுசனை இப்படி கடுமையா ஒருத்தி பேசிக்கிட்டிருக்காளே.. அவன் யாரு.. அவன் என்ன சொல்வான்னு கேட்க உங்களுக்குத் தோணியிருக்கு. சந்தோசம்.

ஆனா அதை எழுதும்போது ஒரு வரையறை வேண்டாமா. அந்த மனுசனுக்கு என் மேல ஆத்திரம் பொய் பொய்யா சொல்லலாம்.  அந்த மனுசன் சொன்னதை மாத்தி எழுதணும்னு நான் உங்கிட்ட எதிர்பார்க்கலை. சொன்ன விசயத்தையே நாகரீகமான வார்த்தைகளைப் போட்டு எழுதியிருக்கலாமே!

உங்க குடும்பத்துல ஒரு பெண்ணை இப்படி யாராவது சொன்னா எழுதுவீங்களான்னு நான் கேட்டால், “எங்க குடும்பத்துப் பொண்ணுங்க நடிகை இல்லை.. விவாகரத்தும் வாங்கலை”னு சொல்லுவீங்க.

நடிகையா இருக்கிறது பாவமா.. விவாகரத்து வாங்கறது பாவமா..? நாங்களும் மனுசங்கதானே! எங்களுக்கும் உறவுகள் இருக்கு நட்பு இருக்கு. எங்களையும் நாலு பேருக்குத் தெரியும்.  இன்னும் சொல்லப்போனா அதிகமான பேர் எங்களைத் தெரிஞ்சு வச்சிருப்பாங்க.

கோர்ட்ல அந்த மனுசன் சொன்ன அருவெறுப்பான பொய்களை சிலபேர்தான் கேட்டிருப்பாங்க. இப்போ அதை நாடறிய வச்சுட்டீங்க.

என்னை பார்க்கற ஒவ்வொருத்தரும், அந்த பேட்டிய படிச்சுட்டுத்தான் என்னைப் பார்க்கிறாங்களோன்னு தோணுது..

இது சரிதானான்னு யோசிச்சுப் பாருங்க..” – நிதானமாய் ஸ்ரீவித்யா சொல்லி முடிக்க.. நான் அதிர்ச்சியின் உச்சத்தில் இருந்தேன்.

அப்போது நான் பத்திரிகைத்துறைக்கு வந்து சில வருடங்களே ஆகியிருந்தன. சமூகப் பிரச்சினைகளை எழுத வேண்டும் என்பதுதான் என் முதல்விருப்பம் என்றாலும், பரபரப்பாக.. மற்றவர் சிந்திகாகத விசயமாக எழுத வேண்டும் என்ற துடிப்பும் அதிகம் இருந்தது.

அதன் விளவு, சம்பந்தப்பட்டவர்களின் மனம் என்ன பாடுபடும் என்பதை அறியத் தவறிவிட்டேன்.

என்னதான் இருந்தாலும் அது தவறுதான். ஸ்ரீவித்யா கூறியதைப்போல், ஜார்ஜ் வெளிப்படுத்திய வார்த்தை வேறு மாதிரி மாற்றியிருக்கலாம்.. சிலவற்றை முற்றிலும் தவிர்த்திருக்கலாம் என்று தோன்றியது. எனது முட்டாள்த்தனம் புரிந்தது.

அந்த பேட்டியால் மிகவும் மனம் பாதித்தாலும், காத்திருந்து என்னை அழைத்து பொறுமையாக தனது தரப்பை விளக்கிய ஸ்ரீவித்யாவின் தன்மை, மனதை நெகிழ வைத்தது.

அவரிடம் மனப்பூர்வமான மன்னிப்பைக் கோரினேன்.

“போகட்டும்… இனிமே கொஞ்சம் கவனமா இருங்க” என்றார் மெலிதாய் சிரித்தபடியே. அந்த சிரிப்பில் விரக்தியும் ஆற்றாமையும் இருந்ததை  நான் நன்கு உணர்ந்தேன்.

அதன் பிறகு எழுதும்போது கூடுதலாக நிதானித்தே எழுத ஆரம்பித்தேன்.

அந்த சந்திப்புக்குப் பிறகு பல முறை அவரை சந்தித்திருக்கிறேன்.

“நடிகைதானே” என்கிற எனது பொதுப்புத்தி  எவ்வளவு தவறு என்பதை ஒவ்வொரு சந்திப்பிலும் உணர்த்தியவர் ஸ்ரீவித்யா.

திரை, இசை மட்டுமல்ல.. அரசியல், அறிவியல், (அவருக்கான) ஆன்மீகம் என்று அவர் நிறைய நிறைய பேச.. பிரமித்திருக்கிறேன்.

தன் வாழ்க்கை குறித்த தனிப்பட்ட ஆதங்கங்கள் பல அவருக்கு  இருந்தன.

ஒருகட்டத்தில் சென்னையில் இருந்த சொத்துக்களை விற்றுவிட்டு கேரளா சென்றுவிட்டார்.  அப்போது அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்பது எனக்குத் தெரியாது. யாரிடமும் இதை அவர் பகிர்ந்துகொள்ளவில்லை.

அதன் பிறகு அவருடனான தொடர்பு அற்றுப்போனது. பிறகு அவரது மரணச் செய்தி வெளியானது.

முதல் சந்திப்புக்குப் பிறகு அவரை வித்யாம்மா என்றே அழைக்கத்துவங்கினேன்.

நமக்கு நல்லனவற்றை கற்றுத்தரும், நம் மீது அன்பு செலுத்தும் எந்தவொரு பெண்மணியும் அம்மாதானே!

என் அம்மா சந்தானலட்சுமிக்கும் வித்யாம்மாவுக்கும் ஒரு சோகமான ஒற்றுமை. இருவரும் மார்பக புற்றுநோய் தாக்கித்தான் மாண்டார்கள்.

2006 இதே நாளில்தான் வித்யாம்மா மார்பகப்புற்றுநோயால் மறைந்தார்.