சென்னை:

ஸ்டர் பண்டிகையின்போது இலங்கையில்  தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக சென்னை பூந்தமல்லி அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்த  3 பேரை பிடித்து தேசிய புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

.கடந்த ஈஸ்டர் தினத்தன்று இலங்கையில் கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல் கள் உள்பட 8 இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்தன. இதில் 350-க்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர். 500-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

இந்த குண்டுவெடிப்பு காரணமாக  இந்தியாவும்,  உஷார் படுத்தப்பட்டது. இதுதொடர்பான விசாரணையில், இலங்கை குண்டுவெடிப்பு பயங்கரவாதி சென்னை மண்ணடி வந்து சென்ற விவரம் தெரிய வந்தது. இது மேலும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக தேசிய புலனாய்வு பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை  மண்ணடியில் உள்ள ஒருவரிடம் விசாரணை நடத்திய போது, பூந்தமல்லியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இலங்கையைச் சேர்ந்த 3 பேர் தங்கி இருப்பதாகவும், அவர்களுக்கும் குண்டு வெடிப்பு சம்பவத்திற்கும் தொடர்பு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து தேசிய புலனாய்வு பிரிவு போலீசார் மற்றும் கியூ பிரிவு போலீசார் அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியுள்ள இலங்கையை சேர்ந்த 3 பேரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அடுக்குமாடி குடியிருப்பில் தேசிய புலனாய்வு பிரிவு போலீசார் திடீரென புகுந்ததால் அந்த பகுதி யில் பரபரப்பை ஏற்படுத்தியது. விசாரணையை தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்பட்டார்களா என்பது குறித்து விவரங்கள் தெரியவில்லை.