இலங்கை : நான்கு லட்சத்திற்கும் மேற்பட்ட சிறுவர்கள் பள்ளி செல்வதில்லை

கொழும்பு,

லங்கையில் நான்கு லட்சத்திற்கும் மேற்பட்ட சிறுவர்கள் பள்ளிக்கூடம் செல்வதில்லை என அரசாங்க கணக்கெடுப்பு புள்ளி விவரம் தெரிவித்து உள்ளது.

இலங்கை முழுவதும் நடைபெற்ற பள்ளி செல்லாத மாணவர்கள் குறித்த கணக்கெடுப்பில் இந்த விவரம் தெரிய வந்துள்ளது.

இலங்கை அரசு சார்பாக கடந்த  2016 ம் ஆண்டு இலங்கை முழுவதும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில்,  5 முதல் 17 வயது வரை உள்ள பள்ளிக்கூடம் செல்லும் வயதில் உள்ள 4,52 661 மாணவர்கள் பள்ளிகளுக்கு  செல்வதில்லை என்ற அதிர்ச்சி தகவல்கள் கிடைத்துள்ளதாக  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், 51,249 சிறுவர்கள்  இதுவரை பள்ளிக்கூட வாசலைகூட மிதிக்காதவர்கள் என்றும், இதில் 2,329 சிறுவர்கள் மலையக பகுதிகளில் வசித்து வருபவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுவர்கள் பள்ளிகளுக்கு செல்லாததற்கு அவர்கள் குடும்பங்களில் உள்ள வறுமை என்றும், அதன் காரணமாக குடும்பத்தை காப்பாற்ற சிறுவர்களே வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்றும், ,நோய்கள் மற்றும் ஊனமுற்ற நிலை காரணமாக அவர்கள் பள்ளிக்கூடம் செல்வதை தவிர்த்துள்ளதாக கூறியுள்ளது.

மேலும், இதுபோன்ற நிலை உருவாக பெற்றோருக்கு கல்வி மீது  போதிய ஆர்வம் இல்லாத காரணத்தாலே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அந்த புள்ளி விவரங்களில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து தகுந்த மேல்நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கை அரசாங்கம் தெரிவித்து உள்ளது.