இலங்கையில் 42 ஆண்டுக்கு பின் மரண தண்டனை மீண்டும் அமல்

கொழும்பு:

இலங்கையில் போதைப்பொருள் கடத்தல் குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்கும் சட்டம் மீண்டும் அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இலங்கையில் மரண தண்டனை நடைமுறையில் உள்ளது என்றாலும், 1976ஆம் ஆண்டுக்கு பின்னர் மரண தண்டனை நிறைவேற்றுவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மரண தண்டனைக் கைதிகள் ஆயுள் முழுவதும் சிறையிலேயே கழிக்கும் நடைமுறை பின்பற்றப்படுகிறது.

இந்நிலையில், போதைப் பொருள் கடத்தல் சம்பவங்கள் இலங்கையில் அதிகரித்துள்ளன. இதற்கு சிறையில் உள்ள கைதிகள் தான் காரணம் என்பது தெரியவந்துள்ளது. போதை பொருள் கடத்தலை தடுக்க பல்வேறு முயற்சிகளை இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது.

இந்த வகையில் போதை பொருள் கடத்தல் குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டத்தை 42 ஆண்டுகளுக்கு பின்னர் இலங்கையில் அதிபர் மைத்ரிபால சிறிசேனா அமல்படுத்தியுள்ளார். இதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.