கொழும்பு:

இலங்கையில் சீனாவின் பெரும் பங்களிப்புடன் கட்டப்பட்ட ஹம்பன்டோட்டா துறைமுகத்தின் உடன்படிக்கை புதுப்பிக்கப்பட்டுள்ளது. முதலில் ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கைக்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பு இருந்ததால் இந்த நடவடிக்கையை இலங்கை அரசு மேற்கொண்டுள்ளது.

புதிய உடன்படிக்கையின் படி இந்த துறைமுகத்தில் எல்லை பாதுகாப்பு காரணமாக சீனாவின் வர்த்தக ரீதியிலான செயல்பாட்டிற்கு வரையறை செய்யப்பட்டுள்ளது. அதோடு இந்தியா, ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு அதிக கவலை ஏற்படுத்தியற்கு ஆறுதல் கொடுக்கும் விதமாக ராணுவ பயன்பாட்டிற்கு இந்த துறைமுகம் பயன்படுத்தக் கூடாது என்று தெரிவிக்கப்ப்டடுள்ளது.

‘‘இந்த புதிய உடன்படிக்கைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. விரைவில் நாடாளுமன்ற ஒப்புதல் பெற இந்த வாரத்தில் அனுப்பி வைக்கப்படும்’’ என்று அமைச்சக செய்தி தொடர்பாளர் தயாசிரி ஜெயசிகேரா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இலங்கையில் உள்ள சீன தூதரக செய்தி தொடர்பாளர் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார். ‘‘புதிய உடன்படிக்கை குறித்து இரு தரப்பிலும் சமாதானம் ஏற்படுத்தப்பட்டது. இதில் இலங்கையின் கோரிக் ஏற்கப்பட்டுள்ளது’’என்று மட்டுமே தெரிவித்தார்.

மேலும், அவர் கூறுகையில்,‘‘ இதர நாடுகளோடு சமமான உறவு முறையை கையாள வேண்டிய நிலை உள்ளது. எனினும் வருவாய் அடிப்படையில் தற்போது வரை இந்த துறைமுக உடன்படிக்கை சீனாவுக்கு சாதகமாக தான் உள்ளது’’ என்றார்.

கடந்த 2014ம் ஆண்டு சீனாவின் நீர்மூழ்கி கப்பல் இலங்கையில் நிறுத்தப்பட்டுள்ளது என்று இந்தியா எச்சரித்தது. சீனாவை சேர்ந்த நிறுவனம் இங்கு 1.4 பில்லியன் டாலரில் துறைமுகம் நகரத்தை அமைப்பதாக தகவல்கள் வெளியானது.

இந்த துறைமுகத்தை சீனா தென் பகுதியில் தனது கடற்படை தளமாக அமைத்துள்ளது என்று இந்தியா உள்ளிட்ட சில நாடுகள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்தது. இதை மெய்பிக்கும் விதமாக கடந்த மே மாதம் நீர்மூழ்கி கப்பலை இந்த துறைமுகத்தில் நிறுத்த சீனா அனுமதி கோரியது. இதை இலங்கை அப்போதே நிராகரித்துவிட்டது.

15 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் தொழிற்சாலை மண்டலம் அமைக்கும் வகையில் இந்த பகுதியை சீனா கையகப்படுத்தியுள்ளது. சீனாவின் போர் கப்பல்களை நிறுத்துவதற்கு ஏதுவாக தான் இவ்வளவு பெரிய தொழில் நகரத்தை ஏற்படுத்துகிறது என்ற அச்சம் அப்போது நிலவியது.

சீனாவுக்கு இவ்வளவு பெரிய இடத்தை கொடுத்ததன் மூலம் நாட்டின் இறையான்மை கேள்விகுறியாகியுள்ளது என்று அந்நாட்டு அரசியல் தலைவர்கள் அப்போது கருத்து தெரிவித்தனர்.