கொழும்பு:

இலங்கையில் தத்தெடுப்பு என்ற பெயரில் ஆயிரகணக்கான குழந்தைகளை வெளிநாட்டினருக்கு விற்பனை செய்த முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

இது குறித்து நெதர்லாந்தை சேர்ந்த ஒரு தொலைக்காட்சியின் ஆவணப்படத்திற்கு இலங்கை சுகாதார துறை அமைச்சர் ராஜிதா செனார்த்தனே கூறுகையில், ‘‘1980ம் ஆண்டுகளில் இலங்கையில் சட்டவிரோதமாக ‘‘குழந்தைகள் பண்ணை’’ செயல்பட்டு வந்துள்ளது.

இதன் மூலம் குழந்தைகள் திருடப்பட்டோ அல்லது விலைக்கு வாங்கியோ தத்தெடுப்பு என்ற மேற்கத்திய நாட்டினருக்கு விற்பனை செய்யும் செயல்களில் இந்த அமைப்புகள் ஈடுபட்டுள்ளது. 1987ம் ஆண்டில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் புதிதாக பிறந்த 20 குழந்தைகளை விற்பனை செய்தது தொடர்பாக 22 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

இச்சம்பவத்தை தொடர்ந்து நாடுகளுக்கு இடையிலான குழந்தை தத்தெடுப்புக்கு தடை விதிக்கப்பட்டது’’ என்றார். 1980ம் ஆண்டுகளில் இலங்கை குழந்தைகள் அதிகளவில் நெதர்லாந்தை சேர்ந்தவர்களுக்கு தத்து கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இது தொடர்பான தகவல்கள் அனைத்தும் தவறாகவே உள்ளது.

இலங்கை மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகள் தத்தெடுப்பு முறைகேடு மூலம் விற்பனை செய்யப்பட்ட சம்பவம் குறித்து டாக்டர்கள், புரோக்கர்கள் மற்றும் இதில் தொடர்புடையவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டது. இந்த சமயத்தில் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் மேற்கத்திய நாடுகளை சேர்ந்தவர்களுக்கு தத்து கொடுக்கப்பட்டுள்ளது.

இதில் 4 ஆயிரம் குழந்தைகள் நெதர்லாந்துக்கு மட்டும் தத்து கொடுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள குழந்தைகள் அமெரிக்கா, ஸ்வீடன், ஜெர்மனி போன்ற நாடுகளுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த ஆவணப் படத்தில் ஒரு பெண் கூறுகையில், ‘‘எனக்கு பிறந்த குழந்தை இறந்துவிட்டதாக மட்டுகாமாவில் உள்ள ஒரு மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.

ஆனால் எனது குழந்தையை ஒரு டாக்டர் மருத்துவமனைக்கு வெளியே கொண்டு சென்றதை எனது உறவினர் ஒருவர் பார்த்துள்ளார்’ என்றார். மேலும் ஒரு பெண் கூறுகையில், ‘‘ ஒரு குழந்தைக்கு என்னை தாயாக நடிக்கச் சொல்லி ரூ. 2 ஆயிரம் கொடுத்தனர்’’ என்றார்.

வெளிநாட்டு குழந்தை தத்தெடுப்பு முகமைகளுக்கு இலங்கை டாக்டர்கள், நர்சுகள் இடைத்தரகர்களாக செயல்பட்டுள்ளனர். மருத்துவமனைகளில் திருடப்பட்ட குழந்தைகள் போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டுள்ளனர்.

செனராத்னே கூறுகையில்,‘‘ இந்த விவகாரம் சட்டவிரோதமாக நடந்துள்ளது. இது தவறான செயலாகும். குடும்பத்தினரின் மனித உரிமை மீறப்பட்ட இந்த செயல் குறித்து தீவிர கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. பெற்றோருக்கும் குழந்தைகளுக்கு மரபணு சோதனை நடத்த சிறப்பு முகமை ஏற்படுத்தப்படும்.

இதன் மூலம் உண்மையான குழந்தையும், தாயும் அடையாளம் காணப்படுவர். இதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்’’ என்றார்.