சுற்றுலாவை ஊக்கப்படுத்த 6 மாதம் இலவச விசா! இலங்கை அரசு அறிவிப்பு

கொழும்பு:

லங்கையில் நடைபெற்ற ஈஸ்டர் குண்டுவெடிப்பை தொடர்ந்து, அங்கு வரும் சுற்றுலாப் பயணி கள் வருகை வெகுவாக குறைந்த நிலையில், சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் இலங்கை அரசு 6 மாத காலம் இலவச விசா வழங்க முன் வந்துள்ளது.

இலங்கைக்கு இந்திய சுற்றுலா பயணிகள் தற்போது ‘விசா’ பெற்று சென்று வருகின்றனர். அந்த நடைமுறையை மாற்றி ‘விசா’ இன்றி பயணம் செய்ய இலங்கை அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இந்தியா மற்றும் சீனா உள்பட பல்வேறு நாட்ட சுற்றுலா பயணிகள் ‘விசா’ இன்றி  இலங்கைக்கு பயணம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக இலங்கை சுற்றுலா துறை மந்திரி ஜான் அமரதுங்கா சமீபத்தில் தெரிவித்திருந்தார். மேலும், இதுகுறித்து  ஆராய பிரதமர் ரனில் விக்கிரமசிங்கே  குழு அமைத்து இருப்பதாகவும் கூறியிருந்தார்.

இந்த நிலையில், கிட்டத்தட்ட 50 நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் இலங்கை வர இலவச விசா வழங்கப்படும் என்றும் அறிவித்து உள்ளது.

கடந்த ஏப்ரல் 21 ம் தேதி இஸ்லாமிய பயங்கரவாதிகளால்,  இலங்கையில் உள்ள தேவாலயங்கள் மற்றும் சொகுசு ஹோட்டல்களில் குண்டுவீச்சு நடத்தியதில் 42 வெளிநாட்டினர் உட்பட 250 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதைத்தொடர்ந்து இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை வெகுவாக 70 சதவிகிதம் அளவுக்கு குறைந்தது. இதையடுத்து,  மீண்டும் சுற்றுலாப் பயணிகளை  ஈர்க்கும் வகையில் இலவச விசா வசதிகளை ஏற்படுத்தி உள்ளது.

இதன் காரணமாக இந்தியா, சீனா, தாய்லாந்து, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, தென் கொரியா, கனடா, சிங்கப்பூர், நியூசிலாந்து, மலேசியா, சுவிட்சர்லாந்து, கம்போடியா, டென்மார்க், சுவீடன், நோர்வே, பின்லாந்து, ஐஸ்லாந்து மற்றும் ரஷ்யா உள்பட 48 நாடுகளுக்கு விசா இல்லாமல் இலங்கைக்கு சுற்றுலா வரலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த சலுகை 6 மாதங்கள் நீடிக்கும்,  ஆறு மாதங்களுக்குப் பிறகு விசாக்களின் வருவாய் இழப்பை அரசாங்கம் மதிப்பிடும் என்றும்  அதன்பிறகு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்நாட்டு சுற்றுலா மேம்பாட்டு அமைச்சகத்தின் அதிகாரி தெரிவித்துள்ளார்.

மேலும்,  இந்த ஆண்டின் முதல் பாதியில் சுற்றுலாப் பயணிகளின் போக்குவரத்து 13.4 சதவீதம் குறைந்துள்ளது என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார்.