இலங்கையில் நிலவும் உச்சக்கட்ட பதற்றம் – தற்காலிகமாக மூடப்பட்ட அமெரிக்க தூதரகம்!

இலங்கையில் பிரதமர் பதவியை ஒட்டி நடைபெறும் போராட்டத்தில் உச்சக்கட்ட பதற்றநிலை நிலவுகிறது. வன்முறை உள்ளிட்ட அசம்பாவிதங்களை தவிர்க்கும் விதமாக பிரதமர் மாளிகையை சுற்றி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

Embassy

இலங்கை அதிபர் சிறிசேனாவிற்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவிற்கும் இடையே நிலவி வந்த பனிப்போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இதனால் கடந்த வாரம் பிரதமரை அதிரடியாக பதவி நீக்கம் செய்து, புதிய பிரதமராக ராஜபக்சேவை அதிபர் சிறிசேனா நியமித்தார்.

ஆனால் ரணிலே பிரதமராக நீடிப்பார் என்று இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூர்யா அறிவித்தார். இதையடுத்து தனது பெரும்பான்மையை நிரூபிக்க நாடாளுமன்றத்தை கூட்டவும் ரணில் விக்ரமசிங்கே வலியுறுத்தி இருந்தார்.

இருப்பினும் 16ம் தேதி வரை நாடாளுமன்றத்தை முடக்கி அதிபர் சிறிசேனா உத்தரவிட்டார். இதற்கு சபாநாயகர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதேபோல் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்த சூழலில் கொழும்பு நகரின் பல்வேறு இடங்களில் அதிபர் சிறிசேனாவிற்கு எதிராக ரணில் விக்ரமசிங்கே ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பிரதமர் மாளிகையை சுற்றி ஏராளமான ஆர்ப்பாட்டக்காரர்கள் சூழ்ந்ததால், அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொழும்பு நகர் முழுவதும் உச்சக்கட்ட பதற்றநிலை நிலவுகிறது. அதன் காரணமாக அங்குள்ள அமெரிக்க தூதரகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

You may have missed