சினிமாவில் நடிக்க கோவை மருத்துவமனையில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்த இலங்கை தாதா: சிபிசிஐடி விசாரணையில் அம்பலம்

கோவை: சினிமாவில் நடிக்க இலங்கை கடத்தல் மன்னன் அங்கொட லொக்கா கோவை மருத்துவமனையில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்தது சிபிசிஐடி விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இலங்கையைச் சேர்ந்த போதைப் பொருள் கடத்தல் மன்னன் அங்கொட லொக்கா என்ற லசந்த பெரேரா. கோவையில் தமது காதலியால் கொலை செய்யப்பட்டார். பின்னர் அவரது உடல் மதுரையில் எரிக்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக, லொக்காவின் காதலி அமானி தாஞ்சி, மதுரை வழக்கறிஞர் சிவகாமி சுந்தரி, திருப்பூரைச் சேர்ந்த தியானேஸ்வரன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதில் முக்கியமாக கடத்தல் மன்னன் லொக்கா சினிமாவில் நடிக்க ஜனவரியில் கோவையில் உள்ள மருத்துவமனையில், பிளாஸ்டிக் சர்ஜரி செய்து மூக்கின் அமைப்பை மாற்றியுள்ளார். இந்த அறுவை சிகிச்சையை, அவர் பிரபல மருத்துவமனை ஒன்றில் செய்துள்ளார் என்பதையும் சிபிசிஐடி போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இதையடுத்து, வழக்கின் விசாரணை விறுவிறுப்படைந்துள்ளது.