கொழும்பு,

ல்லை தாண்டி மீன் பிடிப்பதாக கூறி அடிக்கடி தமிழக மீனவர்களை கைது செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளது இலங்கை அரசு.

பின்னர் இதுகுறித்து தமிழக முதல்வர் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதுவதும், பின்னர் மத்திய அரசு இலங்கை அரசுக்கு வேண்டுகோள் விடுப்பதும், அதைத்தொடர்ந்து தமிழக மீனவர்கள் ஒருசிலரை விடுவிப்பதும் வாடிக்கையாக நடந்து வருகிறது.

இலங்கை கடற்படையினரால்,  ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் மாவட்டங்களை சேர்ந்த 160 மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, இலங்கை அரசு கைது செய்து வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் சிறையில் அடைத்து வைத்துள்ளது.

இவர்களில்  20 பேரை நல்லெண்ண அடிப்படையில் நேற்று விடுதலை செய்து காரைக்கால் துறைமுகத்துக்கு அனுப்பி வைத்தனர்.

அதைத்தொடர்ந்து  இன்று 2வது  கட்டமாக வவுனியா சிறையில் உள்ள 52 மீனவர்களை விடுதலை செய்துள்ளது. இவர்கள் இரண்டு நாளில் தமிழகம் வந்தடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாளை யாழ்ப்பாணம் சிறையில் உள்ள மேலும்  17 மீனவர்களை  விடுதலை செய்ய உள்ளதாகவும் இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

அதே போல மீதமுள்ள 71 மீனவர்களும் வரும் விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.