கொழும்பு,

பிரபல இலங்கை கிரிக்கெட் வீரரான சத் ஜெயசூர்யா தற்போது நடக்க முடியாத நிலையில் ஊன்று கோல் உதவியுடன் நடமாடி வருகிறார். இது கிரிக்கெட் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணியின் மிகப்பெரிய பேட்ஸ்மேனான சனத் ஜயசூரிய உடல்நலத்தில் அக்கறை கொள்ளாததால், தற்போது மூட்டு தேய்ந்து நடக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

ஒரு காலத்தில் இலங்கை அணியின் தொடக்க வீரராக களமிறங்கி தன்னிச்சையாக போராடி பல வெற்றிகளைத் தேடித்தந்துள்ளார்.

கிரிக்கெட் உலக வரலாற்றில்  22 வருடங்கள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் ஆடியவர்கள் ஜெயசூர்யாவும்- சச்சின் மட்டுமே. பன்முக ஆட்டக்காரராக வலம் வந்தவர்.

இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சச்சின் தலைமை அணியிலான மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆடி  தன்னுடைய அதிரடி காட்டி, இந்திய ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.

ஒரு நாள் கிரிக்கெட்டில் 48 பந்துகளில் அதிவேக சதம் அடித்த சாதனையாளராக பார்க்கப்பட்ட காலத்தில் அவரது அதிரடியால் பல பத்து வீச்சாளர்கள் நிலைகுலைந்து போன வரலாறு உண்டு

இலங்கை அணிக்காக 110 டெஸ்ட், 445 ஒருநாள் போட்டிகள் மற்றும் 31 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ஜெயசூர்யா, டெஸ்ட் போட்டிகளில் 14 சதங்கள், 31 அரைசதங்களுடன் 6,973 ரன்களை குவித்துள்ளார். அதில், இந்திய அணிக்கெதிராகக் கொழும்புவில் குவித்த 340 ரன்கள் அவரது அதிக பட்ச ஸ்கோர் ஆகும்

ஓய்வுக்குப் பின்னர் இலங்கை முன்னாள் அதிபர்  ராஜபக்சே குடும்பத்தினருடன் நெருக்கம் காட்டியதால் ஜெயசூர்யாவுக்கு இலங்கைக் கிரிக்கெட் வாரியத் தேர்வுக்குழுத் தலைவர் பதவி வழங்கப்பட்டது. இது சர்ச்சையை ஏற்படுத்தியது. தமிழர்களிடமும் அவர்மீதான மரியாதை குறைந்தது.

இந்நிலையில், உடல்நலமில்லாமல் பாதிக்கப்பட்ட ஜெயசூர்யா தற்போது வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். அவரது கால் மூட்டு பகுதி தேய்ந்து காயம் ஏற்பட்டதால் அவரால்  நடக்க இயலாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

இதன் காரணமாக  அவர் மாற்று திறனாளிகள் பயன்படுத்தும் இரட்டை ஊன்றுகோல் உதவியால்  நடந்து வருகிறார். அவரது தற்போதைய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி கிரிக்கெட் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

விரைவில் சிகிச்சைக்காக ஜெயசூர்யா ஆஸ்திரேலியா செல்வார் என்றும் கூறப்படுகிறது.