இலங்கை நாடாளுமன்றத்துக்கு ஜனவரி 5ம் தேதி தேர்தல்: அதிபர் சிறிசேனா அறிவிப்பு

கொழும்பு:

லங்கை நடைபெற்று வந்த உள்நாட்டு குழப்பத்தை தொடர்ந்து, இலங்கை  நாடாளுமன்றத்தை நேற்று இரவு கலைத்து உத்தரவிட்டுள்ளார் அதிபர் சிறிசேனா.

இதைத்தொடர்ந்து இலங்கையில் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் அடுத்த ஆண்டு (2019) ஜனவரி 5ந்தேதி நடைபெறும் என்றும், புதிய நாடாளுமன்றம் ஜனவரி 17ந்தேதி பதவி ஏற்கும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இலங்கையில் அதிபருக்கும், பிரதமருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக, பிரதமர் ரணிலை பதவி நீக்கம் செய்துவிட்டு,  முன்னாள் அதிபர் ராஜபக்சேவை பிரதமராக அதிபர் சிறிசேனா நியமனம் செய்தார். இதன் காரணமாக அங்கு உச்சக்கட்ட குழப்பம் நிலவி வந்தது.

இதற்கிடையில் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ரணில் நானே பிரதமர் என்று கூறினார். அவருக்கு ஆதரவாக சபாநாயகரும் அதிபருக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார்.

இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், நேற்று இரவு இலங்கை நாடாளுமன்றத்தை கலைப்ப தாக அதிபர் சிறிசேனா அறிவித்தார். அதையடுத்து, இலங்கை நாடாளுமன்றத்திற்கு ஜனவரி 5ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நவம்பர் 19ம் தேதி முதல்  26ம் தேதி வரை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

தேர்ந்தெடுக்கப்படும் புதிய அரசின் முதல் நாடாளுமன்ற கூட்டம் ,  ஜனவரி 17ம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது குறித்து, ஐக்கிய முற்போக்கு சுதந்திரக் கூட்டணியின் எம்பி லட்சுமண் யாப்பா அபயவர்தனா கூறுகையில், அதிபர் அரசியல் சட்டத்தின் 33 (2) சி பிரிவின் தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி அதிபர் சிறிசேனா இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்து உள்ளார்.