இலங்கை அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு: சஜித், கோத்தபய இடையே கடும் போட்டி!

கொழும்பு:

லங்கை அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி சுமார் 40 சதவிகிதம் வாக்குகள் பதிவாக உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தேர்தலில் போட்டியிடும், ராஜபக்சே சகோதரர் கோத்தபயவுக்கும், சஜித் பிரேமதாசாவுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.

விடுதலைப்புலிகளை அடியோடு ஒழித்த விவகாரத்தில், கோத்தபயவுக்கு சிங்களர்கள் ஆதரவு உள்ள நிலையில், சதித்பிரேமதாசாவுக்கு தமிழர்களின் ஆதரவு உள்ளது. இதனால் அங்கு போட்டி கடுமையாக உள்ளது. இந்த நிலையில், சில இடங்களில், வன்முறை, வெடிகுண்டு வீச்சு போன்ற சம்பவங்கள் நடந்திருந்தாலும் தொடர்ந்து வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இலங்கையின் அடுத்த அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. இதில்,  ஐக்கிய தேசிய கட்சி சார்பில் போட்டியிடும் சஜித் பிரேமதாசாவுக்கும் இலங்கை பொதுஜன பெரமுனா கட்சி சார்பில் போட்டியிடும் கோத்தபய ராஜபக்சேவுக்கும் இடையே தான் கடும் போட்டி நிலவுகிறது. அத்துடன், தேசிய மக்கள் கட்சி வேட்பாளரான அனுரா குமாரா திசநாயகவும் இவர்களுக்கு ஈடுகொடுத்து சவாலாக உள்ளார். மொத்தம்  35 பேர் களத்தில் உள்ளனர்.

வாக்குப்பதிவையொட்டி, நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இந்த நிலையில், வடமேற்கு பகுதியில், ஓட்டுப்போட சென்ற முஸ்லிம்கள் பஸ் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியும் கற்கறை வீசியும் தாக்கினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இருந்தாலும் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 11.30 மணி அளவில் சுமார் 40 சதவிகிதம் வாக்குகள் பதிவாகி உள்ளதாக கூறப்படுகிறது.

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சே தனது குடும்பத்துடன் சென்று வாக்களித்தார். தங்காலையில் அமைந் துள்ள வாக்குச்சாவடியில், முன்னாள் அதிபர் ராஜபக்சே,  அவரது மனைவி ஷிரந்தி ராஜபக்சே, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சே, அவரது மனைவி மற்றும் ஏனைய இரு சகோதரர்களான ரோஹித, யோசித ராஜபக்சேக்களும் வாக்களித்தனர்

சஜித் பிரேமதாசா முன்னாள் அதிபரான மறைந்த ரணசிங்க பிரேமதாசாவின் மகன். கோத்தபய முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் சகோதரர். ராஜபக்சே அதிபராக இருந்தபோது கோத்தபய ராணுவ அமைச்சராக இருந்தார்.

தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகளில் கோத்தபயாவுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் தமிழர்களின் வாக்குகள் சஜித் பிரேமதாசவுக்கு கிடைக்கும் என்பதாலும், இஸ்லாமியர்கள் வாக்குகளும் அவருக்கு கிடைப்பது உறுதியானல், சஜித் பிரேமதாசா வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கார்ட்டூன் கேலரி