குடியுரிமை மசோதாவில் இலங்கை தமிழர்களுக்கு எதுவும் இல்லை! சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத்

டெல்லி:

த்தியஅரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவில், இந்தியாவில் அடைக்கலம் பெற்றுள்ள இலங்கைத் தமிழர்களுக்கு எதுவும் இல்லை என்று சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத் குற்றம் சாட்டினார்.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து மத துன்புறுத்தல் காரண மாக இந்தியாவுக்கு வந்த முஸ்லிம் அல்லாதவர்களுக்கு இந்திய குடியுரிமை கிடைக்க வழி செய்யும் இந்திய குடியுரிமை சட்டத் திருத்த மசோதா மக்களவையில் திங்கள்கிழமை இரவு நிறைவேறியது. இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டு விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்த மசோதாவில் இலங்கைத்தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.  அண்டை நாடுகளில் மத ரீதியிலான துன்புறுத்தலுக்கு ஆளாகி இடம் பெயர்ந்தவர்கள் என்ற பட்டியலில், இலங்கையின் சிங்கள பேரின வாதத்தால் பாதிக்கப்பட்டு வெளியேறி, இந்தியாவில் அகதிகளாக இருக்கும், இந்துக்களாக அடையாளம் காணப்படும் இலங்கைத் தமிழர்கள் ஏன் சேர்க்கப்படவில்லை என்ற கேள்வி பலராலும் முன் வைக்கப்படுகிறது.

இந்த நிலையில், குடியுரிமை மசோதாவில் இலங்கையைச் சேர்ந்த தமிழ் இந்துக்களுக்கு என்று எதுவும் இல்லை என்றும்,  குடியுரிமை மசோதா மூலம் வாக்குவங்கி அரசியலில் ஈடுபடுவது சரியானதல்ல என்றும் சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத்  கண்டனம் தெரிவித்து உள்ளார்.

சிவசேனா கட்சி மக்களவையில், பாஜகவுக்கு,  குடியுரிமை திருத்த மசோதாவுக்கு ஆதரவாக செயல்பட்ட நிலையில், மாநிலங்களவையில் எதிர்ப்பு தெரிவிப்பதாக நாடகமாடி வருவது குறிப்பிடத்தக்கது.